சிபுவின் காதல்

இன்று நான் ஒரு கதை சொல்லப் போகிறேன்.

ஓங்கி வளர்ந்த பெரும் மரங்கள் நிறைந்த ஒரு காடு.அங்கே பரந்து விரிந்த ஏராளமான விழுதுகள் கொண்ட ஒரு ஆலமரம். ஆலமரத்தினடியில் அந்த அற்புத வனத்தில் அழகான தன் சிறிய வீட்டின் வெளியில் அமர்ந்திருந்தாள் அக்கு.

கடந்து வந்த வாழ்க்கை பாதையை எண்ணி நேர்ந்த இடர்பாடுகள் பட்ட துன்பங்கள் அனைத்தும் அவள் கண்முன் காட்சிகளாக ஓடியது.இவ்வளவு தூரம் வாழ்க்கை வண்டியை செலுத்த காரணமானவன் இந்த வலிமையின் ரகசியம் அவன் தான்.

என் பிறந்தவீடு மிகவும் அழகானது.அம்மா
இரண்டு தம்பிகள். அப்பாவின் அருமை செல்லம் நான். அழகான கூடு என் குடும்பம்.

எங்கள் வீடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் இருந்ததால் எப்பொழுதும் பாம் பாம் என்று வாகனங்களின் இசை இசைத்தபடியே இருக்கும். அதிகாலையில் இரண்டு மணியிலிருந்து நான்கு வரை நிசப்த வேளை.

வீட்டைச்சுற்றி இப்பொழுது இருப்பது போல் பசுமை போர்த்திய மரங்கள் இல்லை. ஆனால் அழகான சலசலவென்று இலைகளால் இசைக்கும் கோயில் அரசமரமும் சிவப்பு பூக்களை நித்தமும் அள்ளி என் வீட்டின் முன் வீசும் வாதநாராயண மரமும் ஓங்கி உயர்ந்த உய் உய் என்று ஓயாது விசிலடித்தபடி காற்றிலாடும் சவுக்கு மரங்களும் எனக்கு மிகவும் பிடித்தமானது.

எங்களை மட்டும் தனியாக வீட்டில் விட்டுச் செல்லும் போது நானும் தம்பிகளும் விளையாடி மகிழும் கோயில் அரசமரத்தடி பிள்ளையாருக்கு பூசாரி பூசைகள் செய்வார். பூசை முடிந்ததும் எங்களுக்கு பிரசாதம் கிடைக்கும்.

என் சிறிய சகோதரன் எப்பொழுதும் என்னிடமிருப்பதை தட்டிப் பறிப்பான்.நான் பசியோடு அழும்போது வேறு ஏதாவது திண்பண்டம் எனக்கு தின்பதற்கு
என் அம்மா கொடுத்து சமாதானம் செய்வார். அதையெல்லாம் இன்று நினைத்தால் சிரிப்பு வருகிறது.

அப்படித்தான் ஒருநாள் நாங்களிருவரும் சண்டைமுடிந்து வீட்டிற்கு மேற்கு பக்கமிருந்த சவுக்கு மரத்தில் ஊஞ்சலாடி களித்தோம்.

சிறிது தூரத்தில் மற்றொரு மரத்தில் ஊஞ்சலாடியபடி என்னையே உற்றுப் பார்த்தபடி அவன். பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக பெரிய மூக்கு கருப்பாக பயங்கரமாயிருந்தான்.இந்தப் பகுதியில் இதுவரை இவனைக் கண்டதில்லையே.யார் இவன்?

என்னை விட வயதில் சற்றுப் பெரியவனாகத் தோன்றினான். ‘அக்கா அம்மா உன்னை அழைக்கிறார்கள்.வா போகலாம்’ என்ற பெரிய தம்பியிடம் தலையாட்டியபடி போகலாம் வாடா என்று கிளம்பும் போது அவனைத் திரும்பி பார்த்தால் அதே சிரிக்கும் பாவனையில் என்னையே உற்றுப் பார்த்து சினேகமாக சிரித்தான்.
என்ன தைரியம்.கண்ணை நோண்டிடுவேன் என்று அவனை சைகையால் எச்சரித்தபடி முறைத்தேன்.

அடுத்த நாள் கனத்த மழைபெய்ததால் எல்லோரும் வீட்டுக்குள்ளே முடங்கினோம். மதியவேளை மழை நின்றது. காற்று மட்டும் கொஞ்சம் பலமாக வீசியது. நான் வழக்கம் போல் சவுக்கு மரத்தில் ஊஞ்சலாடினேன்.
எனக்கு உயரமான மெல்லிய கிளைகளை உடைய சவுக்கு மரத்தில் ஆடுவது மிகவும் பிடிக்கும்.

ஆனந்தமாக ஆடிக்கொண்டிருந்த என் அருகில் திடீரென்று அவன் தோன்றினான். பயத்தில் கொஞ்சம் பதட்டமாக ஏய் யார் நீ? இங்கு ஏன் வந்தாய்? என் அப்பாவை அழைத்தால் உன்னைத் துண்டு துண்டாக வெட்டி என்று நான் பேசப்பேச “சிபு இங்கே என்ன செய்கிறாய் வா போவோம் என்று அவன் அம்மா என்று நினைக்கிறேன் அவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்.

அவன் என்னை திரும்பி திரும்பி பார்த்தபடி செல்வதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.அவன் வருவானா ? அவனையே என் மனம் அசைபோட்டது.

‘ சிபு நீ அந்த பகுதிக்கு போகக்கூடாது என்று எத்தனை முறை கூறினேன்.நீ என் பேச்சைக் கேட்பதே இல்லை.நாளை ஏதாவது ஊர்கட்டுப்பாடு அது இது என்று பிரச்சனை வருமடா சிபு.அப்பா வுக்கு தெரிந்தால் உன்னைக் அடிக்கக் கூட செய்வார் என்று கவலையுடன் பேசிய அம்மாவை பார்த்தான் சிபு.

ஏனம்மா நான் அங்கு செல்லக்கூடாது.எனக்கு ஒன்றுமே புரியவில்லை.நாம் எல்லோரும் ஒரே இனம் தானே.அங்கே போகாதே இங்கே உட்காராதே.ஏன் இவ்வளவு கட்டுப்பாடு.போனால் என்ன ஆகும் என்று சிபு உரத்த குரலில் தன் தாயோடு விவாதித்தான்.

அவன் பேச்சு சத்தம் கேட்டு அக்கம் பக்கமிருந்த உறவினர்கள் கூடியதால் ‘ அவன் வளர்ந்து விட்டான்.தானே எல்லாம் செய்து கொள்ள வேண்டுமாம் என்று சிரித்தபடியே கூறி சமாளித்தார் சிபுவின் அம்மா.
தன் அம்மாவை கோபமாக முறைத்த சிபுவை கேலி செய்தபடி உறவினர்கள் அங்கிருந்து சென்றனர்.

‘நீங்கள் ஏனம்மா இப்படி மற்றவர்கள்அறியாதபடி ஏதோ ரகசியம் போல் மூடி மறைக்கிறிர்கள்.நான் என்ன தவறாக பேசினேன்’ என்று சிபு தன் தாயிடம் கேட்டான்.சரியாக அந்த சமயத்தில் வீட்டினுள் நுழைந்த சிபுவின் தந்தை’ உனக்கு என்ன வேண்டும் சிபு? அம்மாவிடம் என்ன கேட்கிறாய்? ‘ என்றார்.’

அவனுக்கு நம் பங்காளிகள் உள்ள பகுதிக்குச் செல்ல வேண்டும்.அங்குள்ள சவுக்கு மரங்களில் ஊஞ்சலாட வேண்டும். அங்கு போனால் என்ன செய்து விடுவார்கள் என்று என்னிடமே கேள்வி கேட்கிறான் என்றாள் சிபுவின் தாய்.

‘ என்ன அவர்கள் பகுதிக்கா!! செல்ல வேண்டும்.இங்கே இடமா இல்லை. நாளை ஊர்ப்பெரியவர்கள் முன் வாய்மூடி நான்தான் நிற்க வேண்டும் என்ற தன் தந்தையைப் பார்த்து ‘ ஒரு சவுக்கு மரத்தில் போய் நான் போய் விளையாட நீங்கள் ஊர்பெரியவர்கள் முன் அவமானப்பட வேண்டுமா? ஏன் அப்பா? இது என்ன கொடுமை என்று படபடத்த சிபுவைப் பார்த்து கனிவுடன் ‘ சிபு மகனே நீ முதலில் நம்மைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் ‘ என்றார். சொல்லுங்கள் அப்பா கேட்கிறேன் என்ற சிபுவை அன்புடன் பார்த்து ‘ சிபு கோபத்தை விடு.நாளை நீ விளையாட உன்னை ஒரு அழகான இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.நீ மீண்டும் அவர்கள் பகுதிக்கு செல்லக் கூடாது ‘ என்றார் சிபுவின் தந்தை.

ஏனப்பா இந்தப் பிரிவினை .அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தானே.ஏன் ? ‘ என்று படபடத்த சிபுவை நோக்கி அப்படியல்ல சிபு.அவர்களை இந்த மனித சமுதாயம் அங்கீகரித்திருக்கிறது உயர்ந்த சாதி என்று.ஆனால் நம்மை ஒருபோதும் அவர்கள் மதித்ததில்லை ஒத்துக் கொள்வதுமில்லை. தினமும் அவர்களுக்கு தான் உணவு மரியாதை எல்லாம் தருவார்கள். நம்மைக் கண்டாலே முகம் சுளிப்பார்கள்.இது காலகாலமாக நடப்பது.உனக்கு கோபம் வருவதால் எதுவும் மாறி விடாது. என் பேச்சைக் கேள் என்று தன் தந்தை கூறிய வார்த்தைகளை கேட்டு சிபுவுக்கு மேலும் கோபம் கூடியதே தவிர குறையவில்லை.

மனிதர்கள் அவர்களுக்குள் ஆயிரம் பிரிவுகளை வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மடிகிறார்கள். அவர்கள் தரும் மரியாதையா நம்மை பிரிக்கும் விஷயம். வேடிக்கையாக இருக்கிறது அப்பா நீங்கள் கூறியதை கேட்டு என்றான் சிபு.

அதுசரி நீ நன்றாக பேசக் கற்றுக் கொண்டாய் சிபு.உன் ஒருநாள் உணவை நீயே தேடி உண்டு பார்.அப்பொழுது தெரியும் நான் படும்பாடு என்று கோபமாக பேசிய தந்தையைப் பார்த்து ‘ அப்பா நான் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னியுங்கள்.

ஆனால் நான் சொல்வதை யோசித்துப் பாருங்கள்.மனிதர்கள் கொடுக்கும் மரியாதையால் நம் இனத்தில் ஏன் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்று நாம் பிரிந்து சண்டையிட வேண்டும்.அது மனிதர்களின் மோசமான குணமப்பா.உணவு கிடைக்காத மழைநாட்களிலும் பஞ்சகாலத்திலும் எல்லோரும் உணவைத் தேடிதான் உண்கிறோம்.இன்னும் சொல்லப் போனால் யாரிடமும் யாசகம் பெறாமல் வாழும் நாம் தான் உயர்ந்தவர்கள் என்ற சிபுவைப் பார்த்து மனதிற்குள் வியந்தபடி மிகவும் அறிவார்த்தமாக பேசுவதை பெருமையாக எண்ணியபடி ‘ சரி சிபு நீ சென்று உறங்கு.நீ எண்ணியபடி நம் இனம் ஒற்றுமையாக வாழ உன்னைப் போன்ற வருங்கால சந்ததியர் நிறைய பிறக்க இறைவன் அருள்புரிவான் என்று கூறிவிட்டு உறங்குவதற்கு சென்றார் சிபுவின் அப்பா.

இரவு முழுவதும் யோசித்தபடி அமர்ந்திருந்த சிபு அதிகாலை கிழக்கே கதிரவன் எழுமுன்னர் எழுந்து தன் அம்மாவிடம் சென்றான்.’ அம்மா இனிமேல் என் உணவை நானே தேடிக் கொள்கிறேன். நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியபடி முதன் முதலில் தன் உணவைத் தானே தேடிச் செல்லும் தன் மகனை கண்களில் நீருடன் கடவுளிடம் வேண்டிக் கொண்டு வாழ்த்தி அனுப்பினாள் சிபுவின் தாய்.

சிறிது தூரம் சென்ற சிபு ஒரு பிள்ளையார் கோயிலைக் கண்டான். BB பிரசாதம் தருவதைக் கண்டு அங்கே சென்றான் சிபு.

சிபுவின் காதல் தொடர்ச்சி் …..மூன்றாம் பாகம்.

கோயிலின் அருகே இருந்த கிணற்றின் அருகே நின்றபடி கோயிலை விட்டு பிரசாதத்துடன் வெளியேறுபவர்களை உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சிபு. காலைப் பொழுது மெல்ல மெல்ல ஒளிக்கிரணங்களால் ஒளிரத் தொடங்கியது.

பூசாரி பிரசாதப் பொங்கலை எல்லோருக்கும் கொடுத்து விட்டு கோவிலின் பலிபீட மேடையருகே கொஞ்சம் வைத்து விட்டுச் சென்றார். கிணற்றின் அருகே இருந்த சிபு சுற்றும் முற்றும் பார்த்தான். மேடையருகே சென்று அருகில் யாராவது இருந்தால் பகிர்ந்துண்ண வருமாறு வாய்விட்டு அழைத்தான். யாரும் வரவில்லை.சிபு பாதி உணவை சாப்பிட்ட பின் அருகிலிருந்த சவுக்கு மரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

காலைக்கதிரவன் வரவால் சிறிது வெளிச்சம் வந்தது. அடடா இவளா !! என்று மனதில் வியந்தபடி தன் தம்பிகளுடன் வந்த அக்குவை வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிபு. மேடையில் எப்பொழுதும் இருக்கும் உணவில் பாதி கூட இல்லாததைக் கண்டு தம்பிகளுக்கு பகிர்ந்து கொடுத்து அவர்களை வீட்டிற்கு செல்லும்படி பணித்தாள் அக்கு..அவர்கள் சென்றதும் எப்பொழுதும் வழக்கமாக தான் அமரும் சவுக்கு மரத்திற்கு சென்று அமர்ந்தபடி சுற்றும் முற்றும் பார்த்த அக்கு சிபுவைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தாள்.

அருகில் தன் இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லாததால் தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த சிபுவை நோக்கி ” ஏய் இங்கே என்ன செய்கிறாய்? இங்கிருந்து இப் போதே கிளம்பிவிடு.இல்லாவிட்டால் என் நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து உன்னை பிடித்துக் கொடுப்பேன் என்று மிரட்டிய அக்குவை பார்த்து சிரித்தபடி நான் ஏன் போக வேண்டும்.உன் உறவினர் நண்பர்களை வரச்சொல் என்னதான் நடக்கும் என்று பார்க்கிறேன் என்றான் சிபு கோபமாக.
ஐயே உனக்கு பைத்தியமா? நான் அழைத்தால் அனைவரும் வந்து உன்னோடு சண்டையிட்டு கொத்தியே கொன்றுவிடுவார்கள்.யாரும் பார்ப்பதற்கு முன் இங்கிருந்து போய்விடு என்று மிரட்டி விரட்டினாள் அக்கு.

சிபுவும் அக்குவும் இப்படி விவாதித்துக் கொண்டிருக்கும் போதே அரசமரத்தடியில் விளையாட வந்த சிறுவர்கள் அக்கு மீது சரமாரியாக கல்லெறிந்தனர்.ஒரு சிறிய கல் மிகச்சரியாக அக்குவின் இடதுபக்கச் சிறகில் துளைத்தது.அடிபட்டதும் வலி தாளாமல் வீறிட்டு கதறினாள் அக்கு.அவள் குரலைக் கேட்ட மறுநொடி அவள் பெற்றோர் எங்கிருந்தோ வேகமாக விரைந்து வந்து அக்குவை இருபுறமும் சிறகால் அணைத்து ஆற்றுப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

சிபுவைத் திரும்பி திரும்பி பார்த்தபடி ஏதும் பேசாமல் பெற்றோருடன் கிளம்பிச் சென்றாள் அக்கு.நடந்த அனைத்தையும் அறிந்த சிபு தன்னோடு பேசிக் கொண்டிருந்ததால் தான் அவள் அடிபட நேர்ந்தது என்று எண்ணியபடி இரவு முழுவதும் மனதில் கவலையுடன் உறங்காமல் கழித்து அடுத்த நாள் விடியுமுன்னரே கருக்கலில் கோயில் அரசமரத்தடிக்கு வந்து அமர்ந்து அக்குவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தான் சிபு்.

வழக்கம் போல் பூசை முடித்து பூசாரி படைத்த உணவை பார்த்ததும் கடுமையாக பசித்தாலும் சிறிதளவே உண்டுவிட்டு சவுக்குமரத்திலமர்ந்து அக்குவுக்காக காத்திருந்தான். சற்று நேரத்தில் வழக்கம் போல் தன் தம்பிகளுடன் வந்த அக்கு மேடையில் அதிக உணவிருப்பதையும் சவுக்கு மரத்திலமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சிபுவைக் கண்டு அவன் உண்ணாமல் தனக்காகவும் தம்பிகளுக்காகவும் விட்டுவைத்திருப்பதை உணர்ந்தாள்.தம்பிகளுக்கு கொடுத்து தானும் சிறிது உண்ட பின் வழக்கம் போல் தம்பிகளை அனுப்பி விட்டு தன் இடத்தில் சென்றமர்ந்தாள் அக்கு.

சிபு அவளுக்கு நேர் எதிரில் வந்து அமர்ந்து கொண்டு அக்குவைப் பார்த்து ” உனக்கு எப்படி இருக்கிறது? இன்னும் வலிக்கிறதா? பசிக்கிறதா? உணவு போதுமா? என்று இடைவெளியில்லாமல் கேள்விகள் கேட்க சிபுவை நோக்கி லேசாக புன்னகை செய்த அக்கு ” இப்படி சரமாரியாக கேள்வி கேட்டால் எப்படி பேசுவது என்று கேட்டாள்.

சிபு கடகடவென்று நகைத்தான். சரி சொல் உனக்கு வலிக்கிறதா? என்று மீண்டும் வாஞ்சையுடன் கேட்டான் சிபு. “கொஞ்சம் வலி இருக்கிறது.” நீ சாப்பிடவில்லையா? உன் அம்மா எங்கே” என்று கேட்ட அக்குவை நோக்கி “நான் பெரியவன் அல்லவா? அதனால் நானே இனி என் உணவைத் தேடிக்கொள்வேன்.வளர்ந்தபின் பெற்றோர்களை சிரமப்படுத்தக் கூடாது என்றான் சிபு.

எங்கேயாவது சிரமப்பட்டு தேடுவானேன்.நீதானே முதலில் வந்தாய் மேடைமீதிருந்த உணவை நேற்று போலவே இன்றும் உண்டிருக்கலாமே. ஏன் பசியோடிருக்கிறாய் என்று கேட்ட அக்குவைப் பார்த்து ” அது நேற்று எனக்குத் தெரியாது.நீயும் உன் தம்பிகளும் வந்து உண்ணும் போது தான் பார்த்தேன்.உங்கள் மூவருக்கும் அது போதாது.அதனால் இன்று சிறிதளவே உண்டேன்.எனக்கு போதும் என்றான் சிபு.

நானும் வளர்ந்துவிட்டேன்.இனிமேல் உன்னைப்போல நானும் என் உணவை நானே தேடிக்கொள்வேன் என்ற அக்குவின் கீச்சுக்குரலைக் கேட்டு சிரித்தபடி ” இல்லை நீ இன்னும் கொஞ்சம் வளரனும்.அதுவரை உன் தம்பிகளோடு பகிர்ந்து பசியாறு.அதுதான் நல்லது என்றான் சிபு.

உன் ….உன் பெயர் என்ன என்று தயங்கி தயங்கி கேட்ட அக்குவைப் பார்த்து ஏன் அது தெரிந்து என்ன செய்யப் போகிறாய். உன் னைச் சேர்ந்தவர்கள் வழக்கமாக எங்களை கருப்பா என்று அழைப்பது போலவே நீயும் அழைக்கலாம் என்றபடி சிரித்த சிபுவை பார்த்து ஐயே சரி கருப்பா என்று சிரித்த அக்குவை வியந்து பார்த்தான் சிபு. இந்த நீர்(காக்கை) சாதி பெண்கள் அழகுதான் என்று மனதில் எண்ணினான் சிபு.

உன் பெயர் அக்கு தானே உன் தந்தை உன்னை அழைத்த போது கேட்டேன். சரி அக்கு நீ இங்கேயே பத்திரமாக இரு. நான் இதோ விரைவாக போய் வந்து விடுவேன் என்று கூறியபடி பறந்து சென்ற சிபுவை வியந்து நோக்கினாள் அக்கு. சற்று நேரத்தில் ஒரு காய்ந்த ரொட்டித்துண்டை நீரில் நனைத்து சாப்பிடுவதற்கு இலகுவாக இருக்கும்படி செய்து சிபு கொண்டு வந்து கொடுத்ததைக் கண்ட அக்கு அவன் அன்பான மனதை பார்த்து சிபுவைத் தன் நல்ல நண்பனாக ஏற்றுக்கொண்டாள்.அன்றிலிருந்து நண்பர்கள் இருவரும் உணவைப் பகிர்ந்து உண்ணுவதும் மீந்த நேரத்தில் சவுக்கு மரத்தில் அமர்ந்து ஊஞ்சலாடி களிப்பதுமாக பொழுதை போக்கினர்.

டேய் அந்த குட்டிக்காக்கா அங்கே மறுபடியும் உட்கார்ந்திருக்குடா.கல்லால் அடிச்சு விளையாடலாம் என்று நேற்று அக்குவை அடித்த சிறுவன் உண்டிவில்லை எடுத்து அக்குவை நோக்கி குறிபார்த்தான் . மேலேயிருந்து இதைக்கண்ட சிபு சொய்ங்கென்று விமானம் தரையிறங்குவது போல வெகு வேகமாக இறங்கி அவன் தலையில் கொத்திச் சென்றது.” அம்மா அண்டங்காக்கா கொத்திடுச்சு என்று பயந்து ஓடினான். மரத்தில் நிறைய அண்டங்காக்கைகளைப் பார்த்த சிறுவர்கள் பயந்து அவனோடு சேர்ந்து ஓட்டம் பிடித்தனர்.

சிபுவையே வைத்த கண் மாறாமல் பார்த்து வியந்தது அக்கு.” என்ன அப்படி பார்க்கிற லூசு.மேலே அடர்த்தியா இலைகள் மறைவில் இடம் மாறி உட்காரு.கீழே இருந்து பார்த்தா நீ இருக்கிறது தெரியாது என்று சிபு கூறியதும் அக்கு சிபு அமரும் கிளையில் அருகில் தானும் சென்று அமர்ந்தது.

அதன் பின்னர் அவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவதும் சவுக்கு மரத்தில் ஊஞ்சலாடுவதும் உணவைக் கொண்டு வந்து பங்கிட்டு பரிமாறி உண்பதும் நண்பர்களோடு பேசிப் பொழுதைக் கழிப்பதுமாக நாட்கள் ஆனந்தமாக வேகமாக ஓடியது.இருவரும் அவரவர் நண்பர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஊர்சுற்றிப் பறந்து திரிந்தனர்.

வழக்கம் போல் ஒருநாள் மாலையில் இருவரும் எதிர் காற்றில் பறந்து சவுக்குமரத்தில் அமர்ந்து ஊஞ்சலாடி மகிழ்ந்ததை அக்குவின் உறவினன் ஒருவன் கண்டான்.அவளுடைய பெற்றோரிடம் சென்று வத்தி வைத்தான்.அக்குவின் பெற்றோர் அவளை கடுமையாக கண்டித்தனர்.

அண்டாங்காக்கை கீழ்சாதி அவர்களோடு பழகுவது மாபெரும் தவறு.குடும்ப கௌரவம் பாழாகிவிடும்.அவர்களோடு பேசக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து அவளை வீட்டுக்காவலில் வைத்தனர்.அக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் பெற்றோர் அதை காதுகொடுத்து கேட்கவில்லை. அக்குவும் பிடிவாதமாக கொடுத்த உணவை உண்ணாமல் யாரோடும் பேசாமல் அஹிம்சை வழியில் தன் எதிர்ப்பைக் காட்டினாள்.

அக்குவின் தம்பிகள் அக்காவின் நிலைமையைக் காணச் சகிக்காமல் வருந்தினர்.இந்த நிலைமைக்கு காரணமானவனை கண்டுபிடித்து சண்டையிட சவுக்கு தோப்பிற்கு சென்றனர்.அங்கே அக்குவுக்காக உணவு கொண்டு வந்து வைத்தபடி சிபு காத்திருப்பதைக் கண்டனர்.அக்குவின் தம்பிகளை கண்டதும் அக்கு எங்கே வரவில்லையா என்று கேட்ட சிபுவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தனர்.
பின்னர் தங்கள் வீட்டில் நடந்த விவரங்களைக் கூறினர்.

அமைதியாக கேட்ட சிபு சரி இந்த உணவைக் கொண்டு செல்லுங்கள்.அக்குவோடு பகிர்ந்து உண்ணுங்கள் என்றான்.சிபுவின் முகவாட்டத்தை கவனித்த அக்குவின் பெரிய தம்பி நாங்கள் அக்காவை எப்படியாவது அழைத்து வருகிறோம்.ஆனால் இங்கு வேண்டாம்.சற்றுத் தொலைவில் ஒற்றைப் பனைமரமிருக்கிறது.அங்கே காத்திருங்கள் என்றான். சிபு மெல்ல சிரித்தபடி சரி நான் அங்கே செல்கிறேன் என்று கூறி கிளம்பினான்.

அக்குவை அவர்களுடைய உறவினர்கள் சந்தேகப்படாதபடி அவளுடைய சின்னதம்பி வீட்டில் முகத்தை சாய்த்து அக்கு உறங்குவது போல அமர்ந்து கொண்டான்.பெரிய தம்பி அக்குவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
சிபு தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்து அக்குவிற்காக காத்திருந்தான். சிபுவைக் கண்ட அக்கு சற்று கண்கலங்கினாள். என்ன லூசுப்பெண்ணே அழுகையா என்று சிரித்த சிபுவை முறைத்தாள் அக்கு.

நண்பர்களே நாம் எல்லோரும் ஒன்று பட்டு ஒரு மகத்தான செயலைச் செய்வோம்.இளைஞர்கள் நாம் முதலில் ஒன்றுபடுவோம். நம் பெற்றோர்களிடம் அமைதியாக ஒற்றுமையாக ஒரே குரலில் நமக்குள் சாதிப்பிரிவினைகள் வேண்டாம் என்று கூறுவோம். எதிர்காலம் நம் கையில்.நமக்கு தகுந்தாற் போல் இந்த சமுதாயத்தை மாற்றுவோம் என்று கம்பீரமாக பேசிய சிபுவின் பேச்சைக் கேட்டு அக்கு சிபு தன் நண்பன் என்பதில் பெருமை கொண்டாள். அக்குவின் தம்பி உடனே மகிழ்ச்சியாக நானும் என் நண்பர்களை அழைத்து வருகிறேன்.எல்லோரும் ஒற்றுமையாக நம் பெற்றவர்களிடமும் பெரியவர்களிடமும் நம் எண்ணத்தை உரைப்போம் என்றான்.

மேல்சாதி நீர்காக்கைகளின் தலைவர்கள் கீழ்சாதி அண்டங்காக்கைகளின் மேல் குற்றம் சுமத்தி பஞ்சாயத்தாரிடம் முறையிட்டனர்.அண்டங்காக்கைகளை அடித்து துரத்த வேண்டும் என்று ஆக்ரோஷமாக சண்டையிட்டனர்.இரு பிரிவினரும் பேசிப்பேசி சண்டை வலுத்தது.திடீரென்று அக்குவின் சகோதரர்கள் இருவரும் தங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு சிபுவின் நண்பர்களோடு இணைந்தனர்.உயர்சாதி தலைவர்களை எதிர்த்து கோஷமிட்டனர்.பஞ்சாயத்தார் செய்வதறியாமல் திகைத்தனர். இளைஞர்களின் இந்த எழுச்சித் தீயை கண்டு பயந்தனர்.

இப்படி சண்டை ஒருபுறம் வலுக்க வானம் இருண்டு பலத்த சூறாவளிக் காற்றுடன் கண்ணைக்குருடாக்கும் மின்னல் மின்னியது. பேரிடியின் சத்தத்தால் பூமியே ஆடியது. மிக கனத்த மழை வானத்தை கிழித்துக் கொண்டு ஊழி வெள்ளமாக கொட்டியது.
பலத்த சூறாவளிக் காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.ஊர் முழுவதும் மழைநீரில் மிதந்தது.ஆற்று வெள்ளம் போல் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

விடாமல் ஐந்து நாட்களாக இரவு பகல் எந்நேரமும் பெருமழை பெய்தது.இருப்பதற்கு வீடில்லாமல் உண்பதற்கு உணவில்லாமல் எல்லா உயிர்களும் அல்லலுற்றது.

எல்லா பறவைகளும் கூட்டம் கூட்டமாக காடுகளையும் மலைகளையும் நோக்கி இடம்பெயர்ந்தன.
அக்குவின் குடும்பமும் சிபுவின் குடும்பமும் மற்றவர்களும் காடுகளுக்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டனர்.

புதிய இடமாற்றம் புதிய நண்பர்கள் புதிய சிந்தனைகள் அவர்கள் எண்ணங்களை மாற்றியது.பரந்து விரிந்த இந்த உலகம் எல்லோருக்கும் உரியது.இதை யாரும் என்னுடையது என்று உறவு கொண்டாட முடியாது.இன்று உன்னுடையது
நாளை வேறு ஒருவருடையது
மற்றொரு நாள் மற்றொருவருடையது.எதைக் கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு.

கடவுளின் படைப்பில் எல்லோரும் ஓரினம்.இந்த அழகான தத்துவத்தை புரிந்து கொண்ட நீர்காக்கைகளும் அண்டங்காக்கைகளும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறது.

மனிதர்களே உங்கள் சாதி மத சண்டைகளை விடுத்து நாமும் இந்த காகங்கள் போல் வாழ கற்றுக் கொள்வோம்.சிபுவைப் போல அக்குவைப்போல நாமும் நம் குழந்தைகளின் எண்ணங்களில் மாற்றம் வந்தால் மகிழ்வாக ஏற்றுக் கொள்வோம்.

நட்பென்பதை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம். நல்ல நண்பர்களாக பழகி ஒருவர் இல்லாவிட்டால் மற்றொருவர் இருக்க முடியாது என்ற நிலை வருமாயின் காதல் செய்வீர்.

நட்பு என்றும் போற்றுதலுக்குரியது.எதிர்காலத்தில் சிபுவும் அக்குவும் காதலிக்கலாம்.ஆனால் அவர்கள் என்றும் இணைபிரியாத நட்பூக்கள்.

கதை முடிந்தது.கத்தரிக்காயும் காய்த்தது.

%d bloggers like this: