
குறுந்தொகை
கபிலர் யாரும் இல்லைத் தானே கள்வன்,தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?தினைத்தாள் அன்ன சிறு பசுங்காலஒழுகு நீர் ஆரல் பார்க்கும்குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே. 5
குறுந்தொகை – 25 கபிலரின் கவிதைக்கேற்ப என் கதைக்கருவை அமைத்திருக்கிறேன்.
குருகும் குழலியும்.
ஓடைநீரில் ஆரல் மீனைத்தேடும் வெண்கொக்கேஎன்னோடு அவன் கூடிப் பிரிந்து சென்றதை நீ மட்டும் தான் அறிவாய்மன்னவனைப் பிரிந்ததால் மாந்தளிர்மேனி நிறம்மாறி பீர்க்கம்பூ நிறமாச்சுதேபசலை நோய் பற்றியதேபறந்து சென்று அவனிடம் பகர்ந்திடுஎன்னருமை வெண்கொக்கே.
குழலி நான் உன்கிட்டே எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புரியாதுடி. நீ அவனோட தனியா கொச்சின் போனது முதல் தப்பு. அப்படியே போனாலும் பரவாயில்லை தனியா படகுவீட்டில் தங்குனது அடுத்த தப்பு. அப்போஉங்க கூட அங்கே யாரும் இல்லை. அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அவன் திருச்சிக்கு கிளம்பி போய் இன்னிக்கு பத்து நாளாச்சு. மொபைல் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான். அவங்க வீட்டு விலாசம் தெரியலை. அவன் புதுசா வேலைக்கு சேர்ந்த கம்பெனி பேர் தெரியலை.
இங்கே அவனுக்கு யாரும் நண்பர்கள் இல்லை. இப்ப என்ன பண்றதுன்னு எனக்கு ஒன்னும் தெரியலை. என்னடி குழலி நான் பாட்டுக்கு பைத்தியம் மாதிரி பேசிகிட்டே இருக்கேன் நீ இப்படி நிலத்துக்குள்ளே தலைய மறச்சி குனிஞ்சிருக்கிற தீக்கோழி மாதிரி தலையைக் கவுத்திகிட்டு உட்கார்ந்திருக்கே. ஏதாவது பேசுடி குழலி செல்லம் என்று அவள் தலையைத் தடவி மெல்ல குழலியின் முகத்தை நிமிர்த்திய கிருத்திகா தன் தோழியின் கலங்கிச் சிவந்த கண்களைப் பார்த்து தானும் கண் கலங்கினாள்.
விசும்பியபடி அருகில் அமர்ந்த கிருத்திகாவின் தோளில் முகம் புதைத்து விம்மினாள் குழலி.ஏய் அழுகையை நிறுத்து. அழுதா என்னாலே எதுவும் யோசிக்க முடியலை என்றாள் கண்டிக்கும் குரலில் கிருத்தி என்ற கிருத்திகா. கிருத்தி அவர் ரொம்ப நல்லவர்டி. அவங்க அம்மா தங்கையைத் தவிர அவருக்கு வேற உறவுகள் இல்லடி. எங்கிட்டே தன் தங்கையோட கல்யாணத்தை முடிச்சதும் அவங்க அம்மாகிட்டே என்னை கூட்டிட்டு போய் எங்க காதலை சொல்லி உடனே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு பலமுறை என் கையில் அடித்து சத்தியம் செய்திருக்காருடி.
எங்கிட்டே சொல்லிட்டுதான் ஊருக்கு கிளம்பி போனார். ஏன் பேசலைன்னு தெரியலை கிருத்தி என்று விக்கி விக்கி அழுதபடி பேசிய தன் தோழியை அணைத்துக் கொண்டு சரி விடுடி. வா வெளியே போய் டீ குடிக்கலாம் என்று அவளை எழுப்பி தானும் எழுந்து தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அந்த வேலை பார்க்கும் பெண்கள் தங்கி இருக்கும் விடுதியின் ஒரே அறையில் கடந்த இரண்டு வருடங்களாக தங்கி இருக்கும் தோழிகள் இருவரும் தங்கள் அறையைவிட்டு கிளம்பினர். தன் முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு கண்ணாடியில் அழுது வடிந்த தன் முகத்தை தனக்கே பார்க்கப் பிடிக்காமல் மேசையிலிருந்த அலைபேசியை எடுத்துக் கொண்டு தோழியுடன் கிளம்பினாள் பூங்குழலி என்ற குழலி.
தேநீர் வழக்கம் போல் சுவையாக இருந்தது.
ஆனால் அதை ரசித்து ருசிக்கும் மனநிலை தான் தோழிகள் இருவருக்கும் இல்லை.என்னம்மா உடம்பு சரியில்லையா முகமெல்லாம் வாடி கிடக்குது என்று அந்த தேநீர்க்கடை முதலாளி தொழிலாளி எல்லாமும் ஒருவனாக உதவிக்கு தன் மனைவியை மட்டும் கல்லாவில் அமர்த்தியிருந்த முருகேசன் பெண்கள் இருவரையும் பார்த்து அன்பாக கனிவுடன் கேட்டான்.அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே. கொஞ்சம் குழலிக்கு சளி அதான் அப்படி இருக்கா என்று குழலி ஏதும் பேசாமல் அமர்ந்திருந்ததால் கிருத்தி தானே தன் தோழிக்காக பதில் கூறி சமாளித்தாள். சரிம்மா நான் வேணும்னா சுக்கு கஷாயம் போட்டு கொஞ்ச நேரம் கழிச்சு என் பொண்டாட்டி கிட்ட உங்க ரூமுக்கு கொடுத்தனுப்பறேன்மா என்ற முருகேசனின் அன்பைக் கண்டு மகிழ்ந்தபடி இல்லேண்ணா நாங்க பார்த்தசாரதி கோயிலுக்கு போயிட்டு வர கொஞ்ச நேரமாகும். நாளைக்கு நானே இங்கே வந்து குடிச்சுக்கிறேன் என்று மெதுவாக பேசிய குழலியைப் பார்த்து சரிம்மா கவனமாக போயிட்டு சீக்கிரம் வந்திடுங்க என்று அவர்கள் காசு கொடுக்க கல்லாவை நோக்கி கிளம்பியதும் கூறி மற்ற வாடிக்கையாளர்களை கவனிக்க நகர்ந்தான் முருகேசன்.
என்னடி கோயிலுக்கு போலாமா என்று தன்னிடம் கேட்ட கிருத்தியிடம் இல்ல கிருத்தி நாம பீச்சுக்கு போலாண்டி என்றாள் குழலி. அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவைப் பார்த்ததும் ஓகே போகலாமே ஆட்டோ என்று தன்னருகில் வந்த ஆட்டோவை நிறுத்தி தோழியை அழைத்துக் கொண்டு சற்று மனநிம்மதியுடன் கிளம்பினாள் கிருத்திகா.
கடற்கரையில் காலை நனைத்து சிறிது நேரம் நின்றிருந்த தோழிகள் இருவரும் ஒருவரோடு ஒருவர் கைகளை கோர்த்துக் கொண்டு கரையேறி சற்றே மேடான மக்கள் குறைவாக இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டனர். பூ வாங்கும்மா பூ நல்ல ஜாதிப்பூ. நெருக்கமா கட்னது கண்ணு வாங்கிக்கோங்க ம்மா என்று பூக்காரி பூப்பந்தை குழலியின் முகத்தருகே நீட்டினாள். ஜாதிமல்லிகையை பார்த்ததும் குழலியின் இதயப்பறவை தன் காதலன் குமரனை நினைத்து பறந்தது. அந்தப் பூவை ஜாதி மல்லி என்று கூறுவது குமரனுக்கு பிடிக்காது. பிச்சிப்பூ என்று தான் கூறுவான். பூ கூட ஜாதிப்பூ என்று கூறும் மனிதர்களை அறவே வெறுத்தான். திருமணத்திற்க்கு பிறகு தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நாங்கள் எந்த ஜாதி மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று சான்றிதழ் வாங்கப் போவதாக கூறுவான்.
அதை எண்ணியதும் குழலியின் முகம் வெட்கத்தால் சிவந்தது. தன் தோழியின் கன்னம் மின்னுவதையும் புன்னகையையும் கண்டு மகிழ்ந்த கிருத்திகா என்னடி பூவைப் பார்த்து சிரிக்கிறே வெட்கப்படறே . என்னமோ இருக்கு என்று தோழியின் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்தபடி வாங்கிய பூவை தன் தலையில் பாதி வைத்துக் கொண்டு மீதி பாதி பூச்சரத்தை குழலியின் தலையில் சூட்டினாள் கிருத்திகா .
கிருத்தி இந்த பூவோட பேரு என்னா சொல்லு பார்க்கலாம் என்று தன்னிடம் சிறு குழந்தை போல் வினவிய குழலியைப் பார்த்து இதென்னடி அதிசயம் அதான் அந்த பூக்காரம்மாவே சொன்னாங்களே ஜாதிமல்லின்னு என்றாள் கிருத்திகா. அதான் இல்லை. இந்த பூவோட பேரு ஜாதிமல்லின்னு சொன்னா குமரனுக்கு பிடிக்காது. பிச்சிப்பூன்னு தான் சொல்லுவார். பூவிலே கூட ஜாதிங்கிறதை அவர் விரும்ப மாட்டார். தன் குழந்தைகளுக்கு கூட எந்த ஜாதியும் மதமும் சேர்ந்தவர்கள் இல்லைன்னு சர்டிபிகேட் வாங்கனும்னு சொல்லுவார் என்ற குழலியைப் பார்த்து நல்ல மனுசனாதான் இருக்கிராரு. ஆனால் உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள தாமதிக்கிற விஷயம் தான் எனக்கு அவ்வளவாக பிடிக்கலை.
வேற என்ன சொல்ல. உனக்கு அவர் மேல் இவ்வளவு நம்பிக்கை இருக்கிறதை பார்த்தா எனக்கு சிலசமயம் வியப்பாக இருக்குடி. யாரு எவரு என்ன வேலை படிப்பு குடும்பம் வருமானம் இப்படி எதுவுமே முழுசா தெரியலை. உன் இந்த குருட்டு நம்பிக்கை தான் எனக்கு அவ்வளவாக ரசிக்கலை குழலி என்றாள் கிருத்திகா.எந்தவித தகவலும் இல்லை நாட்கள் யாருக்காகவும் காத்திராமல் ஓடிக் கொண்டிருந்தது. அன்று தோழிகள் இருவருக்கும் அலுவலக விடுமுறை . அத்துடன் இரண்டு நாட்கள் சேர்த்து லீவு எடுத்துக்கொண்டு தோழியை அழைத்துக் கொண்டு திருச்சி செல்ல ரயில் பயண சீட்டுக்களை வாங்கிக் கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தாள் கிருத்திகா. குழலி நாளைக்கு காலை ஏழு மணிக்கு இங்கிருந்து திருச்சிக்கு டிரெயின்.
சாப்பிட ஏதாவது முருகேசன் அண்ணா கிட்டே சொல்லி எடுத்துக் கொண்டு போகலாம். உனக்கு காய்ச்சல் பரவாயில்லை தானே. இரவு உணவு சீக்கிரம் சாப்பிட்டுட்டு மருந்து சாப்பிட்டு தூங்கிடு. காலையில் ஐந்து மணிக்கு எழும்ப அலாரம் வச்சிட்டேன். நம்ம டிரஸ் கிட்பேக் எல்லாம் எடுத்து வச்சாச்சு. உனக்கு மருந்து கூட பேக் பண்ணியாச்சு. வேற எதாவது எடுத்து வைக்கனுமாடி என்ற கிருத்திகாவைப் பார்த்து தயங்கியபடி கிருத்தி நாம திருச்சிக்கு போய் அவரை விலாசம் தெரியாம எங்கே தேடறது ? அவசியம் நாம் திருச்சி போகனுமாடி என்று தன்னிடம் கேட்ட குழலி நான் சொல்றதைக் கேளு. கட்டாயம் நாம் நாளைக்கு திருச்சிக்கு போறோம். முடிஞ்ச வரை ஊரை சுற்றி முக்கியமான இடங்களில் தேடுவோம். கண்டு பிடிக்க முடியலையா திருச்சி ஸ்ரீரங்கநாதரை தரிசனம் பண்ணிட்டு வரலாம்.
ஆனா இப்படி எந்த முயற்சியும் செய்யாம குமரன்கிட்டே இருந்து எந்த தகவலும் கிடைக்காமல் நாம இங்கிருக்கிறது எனக்கு முட்டாள்தனம்னு தோணுது என்றாள் கிருத்திகா. அவள் சொல்வது அனைத்தும் ஏற்க தக்கது. ஆனால் இந்த குமரன் ஏன் தன்னை அலைபேசியில் இது வரை அழைக்கவில்லை. தான் அழைத்தாலும் அலைபேசி முடக்கப்பட்டிருக்கும் தகவலை தான் குறைபட்சம் ஆயிரம் முறையாவது கூறியது. தற்போது தன் நிலை என்ன? குமரனும் தானும் பழகியது யார் அறிவார்? அன்று கொச்சியில் அந்த படகுவீட்டில் நடந்ததைக் கூட படகு பக்கத்தில் அமர்ந்து தன் இரைக்காக காத்திருந்த வெண்கொக்கு தான் அறியும். வேறு யாரும் தங்களைப் பார்த்த சாட்சி இல்லை . அந்த ஆரல் மீனைத் தேடிய கொக்கு ஒன்றே அறியும் என் குமரன் என்னோடு இருந்தான் என்று . இப்படி தான் படித்த குறுந்தொகையில் கபிலர் பாடிய சங்ககால தலைவியைப் போல தன்னைத் திருமணம் செய்து கொள்ள தாமதித்து இயற்கையை சாட்சியாக வைத்து தன்னைக் கூடிப் பிரிந்த குமரனை எண்ணி கண்கலங்கி செய்வதறியாது மனம் நொந்து தவித்தபடி குமரனுக்காக காத்திருந்தாள் பூங்குழலி.தன் தோழியை ஆற்றவும் தேற்றவும் வழி அறியாது தானும் கலங்கினாள் தோழி கிருத்திகா.
தாயைப் பார்க்க திருச்சி சென்ற குமரன் விபத்தில் சிக்கி அலைபேசியையும் நினைவையும் இழந்து தன் ஒரு காலையும் இழந்து தன் காதலை தாயிடம் கூறி தங்கையையும் அழைத்துக் கொண்டு இயற்கை சாட்சியாக தான் மணந்து கொண்ட பூங்குழலியைக் காண அவள் விடுதியின் வரவேற்பறையில் வந்தமர்ந்திருந்த குமரனைக் கண்டதும் குழலி தன் உயிரில் கலந்தவனைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டாள். தோழி கிருத்திகாவோ குமரனைக் கண்டதும் தன் தோழியின் மீது அவன் கொண்ட உண்மையான காதலைக்கண்டு வியந்து பேச வார்த்தைகளை இல்லாமல் மகிழ்ச்சி பொங்க பார்த்தபடியே சிலை போல் நின்றாள்.
-ஆக்கம் கோமகள் குமுதா
விதி வலியது தான்.
இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் காதலின் புனிதம் மேலோங்கும்.
சிறப்பான கதை நகர்த்தல் சகோ.
பாராட்டுகளும், வாழ்த்துகளும்.!🌷
LikeLiked by 1 person
தங்கள் அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Kumar veluswamy சகோதரர்.🙏🙏
LikeLike
அருமை சகோதரி. நல்ல இலக்கிய தரமுள்ள சிறு கதை. வாழ்த்துக்கள். 💐💐🌺🌹👌👌Jayaprakash Nataraj.
LikeLiked by 1 person
அது ஒரு போட்டிக்கு எழுதின சிறுகதைங்க சகோதரர். அன்பும் நன்றியும்.🙏
LikeLike
அன்பும் நன்றியும் சகோதரர்.🙏
LikeLike