ஆசை

மது நீ என்ன கெஞ்சினாலும் நீ நினைக்கிறது நடக்காது.ரெண்டு வருஷத்திலே உன் தம்பிக்கு என்ன பண்றது.நீ அடுத்த வீட்டுக்கு வாழப் போறவ.அந்த செலவு வேற இருக்கு என்று கோபமாக பேசிய தன் தந்தையை கண்களில் வடியும் நீரோடு ஏறிட்டு பார்த்தாள் மதுவந்தி.
பள்ளியில் முதல் மார்க், மாவட்ட அளவில் முதலிடம், மாநிலத்தில் இரண்டாம் இடம்.ஆசிரியர்கள் தோழிகள் அனைவரும் வாழ்த்துகள் கூறிய போது கிடைத்த மகிழ்ச்சி மாயமாக மறைந்தது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் வாங்க அப்பாவிடம் பணம் கேட்ட போதுதான் அவருடைய கோபத்தை பார்த்தாள்.பள்ளியின் தலைமையாசிரியர் கல்விக்கடனுக்கு வங்கியில் தனக்கு தெரிந்தவர் மூலம் சொல்லி உதவி செய்வதாக கூறிய போது குடும்ப சூழ்நிலைக்கு கடன் சரிவராது என்று கூறி நிராகரித்த அவள் அப்பாவிடம் இனி எப்படி பேசுவது என்று வாய்மூடி மௌனியானார் தலைமையாசிரியை.
புகழ் பெற்ற கலை அறிவியல் கல்லூரியில்  இளங்கலை ஆங்கில இலக்கியம் முதலாண்டு மாணவி மதுவந்தி.வகுப்பறையில் பேராசிரியர் நுழைந்ததும் மாணவர்கள் ஓ…என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர்.அறிமுக படலம் நடந்தது.ஒவ்வொருவரும் அவரவர்களுடைய பேரையும் பள்ளியின் பெயரையும் கூறி சுய அறிமுகம் செய்து கொண்டனர்.” என் பெயர் மதுவந்தி என் பள்ளியின் பெயர் பூ.சா.கோ. கன்யா குருகுலம் என்று கூறி அமர்ந்தேன். ” நீ மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி தானே.அறிவியலை முதன்மை பாடமாக எடுத்து படித்துவிட்டு ஏன் ஆங்கில இலக்கியம் மதுவந்தி? என்று பேராசிரியர் வினவியதும் அது ..அது ..வந்து..சார்..” பரவாயில்லை உட்கார்ந்து கொள்ளம்மா என்று பேராசிரியர் கூறியதும் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.
நாட்கள் ஓடியது.வாரங்கள் மாதங்கள் கடந்து ஒரு வருடம் பருவத்தேர்வுகள் முடிந்து மீண்டும் கல்லூரி திறந்தாயிற்று.நல்ல மதிப்பெண்கள் வகுப்பில் வழக்கம் போல் முதலிடம் .மது இப்பொழுதெல்லாம் வீட்டில் யாரிடமும் எதுவும் தனக்கு வேண்டும் என்று உணவாகட்டும் உடையாகட்டும் வேறு எதுவாக இருந்தாலும் கேட்பதில்லை.பகுதிநேர வேலையாக பக்கத்திலிருந்த கடைகளுக்கு கணக்கு எழுதி கொடுத்து தன் கல்லூரி படிப்பிற்கும் புத்தகங்களுக்கும்  ஆகும் பணத்தை தானே சம்பாதித்து சமாளித்துக் கொண்டாள்.
கல்லூரியில் அனைத்து பிரிவுகளிலும் உயர்ந்த மதிப்பெண் பெற்றதால் உதவித் தொகையும் கிடைத்தது.அதை அப்படியே அப்பாவிடம் கொடுத்தாள் மது. “மதுக்குட்டி சூப்பர்டா என்று தந்தை பாராட்டியதை தலைகுனிந்து எந்தவிதமான உணர்வுமின்றி ஏற்றாள்.” இந்தப் பொண்ணு சாப்பிடறதே இல்லை.உடம்பு என்னத்துக்காகும் என்ற  அம்மாவை நான் நிறைய சாப்பிட்டேன் மா.நீங்க கவலைப்படாதிங்க மா என்று மெல்லிய குரலில் கூறி விட்டு அறைக்குள் சென்றாள் .
கேசவா வாழ்த்துகள் டா.நல்லா யோசிச்சு தெரிஞ்ச பதிலை முதல்லே எழுது.தெளிவா எழுதுடா என்று தம்பிக்கு +2 தேர்வு முதல் பரீட்சை ஆரம்பித்த அன்று வாழ்த்தினாள்.சரிக்கா என்று கூறிவிட்டு தன் தந்தையின் வண்டியில் அமர்ந்து கையாட்டி விட்டு கிளம்பிச் சென்றான்.
வருகைபதிவேட்டிலே இவ்வளவு நாள் கல்லூரிக்கு வந்தால் தான் தேர்வு எழுத நிர்வாகம் அனுமதிக்கும்.உங்க பையன் கல்லூரிக்கு வந்தே ஒரு மாசமாச்சு.இன்டேர்னல்ஸ் எதுவும் எழுதலை.என்ன செய்யலாம் சார்.உங்களுக்கு நிறைய முறை எச்சரிக்கை கடிதம் வீட்டுக்கு அனுப்பினோம்.உங்ககிட்டே கையெழுத்து வாங்கிட்டு உங்களை கூட்டிட்டு வரச்சொன்னோம். நீங்க கையெழுத்து போட்டு கொடுத்தருக்கிங்க.உங்களுக்கு ஹார்ட் அட்டாக் மருத்துவமனையில் இருக்கிறிங்கன்னு உங்க மகன் சொன்னார்.இதையெல்லாம் கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கல்லூரி முதல்வரை கெஞ்சி கை தொழுதார்.சரி உடனே இருபதாயிரம் ஃபைன் கட்டிடுங்க.ஹால் டிக்கெட் கொடுக்கச் சொல்றேன் என்றார் கல்லூரி முதல்வர்.
இன்னும் ஒரு மணி நேரம் டைம் குடுங்க சார்.கொண்டு வந்து கட்டிடறேன் என்று வீட்டுக்குச் சென்று அம்மாவின் தாலிச்சங்கிலியை வாங்கிச் சென்றார்.வீட்டுக்கு வந்ததும் “டேய் கேசவா இங்கே வா ன்னு சத்தம் போட்டதும் அம்மா பாட்டி ரெண்டு பேரும் விட்றுப்பா ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டான் என்ற தடுத்த தனது அம்மாவை முறைத்தார் அப்பா.
ஏன்டா காலேஜ் போகலை.போகாம எங்கே ஊர்சுத்தின என்று அவனை கன்னத்தில் அறைந்ததும் அம்மா குறுக்கே விழுந்து அப்பாவை தடுக்க நான் அறையிலிருந்து வேகமாக வந்து கேசவனின் கையை பிடித்து இழுத்து அவனை அறைக்குள் தள்ள முயற்சி செய்தேன்.” விடுக்கா நான் எவ்வளவு தடவை கெஞ்சினேன் எனக்கு கணக்கு வராது என்னாலே என்ஜினியரிங் படிக்க முடியாது ஆர்ட்ஸ் காலேஜ் சேர்த்தி விடுங்கன்னு கெஞ்சினேன்.நீங்க கேட்கவே இல்லை.அக்கா படிக்கிறேன்னு சொன்னப்ப முடியாதுன்னு ஆர்ட்ஸ் காலேஜ்லே சேர்த்தினிங்க.உங்க இஷ்டத்துக்கு படிக்க முடியாதுப்பா.எங்க விருப்பமே இல்லாமே கட்டாயபடுத்தி நீங்க என்ன சாதிக்க விரும்பறிங்க. படிக்க வைக்கிறதுலே பொண்ணுக்கு பையனுக்கும் ஏன் இந்த வேறுபாடு காமிக்கிறிங்க.இப்பகூட அவசர அவசரமா அம்மாவோட தாலிச்சங்கிலிய அடமானம் வச்சு பணம் கட்டத்தான் ஓடுனிங்க.ஏன்டா கேசவா பரீட்சை எழுதறியா இல்லையா உனக்கு என்ன கஷ்டம்னு என்னை ஒரு வார்த்தை கேட்டிங்களா? 
என்னாலே நாலு வருஷம் உங்க கட்டாய விருப்பத்திற்காக படிக்க முடியாதுப்பா.நான் அக்காவோட காலேஜ்லே இளங்கலை வரலாறு போய் சேர்ந்து படிக்கப் போறேன்.எனக்கு அதான் பிடிச்சது என்று பேசிய தன் மகனை பார்த்து தன் தவறை உணர்ந்தார் அந்த அப்பா.
கட்டாயபடுத்தி செய்ய வைக்கும் செயல் பெரும்பாலும் நன்மை செய்யாது.ஆதலின் நம் குழந்தைகளின் விருப்பத்தையும் மதிக்கப் பழகுவோம் பெற்றோர்களே.


கோமகள் குமுதா.

Advertisement
%d bloggers like this: