
விஜி மஞ்சள் தடவின லக்னபத்ரிக்கையை ஒருதடவை வாசிச்சு எல்லாம் சரியா இருக்கான்னு பாரும்மா. நாலுபேர் முன்னாடி லக்னபத்ரிக்கை படிக்கும் போது தவறிருந்தா அசிங்கமாயிரும்மா என்ற மணியை மென்மையான புன்னகையுடன் பார்த்த அவன் மனைவி விஜி ஏங்க நமக்கு இதெல்லாம் ஒன்னும் வாசிக்கலை, நிச்சயதார்த்தம், லக்னப்பத்ரிக்கை இதெல்லாம் எனக்கு ஓன்னுமே தெரியதே சில சினிமாவில நாடகங்களிலே பார்த்திருக்கேன். உங்க பதட்டத்தைப் பார்த்தா எனக்கும் பயமா இருக்கு என்றவளைப் பார்த்த மணி ஆஹா நல்ல வேளை நீ சொன்னதும் தான் எனக்கு என் ஃபிரெண்டு பிரதீப் ஞாபகம் வந்திச்சு. அவனுக்கு இதைபத்தி நல்லா எல்லா விஷயமும் தெரியும். அவன் இப்ப கொஞ்ச நேரத்திலே வந்திடுவான்னு மணி சொல்லி வாயை மூடலே “என்னடா என் பெயரை ஏலம் போடுற என்ன விஷயம் என்று அறைவாசலில் நுழைந்த பிரதீப்பை பார்த்ததும் மணியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் வெளிச்சமிட்டது.'” வாடா வாடா செல்லமே இந்த லக்னப்பத்ரிக்கை, நிச்சயதார்த்தம் சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம் நல்லா தெரிஞ்ச என் ஒரே நண்பன் நீ தாண்டா. நண்பேண்டா என்று மகிழ்ச்சியாக சிரித்த தன் நண்பனின் மகிழ்ச்சி பிரதீப்பையும் தொற்றிக் கொண்டது.
அடடா வந்துட்டீங்களா பிரதீப் வாங்க அண்ணே வாங்க இந்தாங்க இந்த காபி தண்டனையை ஏத்துக்குங்க என்று சிரித்தபடி விஜி நீட்டிய காபி கப்பை வாங்கி ஒரு மிடறு குடித்ததும் “இது போல இனிமையான தண்டனை கிடைச்சா தவறு செய்றவன் திருந்தவே மாட்டான் தங்கச்சிம்மா” என்று சிரித்தான் பிரதீப்.
எல்லாம் இனிதாக நடைபெற்று முடிந்த நிச்சயதார்த்த விழாவை எண்ணி பெற்றோர் மகிழ்வாக பேசியதை கேட்டுக் கொண்டே அவர்கள் அறைக்குள் நுழைந்த சுஜி அம்மா அப்பா மணி 1.30 ஆச்சு. நேத்து ராத்திரியும் நீங்க ரெண்டு பேரும் தூங்கலை. இன்னிக்கும் நள்ளிரவு தாண்டியும் இப்படி தூங்காம உட்கார்ந்து கொட்டு கொட்டுன்னு… ஏம்பா? என்னம்மா இது? படுத்து தூங்கலாம் வாம்மா என்று செல்லமாக சிணுங்கிய படி தன்தோளில் சாய்ந்த அன்பு மகளை தன் இடது கையால் அணைத்து வலது கையால் தலையைத் தடவிய மணி இல்லடா செல்லம் இன்னும் உன் கல்யாணத்துக்கு 3 மாசம் தான் இருக்கு. மாப்பிள்ளை லீவிலே வரும் போது கல்யாணம் முடிச்சிடனும்னு அவங்க வீட்டிலே அவசரப் படுத்தினதால் ஐப்பசி மாசம் பார்த்த முகூர்த்தத்தை முன்கூட்டியே ஆவணி மாசம்னு பேசி முடிவு பண்ணிட்டோம். நமக்கு நிறைய வேலை இருக்கு, அதான்டா செல்லம் அம்மாவும் நானும் ரெண்டு பேரும் ஒண்ணா லீவு போடனும் எவ்வளவு நாள் என்னென்ன வேலை எல்லாம் லிஸ்ட் தயார் பண்றோம் கண்ணு. நீ போய் தூங்குடா. விஜி நீயும் போம்மா, காலையிலே ஆபிஸ் போகனும். நானும் போய் படுக்கிறேன் என்று மெல்ல எழுந்த தன் கணவன் மணியை நீங்க சுகர் மாத்திரை போட்டிங்களா? என்று அக்கறையோடு ஏறிட்ட தன் மனைவி விஜியை அதெல்லாம் ஐயா 1/2 மணிக்கு முன்னமே சாப்பிட்டாச்சுமா. ஓகே குட்நைட் போறேன் என்று தன் செல்ல மகளின் தலையில் முத்தமிட்டு சென்றான் மணி. தாயும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி தங்களின் படுக்கை அறைக்குச் சென்றனர்.
திங்கட்கிழமை என்றாலே விஜிக்கு பதட்டம் தொற்றிக் கொள்ளும். சமையல் வேலை முடித்து தன் மகளை அழகு நிலைய பயிற்சிக்கு உணவு கட்டிக் கொடுத்து அனுப்பிவிட்டு தனக்கும் தன் கணவனுக்கும் லஞ்ச் பேக் செய்து வைத்துவிட்டு பாத்திரம் கழுவ வரும் பாட்டிக்கு சாமான்களை சிங்க்கில் போட்டுவிட்டு குளிக்க கிளம்பினாள். விஜி அந்த பேங்க் லோன் அப்ளிகேஷன் அப்புறம் நம்ம விட்டு பத்திர ஜெராக்ஸ் எல்லாம் இந்த மஞ்சள் கவர்லே தானே இருக்கு விஜி என்று ஹாலில் சாக்ஸை போட்டபடி தன் மனைவியிடம் உரக்க கேட்டுக் கொண்டிருந்த கணவனை “ஆமாங்க எல்லாம் நான் எடுத்து வச்சிட்டேன். நீங்க டிபன் சாப்பிடுங்க நான் குளிச்சு டிரஸ் பண்ணிட்டு வந்திடுறேன். டீவிக்கு பக்கத்திலே உங்க சுகர் மாத்திரை இருக்கு சாப்பிடுங்க என்ற விஜியின் சொல்படி செய்தான் மணி.
ஐயடா என்னா வெயில்!! கொளுத்துது. சுஜிகுட்டி இன்னிக்கி கிளாஸ் எப்படி இருந்திச்சு அறையில் நுழைந்த விஜி “டேய் என்னடா ஏம்மா என்னாச்சு இப்படி படுத்திருக்கே காச்சலா என்று மகளின் நெற்றி மீது கைவைத்த விஜி ஆ…… இதென்ன இப்படி சுடுது சுஜிகுட்டி என்னடா ஆச்சு என்று பதறிய தன் அம்மாவை கண் திறந்து பார்க்கவே முடியாமல் என்னமோ தெரியலை மா…. மத்தியானம்
சாப்பிட்டதிலிருந்தே ஒரு மாதிரியா இருந்திச்சு .டீ டைம்லே வெளியே வந்து தண்ணி குடிச்சதும் ஒரு தடவை வாந்தி எடுத்தேன் மயங்கி கீழே விழுந்திட்டேன். என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு கேப் புக் பண்ணி என்னை வீட்டுக்கு அனுப்பினாங்க. நான் வந்து பெட்லே படுத்ததுதான் தெரியும். தலைவலி தாங்க முடியலைம்மா என்று திக்கித் திணறி பேசிய தன் அன்பு மகளை பார்த்து சரிடா ஒன்னும் இருக்காது. நேத்து நடந்த ஃபங்ஷன் திருஷ்டி பூரா உனக்கு பட்டிருக்கும் .சாப்பிட்டது ஒத்துக்காம வாந்தி ஆயிருக்கும் . விடுமா இந்தா இந்த லெமன் ஜீஸ் குடிச்சிட்டு நல்லா கண்ணை மூடித் தூங்கு. அம்மா உனக்கு தைலம் தடவி விட்ட சரியாகிடும் சரியாடா செல்லம் என்று மகளை வற்புறுத்தி ஒரு டம்ளர் ஜீசை குடிக்க வைத்து மடியில் சாய்த்து மெதுவாக தைலத்தை தடவி மென்மையாக பிடித்து விட்டாள் விஜி. கொஞ்ச நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்ட தன் மகளை மெதுவாக தலையணை மீது தலையை நகர்த்தி வைத்து விட்டு மெல்ல எழுந்து அறைக்கதவை சாத்தியப்படி வெளியே வந்தாள்.
கல்யாண லோன் விஷயமாக பேங்க் மேனேஜரை பார்த்துவிட்டு வருவதாகக் கூறி தன்னை வீட்டில் டிராப் செய்துவிட்டு சென்ற கணவன் மணி நேரம் இரவு எட்டை நெருங்கியும் வராததால் சற்றே கவலையுடன் இரவு உணவு தயாரிக்க சமையலறைக்குள் சென்றாள். வேகமாக சமையலறைக்குள் நுழைந்த மணி விஜிம்மா வாயத்தெற வாயத்தெறடா என்று பின்னால் வந்து தன்னை ஒரு கையால் அணைத்தபடி மறுகையில் அந்த ஜாமூனை ஊட்டி விட்ட தன் கணவனின் மகிழ்ச்சியில் தானும் பங்கேற்று ஆஹா லோன் சேங்ஷன் ஆயிடுச்சா ஐயா படு ஜாலி மூடுலே இருக்கார் போல என்று கணவனை பார்த்து கண்ணடித்தாள் அவன் அருமை மனைவி விஜி. இல்லையா பின்னே யாரோட பொண்ணு கல்யாணம். என் இளவரசிக்கு கிடைக்காத லோனா. 30 லட்சம் விஜிம்மா ஒரே வாரத்திலே அக்கவுண்டிலே போட்டிருவாங்க என் விஜி மைனாவே. ஓ உங்க இளவரசியா அப்ப நான் .. யாரு. நீ மகாராணியாச்சே என்று உல்லாசமாக தன் மனைவியை கட்டிபிடித்தபடியே ஹாலுக்குள் நுழைந்தவர்களின் காதில் அம்மா….. அம்மா….. முடியலே… மா என்று அழுத மகளின் குரல் கேட்டு இருவரும் பதட்டமாக அவளுடைய பெட்ரூமுக்கு விரைந்தனர்.
விளக்கை போட்டதும் சுஜி படுக்கையில் ஒருக்களித்து சுருண்டு படுத்தபடி தன் இரு கைகளாலும் தலையை பிடித்துக் கொண்டு கதறிய கோலத்தைக் கண்டு பெற்றோர் பதறினர். சுஜிக்குட்டி கண்ணு செல்லம் இங்க பாருடா என்னம்மா என்ற தன் தந்தையின் குரலில் அப்பா தலையே வெடிச்சிடற மாதிரிவலிக்குது பா….. என்று எழ முயன்றவள் தன்னைத் தாங்கிப் பிடித்த தந்தை மீதே வாந்தி எடுத்தாள். “விஜி கால்டாக்சி கூப்பிடு ஹாஸ்பிட்டல் போலாம் என்றான். தன் செல்ல மகளைக் கொஞ்சி தோளில் சாய்த்து வாயை துடைத்து முகத்தையும் தன் கையிலிருந்த துவாலையால் துடைத்த மணி துவண்ட தன் மகளை கைகளில் ஒரு பூச்சரத்தை தூக்குவது போல மென்மையாக தூக்கிக் கொண்டான். ஐந்து நிமிடத்தில் வெளியே வாசலில் நின்றிருந்த கால் டாக்ஸியில் கொண்டு வந்து உட்காரவைத்தான். அதற்குள் தன்னுடைய அவனுடைய ஏடிஎம் கார்டுகளையும், தண்ணீர் பாட்டிலையும் இரண்டு பூத்துவாலைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி சாவியை ஹேண்ட்பேக்கில் போட்டு மகளின் அருகில் சென்று தன் மடிமீது படுக்க வைத்துக்கொண்டாள் விஜி. முன்னால் சென்று ஓட்டுநரின் அருகில் அமர்ந்த மணி அந்த ஊரிலிருந்த பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு செல்லுமாறு கூறினான்.
எல்லா பரிசோதனைகளும் முடிந்தது. தலையை ஸ்கேன் செய்த ரிபோர்ட் மட்டும் மும்பையிலிருந்து நாளை காலை வந்துவிடும் அதுவரை பெயின் கில்லர்ஸ் தான். அந்த ரிபோர்ட் வராமல் எந்த சிகிச்சையும் ஆரம்பிக்க இயலாது என்று தலைமை மருத்துவர் கூறியதும் அந்த பெற்றோர் முகத்தில் தெரிந்த கவலையில் தன் மனது கரைய எல்லாம் நல்லதே நடக்கும் பயப்படாதிங்க மிஸ்டர் மணி என்று தோளைத் தொட்டு ஆறுதல் கூறிய மருத்துவரின் கைகளை இறுக்கி பிடித்தபடி தேம்பிய மணியை கண்டு அவன் மனைவி விஜி நில்லாமல் வழிந்தோடிய கண்ணீர் கண்களை மறைக்க செய்வதறியாது திகைத்தாள்.
சுஜியின் அலைபேசியில் அவளோடு பேச விரும்பிய நிச்சயம் செய்யப்பட்ட பிரபாகர் ஆஸ்திரேலியாவில் நள்ளிரவு நேரம் இந்திய நேரப்படி மாலை 6.30 க்கு அழைக்க சுஜியின் அலைபேசி சிணுங்கியது. ஆனால், பாவம் பிரபாவுக்கு தெரியாதே அந்த அலைபேசி கவனிப்பாரற்று சுஜியின் கட்டிலில் வீட்டில் கிடப்பதும் அவன் வருங்கால மனைவி மருத்துவமனை கட்டிலில் கிடப்பதும்.
டாக்டர் இதற்கு வேற வழியே இல்லையா இந்த சர்ஜரி என் சுஜி குட்டியோட ….. என்று அரற்றிய மணியை பார்த்து “இல்லை நிச்சயமாக என்னால் 100 சதவீதம் உத்திரவாதம் தரமுடியும் உங்க அன்பு மகளுக்கு எதுவும் ஆகாது. இந்த சர்ஜரி அவசியம் உடனடியாக செய்ய வேண்டும். தலையின் பின் மண்டையிலிருக்கும் அந்தக் கட்டியை அகற்றியே தீரணும் ஏன்னா அது வளர்ந்திட்டே இருக்கு. எவ்வளவு விரைவாக அகற்ற முடியுமோ
அவ்வளவு நல்லது சுஜிகுட்டிக்கு. நீங்க என்னை பரிபூர்ணமாக நம்பலாம் மிஸ்டர் மணி. விஜிம்மா நீங்களாவது அவரோட பயம் வீணானதுன்னு சொல்லுங்க ப்ளீஸ் என்ற டாக்டரிடம் கண்ணில் வழிந்த நீரோடு தலையாட்டினாள் விஜி. அத்தனை தெய்வத்துக்கும் வேண்டுதல் செய்து எல்லாம் நல்ல படியா முடிஞ்சு வீட்டுக்கு வந்தாச்சு. இந்த பத்துநாளும் ஆஸ்திரேலியா விலிருந்து வந்து சுஜி கூடவே இருந்த அவள் வருங்கால கணவன் பிரபாகர் தான் கிளம்புவதாக கூறிவிட்டு மீண்டும் ஆஸ்திரேலியா சென்றான்.
மெல்ல மெல்ல உடல்தேறி ஒருவாறு இயல்பான நிலை அடைந்து சுஜி சிரித்ததும் பெற்றோர்கள் இருவரும் மனநிம்மதி அடைந்தனர். கல்யாணத்திற்காக வாங்கிய கடனில் ஏறக்குறைய 25 லட்சமும் செலவழிந்தது. மீண்டும் திருமண பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று விஜியும் மணியும் கலங்கினார். நீங்க மனசை போட்டு ரொம்ப குழப்பிக்காதீங்க என்னோட நகை 80 சவரன் இருக்கே அதை வித்து கல்யாணத்தை சிறப்பா செய்யலாம் என்று கூறிய தன் அன்பு மனைவியை பார்த்து மனம் கசிந்தான் மணி. நீங்க பிரபாவோட அப்பாகிட்ட கல்யாண பத்திரிக்கை அடிக்கிறதைப் பற்றி பேசுங்க. அப்புறம் பாக்கி வேலைகளை கிடுகிடுன்னு பார்த்திடலாம். எல்லாம் நல்ல படியா முடியும் என்ற தன் மனைவியின் நம்பிக்கையான குரலில் சிறிது தைரியமடைந்து வருங்கால சம்மந்தியுடைய அலைபேசி எண்ணை அழைத்தான் மணி. இரண்டு டிரிங் டிரிங்குக்கு பிறகு ஹலோ சொல்லுங்க நான் பிரபாவோட அப்பா பேசறேன் என்ன விஷயம் .சுஜிக்கு உடம்பு நல்லா இருக்கா? அவ நார்மலாயிட்டாளா? என்று விசாரித்த சம்பந்தியிடம் மச்சான் நான் மணி தான் பேசறனுங்க எல்லோரும் சவுக்கியம். சுஜி நல்லா இருக்கா, அப்புறம் கல்யாண பத்திரிக்கை, ஜவுளி இதெல்லாம் பார்க்க இப்ப நேரம் ரொம்ப குறைவாக இருக்கு. அதனால நாம சீக்கிரமாக எல்லா முடிவும் பண்ணனும் மச்சான் “என்று மென்மையாக பேசிய மணி எதிர்முனையிலிருந்து எதுவும் இல்லாமல் நிசப்தமாக இருந்த அலைபேசியை உற்று நோக்கி அழைப்பு கட்டாயிடுச்சோன்னு பார்த்து லைனில் இருப்பது தெரிந்தும் மச்சான் லைனிலே தானே இருக்கீங்க. ஸ்பீச் கிடைக்கலையா? ஹலோ ஹலோ…. என்று சிறிது உரக்க பேசிய தன் கணவனின் குரல் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த விஜி உங்க மொபைல் ஸ்பீச் கம்மியா இருக்கும். இந்தாங்க என்று தன் மொபைலை நீட்டிய விஜியைப் பார்த்து “அப்படித்தான்
போல என்னவோ குரலே கேட்கலைன்னு தன் அலைபேசியை ஆப் செய்துவிட்டு விஜியின் அலைபேசியில் அழைத்தான் மணி. மச்சான் இப்ப கேட்குதுங்களா ?அந்த ஃபோன் எதோ சரியில்லைங்க மச்சான் சொல்லுங்க என்றான் மணி. அது ஒன்னுமில்லைங்க எனக்கு கொஞ்சம் சொல்லறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு, அவங்க அம்மா ஒரே அழுகை வீட்டிலே எல்லாரும் இந்த கல்யாணம் வேண்டாங்கிறாங்க. எனக்கு இவன் ஒரே பையன். அவனோட அடுத்த தலைமுறை நல்லா இருக்கணும் இல்லையா? சுஜிக்கு இதுபோல பெரிய வியாதி வந்ததாலே அவளுக்கு பொறக்கிற குழந்தைகளுக்கும் எதிர்காலத்திலே இதுபோல பெரிய வியாதிவர வாய்ப்பு இருக்குதுங்களே. அதனாலே …… எங்க வீட்டிலே எல்லோரும் இந்த கல்யாணம் வேண்டான்னு சத்தம் போடறாங்க. நான் என்னத்தைச் சொல்ல நீங்க சுஜிக்கு வேற இடம் பார்த்துகோங்க. எங்களை மன்னிச்சுடுங்க தம்பி. நான் போனை வெச்சிடுறேன் என்றார் பிரபாகரனின் தந்தை.
இதை தன் மகளிடம் எப்படி சொல்வது என்று பெற்றோர்கள் இருவரும் மனதில் அழுதழுது ஓய்ந்தனர். ம்மா இன்னிக்கி நான் அழகுபயிற்சி நிலையத்துக்கு கிளம்பட்டுமா? உடம்பு நல்லா இருக்கும்மா. சும்மாவே இருந்தா போரடிக்குதும்மா என்று கூறிய தன் மகளின் கைகளை பிடித்துக் கொண்டு உனக்கு மகிழ்ச்சின்னா எனக்கும் மகிழ்ச்சி. நீ கிளாசுக்கு போகணும்னு விருப்பப்பட்ட போடா கண்ணு என்றபடி மகளுக்கு தெரியாமல் முகத்தை திருப்பி கண்ணீரை மறைத்தாள் விஜி. சுஜிம்மா ஜீஸ் குடிச்சியா அந்த மாத்திரையெல்லாம் நேரத்துக்கு விடாம கொஞ்ச நாள் சாப்பிடனுண்டா தங்கம் என் செல்லக்குட்டி அப்பா பேச்சைக் கேப்பியில்லே என்ற தன் அப்பாவின் நெஞ்சில் சாய்ந்து அப்பா நான் ஒன்னு கேட்பேன் நீங்க சரின்னு சொல்லனும் என்று கொஞ்சிய மகளை அனைத்து தலையை தடவியபடி சொல்லுடா சுஜி குட்டி. அப்பாகிட்டே நீ என்ன கேட்டாலும் தருவேன்டா செல்லம் என்ற தன் அப்பாவின் முகத்தை அண்ணாந்து பார்த்து இந்த…… இந்த கல்யாணம் வேண்டாம்ப்பா ப்ளீஸ் அழாதீங்கப்பா ப்ளீஸ் ம்மா என்னம்மா நீங்களும் அழறிங்க. எனக்கு யாருமே சப்போர்ட் இல்லையா? நீங்க ரெண்டு பேரும் இப்ப ஒரே கட்சியாயிட்டிங்களா? என்ற மகளை இருவரும் நெருங்கி அணைத்துக் கொண்டு தங்கமே செல்லம் உன்னைவிட்டா எங்களுக்கு யாருடா இருக்காங்க. நாங்க ரெண்டு பேரும் வாழறதே உனக்காகத் தாண்டா சுஜிகுட்டி என்ற தன் அப்பாவின் ஈரமான குரலில் தானும் அழுது அம்மாவின் தோளில் சாய்ந்தாள் சுஜி.
ச்சே ரொம்ப டல்லா இருக்கு நாம ஊட்டி டிரிப் போலாமாப்பா. இப்ப லேசா மழையோட சிலுசிலுன்னு சூப்பரா ஊரே ஏசி போட்ட மாதிரி இருக்கும் என்று மகள் கூறியதும் ஆஹா சூப்பர் நான் இப்பவே ரெடி போலாண்டா செல்லம் என்ற தன் அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஐ என் செல்ல டாடி சூப்பர் தேங்க்ஸ்ப்பா என்று தன் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள் சுஜிக்குட்டி. இதெல்லாம் ரொம்ப அநியாயம் இதுக்கு ஸ்பான்சரே நாந்தான் எனக்கு முத்தமில்லையா போ… போ……. நான் இப்பவே உண்ணாவிரதம் இருக்கப்போறேன் சுஜிம்மா என்று அழுவது போல் பாவனை செய்த தன் தாயை இறுககட்டிப்பிடித்து ரெண்டு கன்னத்திலேயும் மாறி மாறி முத்தமிட்டு மகிழ்ந்தாள் மகள் சுஜி. நெகிழ்ந்தாள் தாய் விஜி.
ஏம்மா மறுபடியும் ஆரம்பிச்சாச்சா …. ஏம்மா இல்லடா உனக்கு இப்ப 27 ஆச்சு. இதான் சரியான வயசு. எனக்கு 22 லேயே ஆயிடுச்சு. உன் கல்யாணத்தை பார்த்திட்டா எங்கள் வாழ்க்கைக்கு ஒரு பூரணத்துவம் கிடைக்கும் செல்லம். எங்களுக்கு பிறகு ஒரு நல்ல துணைவன் உனக்கு இருக்க வேண்டும் சுஜிம்மா. இது பெற்றோரின் இயற்கையான ஆசைதானேடா என்று மகளிடம் மென்மையாக பேசியபடி அவள் நெற்றியில் விழுந்த சுருள்முடியை தடவித்தடவி மகளை கனிவுடன் நோக்கினாள் விஜி. அசோக்குமார் நல்ல ஆண்மகன் 7 வயது சுஜியைவிட பெரியவன். சுஜிக்கு நேர்ந்த எல்லா விஷயமும் தெரிந்தும் அவளை தன் துனைவியாக ஏற்றுக்கொள்ள முழுமனதுடன் விரும்பினான். சிறிய வயதிலேயே தந்தையை இழந்தவன். கிராமத்தில் பிறந்து வெகுளியான தன் தாயை சுற்றத்தார் ஏமாற்றி சொத்தெல்லாம் எழுதிக் வாங்கி கொண்டு துரத்திய பின்னர் தன் தாயோடும் தம்பியோடும் வெளியேறி தன் உழைப்பில் கிடைத்த பணத்தில் கேட்டரிங் கஷ்டப்பட்டு படித்து தங்களை ஏமாற்றிய சொந்த பந்தங்களின் முன் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறியில் பல நாள் பட்டினிகிடந்து படித்து முன்னேறி இன்று அமெரிக்காவில் ஒரு சொகுசு கப்பலில் சமையல் கலை வல்லுநராக பணியாற்றுகிறான். வருடத்திற்கு ஒரு முறை இந்தியா வரும் அவனிடம் அவன் தாய் தவறாமல் நச்சரிப்பது அசோக்கின் திருமணத்தைப்பற்றி தான். தம்பி கல்லூரி படிப்பு முடிந்து ஏதாவது வேலைக்கு போகட்டும் பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன் தாயை சமாதானம் செய்து விட்டு விடுமுறை முடிந்ததும் தப்பித்து சென்றுவிடுவான். தன்னோடு பணிபுரியும் நண்பர்கள் ஒவ்வொருவராக மணமுடிக்கும் போது அசோக்கும் தன் வாழ்க்கையைப் பற்றி சிறிது சிந்திக்க ஆரம்பித்தான். சாப்பிடாமல்
தொடர்ந்து வேலை செய்ததால் அவனுக்கு கடுமையான வயிற்று வலி அடிக்கடி வரும். சிறுவயதில் பலநாள் சாப்பிட எதுவும் இல்லாமல் பட்டினி கிடந்ததால் 15 வயதில் அவனுக்கு அல்சர் வந்தது. அதனால் பணி விடுமுறையில் ஊருக்கு வரும் போதெல்லாம் அவன் தாய் அவனுக்கு எல்லாவிதமான கீரைகளையும் மூன்று நேரமும் சமைத்து கொடுப்பாள். ஒருநாள் கல்யாணத் தரகர் ஒருவர் அசோக்குமாரை பிடித்துக் கொண்டு நிச்சயமாக இந்த ஆண்டு உன் திருமணத்தை நடத்தியே விடவேண்டும். 32 முடிஞ்சிடுச்சு என்ன அசோக்கு உன் அம்மாவுக்கு பாவம் உடம்பு முடியலை பலநாள் உன் தம்பி தான் எதாவது அவனுக்கு தெரிஞ்ச மாதிரி சமைச்சு சாப்பிட்டும் சாப்பிடாம காலேஜ் போறான். நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கப்பா என்று அவனிடம் பேசியதும் அசோக்கும் அரைமனதாக சம்மதம் என்று அவரிடம் தலையாட்டினான்.
சுஜியும் அசோக்கும் தங்கள் இல்லற வாழ்வை ஆரம்பித்து அன்றோடு 6 மாதங்கள் ஓடிப்போனது. சுஜியின் புகைபடத்தை தரகர் காட்டியதும் அவளை முதன்முதலாக பார்த்தவுடனேயே மனதுக்கு பிடித்ததும் மணமுடித்ததும் ஏதோ கனவில் நடந்தது போல் இருந்தது அவனுக்கு. ஆறு மாதத்திற்கு ஒருமுறை விடுப்பில் இந்தியா வரும் போதெல்லாம் முடிந்தவரை தன் மனைவியின் அன்பையும் அழகையும் ரசித்து ருசித்து விடுமுறை முடிந்ததும் கிளம்பும் போது மனம் வருந்துவதை முடிந்தவரை மறைத்து கிளம்புவான். இப்படியே வருடங்கள் 2 ஓடியது. போங்க மாமா நீங்க ஆறுமாசத்துக்கு ஒருமுறை வரீங்க. என்ன பெரிய காசு. அந்த சம்பளம் இல்லைன்னாலும் பரவாயில்லை நீங்க இந்தியாவிலேயே ஏதாவது பெரிய இன்டர்நேஷனல் ஹோட்டலில் ஃச்செஃப் ஆக சேரலாம்பா. நீங்க இல்லாம எனக்கு கஷ்டமா இருக்கு மாமா என்று வீடியோ காலில் பேசிய தன் ஆசை மனைவியின் முகம் பார்த்து சரிடா சுஜிகுட்டி நீ விரும்பின மாதிரியே நான் இந்தியாவிலே வேலை தேடிட்டு வந்திடுறேன். இப்ப மாமாவுக்கு ஒரே ஒரு …. உம்மா குடுறா ப்ளீஸ் என்று தன்னை தன் பெற்றோர் கொஞ்சுவது போலவே சுஜிகுட்டி என்றழைத்ததும் நெகிழ்ந்து அவன் விரும்பியதைக் கொடுத்தாள் சுஜி.
ஐ ..ஜாலி இனி நீங்க என்கூடவே இருப்பீங்க. கொச்சியில் இருக்கும் அந்தப் பெரிய இன்டர்நேஷனல் ஹோட்டலில் கேக் வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்து அன்றுதான் முதல்நாள் வேலைக்கு கிளம்பினான் அசோக். கிறிஸ்மஸ் கொண்டாட்டம். புதுவருட கொண்டாட்டம் என்று அவனுக்கு வேலைப்பளு மூச்சுவிட நேரமில்லை. தன் ஆசைமனைவியை கெஞ்சி கூத்தாடி இந்த ஒரு மாதம் மட்டும் அவள் தாய்வீட்டிலேயே இருக்குமாறும் தைமாதம் பிறந்ததும் கொச்சியில் வீடு பார்த்து தனிக்குடித்தனம் அமைக்கலாம் என்று கூறினான் அசோக். இத்தனை நாள் பொறுத்துக் கொண்டவள் அரைமனதுடன் சரி என்று சம்மதித்தாள். கிறிஸ்மஸ் கேக் வடிவமைப்பதில் இரவும் பகலும் நேரம் பாராது ஒரு மாதம் தொடர்ந்து ஓய்வில்லாமல் உண்ணாமல் உறங்காமல் புதுவேலையை ஆர்வத்துடன் சிரத்தையுடனும் செய்தான் அசோக். சாப்பிடாமல் சாப்பிடாமல் வயிற்றுவலி காரணமாக அவதியுடன் நல்லபடியாக வேலையை முடித்துவிட்டு விடுப்பு வாங்கிக்கொண்டு மனைவியைக் காண பொங்கலுக்கு ஓடோடி வந்தான். சுஜியின் பெற்றோரும் தை மாதம் புதுக்குடித்தனம் செய்ய மகளுக்கு நல்ல வீடாக பார்த்து பொருட்களை வாங்கி நிரப்பி பால் காய்ச்சி புதுவாழ்வை ஆரம்பிக்க ஆவண செய்தனர். அசோக்கின் தாயும் தம்பியும் அவன் வீட்டில் அவனோடும் சுஜியோடும் மகிழ்வாக சிலநாட்கள் தங்கி பின்னர் கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
என்னமோ தெரியலைங்க காலையிலே எழுந்ததிலிருந்து தலைசுத்துது. வாந்தியா வருது என்ற தன் அன்பு மனைவியை தலை வலிக்குதா சுஜிகுட்டி.ஏம்மா எதாவது சாப்பிட்டது செரிக்கலையோ எதுக்கும் டாக்டர்கிட்டே போலாண்டா என்று மனைவியை அருகிலிருந்த ஒரு லேடி டாக்டரிடம் அழைத்துச் சென்றான் அசோக். சிறிது நேர பரிசோதனைக்குப் பின் பிளட் டெஸ்ட், யூரின்டெஸ்ட் எல்லாம் எடுத்தாச்சுங்க மேடம் இந்தாங்க ரிப்போர்ட் என்று கொடுத்த கணவனின் தோளை பிடித்தபடி நின்ற அந்த இளம்பெண்ணை உட்காரும்மா சுஜிதா. உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு நாளாச்சு என்ற டாக்டரிடம் 2 வருஷமாச்சுங்க மேடம். ஆஹா அப்படியா சந்தோஷம் உங்களுக்கு குழந்தைகள்னா பிடிக்குமா மிஸ்டர் அசோக். அசோக்கின் முகத்திலும் சுஜியின் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் ஒளிர்ந்தது. வாவ் நன்றிங்க மேடம். ஓ நீங்க நான் சொல்றதுக்கு முன்னாடியே கண்டு பிடிச்சிட்டிங்களே. வெரி கியூட் அண்ட் ஸ்மார்ட் கப்பிள், கன்கிராட்ஸ் மிஸ்டர் அண்ட் மிசஸ் அசோக். சுஜிம்மா நீங்க அம்மா ஆகப்போறிங்க. வாழ்த்துகள். வீட்டிற்குள் நுழைந்தது முதல் தன் மனைவியை ஏதோ அற்புதமான அதிசய பொருளைப் பார்ப்பது போல் வியந்து பார்த்தான் அசோக். அவள் அழகான வயிற்றைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக தன் தலையை வைத்து ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று உற்றுக்கேட்டான். தன் கணவனின் விநோதமான செய்கைகளால் மகிழ்ச்சி பொங்க கலகலவென்று நகைத்தாள் சுஜி. என்னடா செல்லம்
ஏன் சிரிக்கிறே. இல்லே இப்பவே ஏதாவது பேசுதான்னு காதை என் வயித்திலே வச்சுக் கேட்டிங்களே எதாவது பேசுச்சா உங்க குழந்தை என்று வாய் நிறைந்த சிரிப்போடு தன்னை கேலி செய்த மனைவியை மெல்ல அணைத்து மிருதுவாக தொட்டுத் தூக்கிச் சென்று ஒரு மயிலறகைப் போல் படுக்கை மீது கிடத்தினான் அசோக். இந்த மகிழ்ச்சியான செய்தியை சுஜியின் பெற்றோரிடமும் தன் அம்மாவிடமும் அலைபேசியில் கூறி வாழ்த்தைப் பெற்றனர். மகிழ்ச்சியைக் கொண்டாட தான் பணிபுரியும் ஹோட்டலில் பெரிய பார்ட்டி வைத்தான் அசோக். தன் அன்பு மனைவிக்கு சிறிய வைரக்கல் பதித்த மோதிரம் பரிசளித்தான். விருந்து முடிந்து இரவு வீடு திரும்பிய தம்பதிகள் மகிழ்ச்சியில் நன்றாக உறங்கினர்.
நள்ளிரவு 2 மணி திடீரென்று அசோக்கிற்கு வயிற்றுவலி தாங்க முடியவில்லை. நன்றாக உறங்கும் தன் மனைவியை எழுப்ப மனமின்றி தனியாக சோபாவில் படுத்து புரண்டு புரண்டு வலி தாளாமல் முனகினான் அசோக். அதிகாலை 4 மணிக்கு இயற்கை உபாதை எழுப்ப எழுந்த சுஜி சோபாவில் உடலை முறுக்கியபடி முனகிக் கொண்டிருந்த தன் கணவனின் அருகில் ஓடிச்சென்று என்ன மாமா தலைவலிக்குதா என்ன செய்யுது ஏன் மாமா என்னை எழுப்பி இருக்கலாமில்லே சுஜிகுட்டி ஒன்னுமில்லடா மாமாவுக்கு எப்பவும் வலிக்கிற வயித்துவலிதாண்டா. கொஞ்சம் சீரகக் கஷாயம் குடிச்சா சரியாயிடும்மா என்றதும் விரைவாக சமையலறை சென்று சீரக கஷாயத்தை தயாரித்து கொண்டுவந்து கணவனுக்கு கொடுத்தாள் சுஜி. கிட்டத்தட்ட 4 மணிநேரம் வலியில் போராடிய அசதியில் அசோக் அதிகாலையில் மெல்ல தூங்க ஆரம்பித்தான். சுஜி சிறிது நேரம் தன் கணவனின் அருகிலேயே அவன் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். காலை நேரம் 7.30 உடனே சுஜி எழுந்து குளித்து வேகமாக சமையல் செய்து தன் கணவனுக்கு மிகவும் பிடித்த இட்லியும் வெங்காயசட்னியும் செய்து ஹாட்பேக்கில் வைத்துவிட்டு அவன் தூங்கி எழுவதற்கு காத்துக்கிடந்தாள். பத்தரை மணிக்கு கண்விழித்த அசோக்கை ஓடிவந்து மாமா இப்ப வயித்தை வலிக்கலையா? நல்லா இருக்கா மாமா இந்தாங்க கொஞ்சம் வெந்நீர் குடிங்க என்று நீட்டிய தன் மனைவியின் முகத்தைப் பார்த்து இல்லடா மாமாவுக்கு உன் சீரக கஷாயம் குடிச்சதும் வலி பறந்து போயிடுச்சு சுஜிகுட்டி என்று அவளைக் கொஞ்சினான் அசோக். சரி அப்புறம் எழுந்திருங்க குளிச்சிட்டு வாங்க டிபன் சாப்பிடலாம் என்றாள் சுஜி. இட்லியை பார்த்தும் சூப்பர்டா சுஜிகுட்டி மாமாவுக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சு போட்டு அசத்தறடா செல்லம்.
வாவ் டேஸ்டியா இருக்குடா. போதும் போதும் வயிறு வெடிச்சிடும் 6 இட்லி ரொம்ப ஜாஸ்தி. நான் கொஞ்ச நாள்லே இப்படியே சாப்பிட்டு குண்டோதரன் ஆகப்போறேன். அப்புறம் வளைகாப்புக்கு வரவங்க புள்ளைத்தாச்சி நீயா? நானான்னு குழம்ப போறாங்க என்று சிரித்த தன் கணவனை செல்லமாக கன்னத்தில் கிள்ளி பரவாயில்லை நீங்க குண்டான இன்னும் அழகா இருப்பீங்க மாமா என்று கொஞ்சி முத்த மிட்டாள் அவன் மனைவி சுஜி. போரடிக்குது நாம எங்காவது வெளிய போலாமா சுஜிகுட்டி. ஜாலியா ஷாப்பிங் போலாமா? சரிங்க மாமா போலாம் என்று பக்கத்திலிருந்த ஒரு பெரிய ஷாப்பிங் மால் சென்றனர். மதியம் நல்ல தரமான உணவு படைக்கும் அந்த உணவகத்தில் திருப்தியாக உண்டனர். சுஜிக்கு லிப்டில் இறங்கும் போது லேசாக தலைசுற்றி வாந்தி வரும் போலிருந்ததை அசோக்கிடம் கூறினாள். பக்கத்திலிருந்த வாஷ்ரூமுக்கு சென்று திரும்பி வரும்வரை அதன் முன்பு நின்றிருந்தான் அசோக். வீட்டிற்கு வந்ததும் சுஜிம்மா இனிமே இந்த வாந்தி காலம் முடியும்வரை நாம வெளிய போகவேண்டாம்பா என்றான் அசோக். இதெல்லாம் கர்ப்பகாலத்திலே இயற்கைன்னு டாக்டர் அன்னிக்கே சொன்னாங்க மாமா. நீங்க பயப்படாதீங்க என்று சிரித்த சுஜியை அணைத்து அதுக்கில்லடா வீடுன்னா நீ வாஷ்ரூம் போனாலும் நான் கூடவே வரலாம். வெளியிடத்திலே நீ மட்டும் தனியா போய் வாந்தி எடுத்து மயக்கம் வந்தா வெளியே நிக்கிற எனக்கு எப்படி தெரியும். அதான் இனிமே நோ அவுட்டிங் சுஜிகுட்டி. செல்லம் உனக்கு எதாவது ஒன்னு ஆச்சுன்னா என்னாலே தாங்கவே முடியாதுடா. மாமா பாவம் இல்லையா என்று தன்னை கொஞ்சிய கணவனின் அன்பில் நெகிழ்ந்தாள் சுஜி.
அன்று காலையிலிருந்தே எதுவும் சரியாக அமையவில்லை. எந்த டிசைனும் மனதைக் கவரும் விதமாக அமையவில்லை. பரவாயில்லை அசோக் நீங்க செய்த எல்லா டிசைன் கேக்கும் அழகாகத் தான் இருக்கு. இவ்வளவு சின்சியரான வொர்க்கர் கிடைச்சது என் அதிர்ஷ்டம் என்று எல்லா பணியாளர்கள் முன்பும் அசோக்கை புகழ்ந்தார் அவன் முதலாளி. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய அசோக் மனைவி செய்து வைத்திருந்த உணவை சாப்பிட அமர்ந்ததும் வழக்கம் போல் வாந்தி சத்தம். ஆனால் இன்று வாந்தி எடுத்தது சுஜி அல்ல. அசோக். வாஷ்பேசனில் குழாயை திருப்ப அருகில் சென்ற சுஜி அவன் வாந்தி எடுத்த வாஷ்பேசனைப் பார்த்து அதிர்ந்தாள். அது முழுவதும் ஒரே மஞ்சள் நிறமாக இருந்தது. மாமா மதியம் என்ன சாப்பிட்டிங்க. இப்படி ஒரே மஞ்சளா வாந்தி எடுக்குறிங்க. வாங்க மாமா டாக்டர்கிட்டே போலாம் என்ற தன் மனைவியிடம் சரிடா
போலாம் என்று இருவரும் கால்டாக்ஸியில் அருகிலிருந்த ஒரு பொதுநல மருத்துவரிடம் சென்றனர். அவர் வழக்கமான பரிசோதனைகளை செய்து பின்பு மஞ்சள்காமாலை போலிருக்கிறது எதற்கும் ஒரு பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எடுத்திட்டு வாங்க பார்க்கலாம்னு சொன்னார். அடுத்த நாள் மருத்துவரின் சந்தேகத்தை உறுதி செய்தது அந்த ரிப்போர்ட். மாமா நீங்க லீவு வாங்கிட்டு வாங்க நாம ஊருக்கு போயிடலாம் எங்கம்மாவும் அப்பாவும் நம்மளை நல்லா பாத்துக்குவாங்க. நாம போலாம் மாமா என்று கொஞ்சிக் கெஞ்சிய தன் மனைவியை பார்த்து சரிடா செல்லம் நாளைக்கே போலாம் ஓகேவா எங்கே கொஞ்சம் சிரியேன் என்று கொஞ்சினான் அசோக்.
வாங்க மாப்பிள்ளே. சுஜி எல்லாம் சொன்னா. நீங்க வாங்க நாம் இந்த ஊரிலேயே இதான் பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், நம்ம சுஜியை காப்பாத்தின நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க. இங்கே உங்களுக்கு எல்லா செக்கப்பும் பண்ணிடலாம் என்ற தன் மாமனார் மணியை அன்புடன் பார்த்த அசோக் சரிங்க மாமா நீங்க சொன்னது போலவே செய்திடலாம் என்றாள். என்னங்க நீங்களும் சுஜியும் மாப்பிள்ளை கூடவே இருங்க. நான் ஆபிஸிக்கு போயிட்டு ஒரு வாரம் லீவு சொல்லிட்டு வந்திடுறேன் என்று கிளம்பிய மனைவி விஜியை நீ போயிட்டுவாம்மா. சாயந்திரம் 4.30 க்கு தான் டெஸ்ட் ரிபோர்ட் வரும்னு சொல்லிட்டாங்க அப்ப நீ வந்திடு விஜிம்மா என்று கூறி அனுப்பிவைத்தார் மணி. ஏம்பா என்னவாயிருக்கும். இவருக்கு ஏற்கனவே அல்சர் இருக்கு எனக்கு தெரிஞ்ச விஷயந்தான். இப்ப மஞ்சக்காமாலை வந்திருக்குமோன்னு சந்தேகமாயிருக்குபா என்று சுவலைபட்ட தன் அன்பு மகளின் தலையைத் தடவி விடுறா அதெல்லாம் ஒரு வியாதியே இல்லே. பத்துநாள் விடாம மருந்து சாப்பிட்டா நல்லாயிடும். நீ கவலைப்படாதடா. புள்ளத்தாச்சி பொண்ணு பயந்தாலோ கவலைப்பட்டாலோ அழுதாலோ வயித்திலிருக்கிற குழந்தைக்கு ஆகாதுடா செல்லம். நீ சந்தோஷமாயிரு, அப்பா இருக்கேன்டா. நான் பாத்துக்குறேன். சரிப்பா என்று தன் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டு தன் கவலையையும் கண்ணீரையும் மறைத்தாள் சுஜி. அசோக்குமார் யாரு டாக்டர் கூப்பிடறாங்க வாங்க சார் என்று ஒரு நர்ஸ் அழைத்தாள். அசோக்கும் சுஜியும் உள்ளே சென்றார்கள். மணி மகளுக்கு குடிப்பதற்கு ஜீஸ் வாங்கி வரப்போனவர் விஜியும் வந்து சேர்ந்து கொள்ள இருவரும் மருத்துவரின் அறைக்குள் முன்னிருந்த இருக்கைகளில் சுஜியையும் அசோக்கையும் காணாமல் அருகில் நின்றிருந்த நர்ஸிடம் சென்று விசாரித்தனர். அந்தப் பெண் வாயைத் திறந்து பதில் சொல்லும்முன் மருத்துவரின் அறையிலிருந்த அழைப்பு மணி ஒலிக்க உள்ளே ஓடினாள். சிஸ்டர் இவங்க கூட வந்த உறவுக்காரங்களை உள்ளே வரச்சொல்லுங்க என்றதும் வெளியே வந்து சார் உங்களை டாக்டர் கூப்பிடறாங்க என்று மணியையும் விஜியையும் பார்த்து கூறினாள் நர்ஸ். துரிதமாக உள்ளே நுழைந்த அந்த மத்திம வயதான தம்பதிகளை இருக்கையில் அமருமாறு டாக்டர் கூறினார். மிஸ்டர் அசோக்குமார் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளிய வெயிட் பண்றிங்களா? நான் உங்க பேரண்ட்ஸ் கூட கொஞ்சம் பேசணும் என்ற மருத்துவரை சற்றே வியப்புடன் பார்த்துவிட்டு சரிங்க மேடம், நாங்க வெளிய வெயிட் பண்றோம் என்று கூறிவிட்டு சுஜியும் அசோக்கும் அந்த அறையை விட்டு வெளியேறினர். சிறிது நேரம் மருத்துவரின் அறையில் நிசப்தம் நிலவியது, சொல்லுங்க மேடம் நாங்க சுஜியோட பேரண்ட்ஸ். அசோக்குமார் எங்க மாப்பிள்ளை என்றார் மணி. மிஸ்டர் மணி உங்க பொண்ணுக்கு கல்யாணமாகி எத்தனை நாளாச்சு. 2 வருசமாச்சுங்க மேடம், மாப்பிள்ளைக்கு உடம்புக்கு எதுவும் இல்லையே. நல்லா இருக்கார் தானே மேடம், அவரோட பேரண்ட்ஸ் இருக்காங்களா? அப்பா இல்லே அவருக்கு அம்மாவும் ஒரு தம்பியும் மட்டுந்தான். இருவரும் கொஞ்சம் மனம் கலங்க என்னாச்சுங்க மேடம் மாப்பிள்ளைக்கு? குழந்தைங்க எத்தனை உங்க பொண்ணுக்கு இருக்கு? கல்யாணமாகி 2 வருஷமா குழந்தையில்லாம இப்பதான் எம்பொண்னு கர்ப்பமா இருக்கிறா.40 நாளாச்சுங்க என்று சற்று மகிழ்ச்சியுடள் விஜி மருத்துவரிடம் தெரிவித்தாள் .ஓ. மைகாட் அப்பநான் உங்க பொண்ணுகிட்ட அவசியம் சொல்லனும், நானும் ஒரு பெண். ஒரு குழந்தைக்குத் தாய், மருத்துவம் என்னோட தொழில், ஆனா அடிப்படையிலே உங்களைப் போல தானும் ஒரு அம்மா மிசஸ் விஜி. இருவரும் இமைக்காது மருத்துவரையே பார்த்தபடி சிலை போல அமர்ந்திருந்தனர், எனக்கு உறுதியாக சொல்ல முடியும் மிஸ்டர் மணி சார். உங்க மாப்பிள்ளைக்கு பித்தப்பை, கல்லீரல், மண்ணீரல் எல்லாத்திலேயும் பரவி முற்றிய நிலைக்கு வந்திருக்கும் புற்றுநோய், குணப்படுத்தற கட்டத்தை எல்லாம் தாண்டியாச்சு. ஹீமோதெரபி பண்ணினாலும் குணமடைய 10 சதவீதம் வாய்ப்பு கூட இல்லை. அதிகபட்சம் அவரோட வாழ்நாள் இன்னும் ஒரு ஆறுமாதம் தான் என்று அந்த பெண் மருத்துவர் கூறி முடித்ததும் இருவரும் அவர் பேசிய மொழியின் அர்த்தம் தெரியாத விளங்காத செவிடர்களைப் போல குருடர்களைப்போல ஜீவனற்ற சடலங்களைப் போல இந்த நொடி தாங்கள் கேட்பது பொய், கனவு, மாயை என்று விழி பிதுங்கி வேரற்ற மரங்களைப் போல மனமும் உடலும் காய்ந்து கருக அமர்ந்திருந்தனர். முதலில் விஜிதான் சுதாரித்துக் கொண்டு தன் கணவனின் தோளைத் தொட்டு என்னங்க என்று ஈனசுவரத்தில் அழைத்தாள். மணி தான் ஒரு பெண் மருத்துவரின் முன்னால் அமர்ந்திருப்பதை மறந்து சிறிய குழந்தையைப் போல் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தார். விஜி மருத்துவரின் மேசை மீது மயங்கி சரிந்தாள். டாக்டர் வெளியிருந்து நர்ஸை அழைக்காமல் தானே எழுந்து சிறிது தண்ணீரை அவள் முகத்தில் தெளித்து ஒருவாய் நீரை வலுக்கட்டாயமாகப் புகட்டினார். கண்விழித்த விஜி வெளியே நின்றிருக்கும் மகளிடம் தான் என்ன சொல்வது எப்படி தேற்றுவது என்றறியாமல் விழிநீர் பெருக விம்மினாள். மிஸ்டர் மிஸஸ் மணி நீங்களே உங்க பொண்ணுகிட்டயும் மாப்பிள்ளைகிட்டயும் சொல்லிக்கிறிங்களா இல்லே உங்க பொண்ணு கூட நான் பேசட்டுமா என்று அந்த பாவப்பட்ட தம்பதிகளைப் பார்ந்து மென்மையாக விசாரித்தார். இல்லே டாக்டர் நாங்க அப்புறம் வரோம். விஜி எழுந்திரு கண்ணைத் தொடச்சிக்கோ, வா போலாம் என்று விஜியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியேறினார் மணி. வெளியே வந்ததும் மகளையும் மருமகளையும் காணாமல் நின்ற அந்த தம்பதிகளை நெருங்கி அவங்க ஹாஸ்பிடல் கேன்டீனுக்கு காபி குடிக்க போனாங்க. உங்களையும் அங்கே வரச் சொன்னாங்க மேடம் என்று கூறிய அந்த நர்ஸைப் பார்த்து நன்றி கூறி கேன்டினை நோக்கிச் சென்றனர். அங்கே அவர்கள் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்ததை பின்னாலிருந்து கண்ட மணியும் விஜியும் அழுத விழிகளை அழுந்த துடைத்துக் கொண்டு விஜி நீ எதுவும் சொல்லாதே. எனக்கென்னவோ அவருக்கு வெறும் அல்சர், மஞ்சக்காமாலைன்னு தான் நினைக்கிறேன். நாம் இன்னொரு பெரிய ஹாஸ்பிடல்லே செக் பண்ணி வேற டாக்டர்கிட்டே ரிப்போர்ட் பார்க்கலாம். இந்த… இந்த டாக்டரம்மா சொன்னது போல இருக்காது விஜிம்மா. சரி நீ எதுவும் பேசாதே அழாதே சரியா, சாதாரணமா இரு ப்ளீஸ் விஜிம்மா. சரிங்க நாம வேற ஹாஸ்பிடலுக்கு உடனே போலாங்க என்று கூறிய மனைவியை அழைத்துக் கொண்டு மகளிடம் சென்று அமர்ந்தார் மணி. என்னப்பா இவ்வளவு நேரம். அந்த டாக்டரம்மா அப்படியென்ன ரகசிய ரிபோர்ட் கொடுத்தாங்க, நான் அவரோட மனைவி எங்கிட்டேயே சொல்ல மாட்டிங்கிறாங்க. இல்லடா சுஜிகுட்டி கர்ப்பமா இருக்கே சின்னப் பொண்ணு அதான் எங்ககிட்டே சொன்னாங்க என்னப்பா சொன்னாங்க டாக்டர். அது வேறு ஒண்னுமில்லடா. ஜஸ்ட் அல்சர் கொஞ்சம் அதிகமா இருக்காம். கூடவே ஜாயிண்டிஸ் இருக்கிறதால ஒரு சர்ஜரி பண்ணலாமான்னு கேட்டாங்க. நான் இன்னும் ஒரு டாக்டர்கிட்டே செகண்ட் மெடிகல் ஒபினியன் கேட்டிட்டு பார்க்கலாம்னு சொல்லிட்டு வந்தேன்மா. நாம நாளைக்கே வேற ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு போலாங்க மாப்பிளே. சரி வாங்க வீட்டுக்கு போலாம். எனக்கு பசிக்குது விஜி என்று கால்டாக்ஸியை அலைபேசியில் அழைத்தபடி முன்னே நடந்தார் மணி.
மறுநாள் மீண்டும் அதேவிதமான பரிசோதனைகள் எல்லாம் முடிந்தது. எல்லா ரிபோர்ட்டும் வந்தது. டாக்டர் பார்த்துவிட்டார் என்றும் மிஸ்டர் மணியை அழைப்பதாக அறிவித்த நர்ஸை எந்த அறை என்று கேட்ட மணி சுஜிம்மா நீயும் மாப்பிள்ளையும் இருங்க நானும் அம்மாவும் போய் பார்க்கிறோம். இவர் என் பிரெண்டுக்கு ரொம்ப தெரிஞ்ச டாக்டர் மாப்ளே இதோ வந்திடறோம், வா விஜி என்று மனைவியை அழைத்துக் கொண்டு நர்ஸ் சொன்ன அறை எண்ணை பார்த்து உள்ளே நுழைந்தனர். அந்த அறையில் அமர்ந்திருந்த இரண்டு மருத்துவர்களில் ஒருவரைப் பார்த்ததும் தம்பதிகள் அதிர்ந்தனர். அவர் எதுவும் பேசாமல் அந்த மற்றொரு மருத்துவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தார். வாங்க மிஸ்டர் மணி. இவங்க எங்க சீப் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சும்மா ஒரு செகண்ட் ஒபீனியனுக்காக அவரையும் நான்தான் வரச்சொன்னேன் என்றார். டாக்டர் சார் நீங்க முதல்லே அவரோட ரிபோர்ட்ஸ் பார்த்து அனலைஸ் பண்ணிட்டிங்களா? உங்க ஓபீனியன் என்னன்னு முதல்லே சொல்லுங்க சார் என்ற தங்கள் மருமகனை ஏற்கனவே பரிசோதித்த பெண் மருத்துவர் பேசியதைக் கேட்டதும் அந்த இளம் மருத்துவர் மிஸ்டர் மணி உங்க மருமகன் தன்னோட அபாயகரமான மிகவும் முற்றிய புற்று நோயின் இறுதி கட்டத்தில் இருக்கார். அதிகபட்சம் ஐந்தாறு மாதம் உயிரோடிருப்பார். மண்ணீரலை வெட்டி ரிமுவ் செய்தாலும் ஈரல் மிகவும் பாதித்த நிலையில் இருக்கிறது. அவர் உடம்பு தாங்கும் வரை ஹிமோ தெரபி ஒரு ஐந்துமுறை செய்யலாம். அதற்கு பிறகு ஸ்கேன் பண்ணி நோய் குறைஞ்சிருந்தா வேற டிரிட்மெண்ட் கொடுக்கலாம். இவ்வளவு தான் இப்ப என்னாலே சொல்ல முடியும். ஐயம் சாரி மணி சார் என்றதும் மணியும் விஜியும் அந்த அனுபவம் வாய்ந்த லேடி டாக்டரின் முகத்தை ஏறிட்டு பார்க்க முடியாமல் விழிகளில் நீர் வழிந்தோட அமர்ந்திருந்தனர். மிஸ்டர் &மிசஸ் மணி நீங்க செய்தது மிகவும் சரியான செயல். எல்லா மனிதர்களுக்கும் ஒரு நம்பிக்கை ஆசை இருப்பது இயற்கை. நீங்களும் அப்படித்தான். ஒரு செகண்ட் மெடிகல் ஒபீனியன் வாங்கினது நல்லது தான். நான் வருத்தப்படறது உங்க மகளை நினைச்சுதான்.அவ ஒரு சின்ன பொண்ணு அவகிட்ட நான் உடனடியாக ஒரு கேள்வி கேட்கணும். இல்லே நீங்களே அதற்கு பதில் தருவிங்கன்னா நான் உங்ககிட்டயே கேட்கிறேன். என்னங்க மேடம் கேளுங்க என்று விஜி கேட்டாள். ஆறு மாதம் உயிரோடிருக்கப் போகிறவரோட குழந்தைய 40 நாள் கருவா வயித்திலே சுமந்திட்டிருக்கிற அந்த பொண்ணோட வாழ்க்கைப் பயணம் மிக நீண்டது. கணவனில்லாமல் குழந்தையைப் பெற்று அவ வாழ்க்கை அப்படியே போகனும்னு நினைக்கிறிங்களா? இந்த கருவை இப்பவே கலைச்சிட்டா அவ இன்னொரு வாழ்க்கையை மீண்டும் தொடர ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறதா நான் நினைக்கிறேன். பெற்றோர்களாக நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு சொல்லுங்க என்ற அந்தப் பெண் மருத்துவரின் அன்பையும் சமயோசித அறிவையும் உணர்வுபூர்வமாக எண்ணாமல் அறிவுபூர்வமாக எண்ணி பேசும் அந்தப் பெண் மருத்துவரை கண்ணில் நீருடன் மேடம் எம்பொண்ணு அவதான் அந்தக் குழந்தை தனக்கு வேணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணணும். அதனாலே நீங்க அவகிட்டயே கேளுங்க. அவ புருஷனோட நோயின் தீவிரத்தையும் சொல்லுங்க என்று கூறிய விஜியைப் பார்த்து குட் வெரிகுட் விஜி. நீங்க உங்க பொண்ணை அனுப்புங்க என்றார். மணி எதுவும் பேசாமல் விஜியின் பின்னால் நடந்து இருவரும் அறையை விட்டுச் சென்றனர். சுஜிம்மா மாப்பிள்ளைக்கு இங்கேயே சர்ஜரி பண்ணிக்கலாம்டா. உங்கப்பா போய் ரூம் புக் பண்ணட்டும். எனக்கு தலைவலிக்குது எங்கூட கேன்டீனுக்கு வர்றியா என்றழைத்த தன் தாயுடன் சென்றாள் சுஜி. கேன்டீனுக்கு இப்படி போகக் கூடாது மா என்ற தன்னை தடுத்த மகளை சுஜிம்மா தங்கம் நீ அம்மா சொல்றத கேப்பியா? மாட்டியா? என்னம்மா அழறிங்க என்று கண்கலங்கிய மகளின் கைகளை பிடித்துக் கொண்டு டாக்டர் உங்கூட பேசனும்னு சொன்னாங்க. அந்த ரூமுக்கு உள்ளே போடா செல்லம் என்ற தன் தாயை குழப்பத்துடன் திரும்பி திரும்பி பார்த்தவாறே மருத்துவரின் அறைக்குள் சென்றாள் சுஜி. மருத்துவர் கூறிய அனைத்தையும் வாய்திறவாது அழுதபடி கேட்ட சுஜி இறுதியில் சொல்லும்மா சுஜி இந்தக் குழந்தை உனக்கு வேணுமா? ஏன்னா இதை நீ தனியா வளர்க்கனும். அது சுலபமான காரியமில்லைம்மா. நீ முடிவு சொன்னா அதற்கு தக்கபடி நான் செய்றேன் சுஜி சொல்லும்மா என்ற அந்த பெண் மருத்துவரையே இமைக்காமல் பார்த்தாள் சுஜி. மேடம் என் கணவர் ஆறுமாதங்களுக்கு மேல் உயிரோடிருக்கிற வாய்ப்பே இல்லையா என்று குரல் கம்ம கேட்ட அந்த இளம்பெண்ணிடம் என்ன பேசுவது என்று புரியாமல் சுஜிம்மா பெயின்கில்லர்ஸ் அது இதுன்னு எவ்வளவு கொடுத்தாலும் நோயை கட்டுப்படுத்தாது. ஹிமோ தெரபி பண்ணினால் மறுபடியும் கொஞ்சம் ஒரு 2 மாசம் நீட்டிக்கலாம்மா. அதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது மகளே. நம்மைத் தாண்டிய சக்தி அதனிடம் வேண்டிக் கொள்வதைத் தவிர வேறொன்றுமில்லை மகளே என்று கலங்கிய
கண்களுடன் தன் அனுபவத்தில் இதுபோல நிறைய ஆட்களையும் சூழ்நிலைகளையும் சந்தித்த அந்தப் பெண் மருத்துவரே ச்சே கடவுளே ஏதாவது செய்து இந்த அழகான பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சியைத் தர என் கைகளுக்கு சக்தியை கொடுங்கள் என்று உள்ளூர மன்றாடினார் அந்த கண்ணுக்குப் புலனாகாத சக்தியிடம். மேடம் எனக்கு ஒரு உதவி செய்விங்களா? சொல்லும்மா சுஜி என்னாலானதை செய்றேன் என்ற மருத்துவரிடம் எங்க வீட்டுகாரர்கிட்டே இது முற்றிய நிலையில் உள்ள புற்று நோய்ன்னு நீங்க சொல்லாதிங்க அவர் ரொம்ப நல்லவர் மேடம், எனக்காக நிறைய விட்டுக் கொடுத்திருக்கார். நல்ல வேலையைக் கூட என் சந்தோஷத்துக்காக விட்டுட்டு வந்தார். நல்ல மனிதர்களை கடவுள் தன்கிட்டே சீக்கிரமா கூப்பிட்டு வச்சிக்குவாருன்னு எங்க வீட்டு பக்கத்திலே பாட்டி கதை சொல்லும் போது சொல்லுவாங்க. அப்படிப்பட்ட அந்த நல்ல ஆத்மாவுக்கு கொஞ்சநாள் இந்த பூலோகத்திலே என்கூட வாழவந்த அந்த நல்ல மனிதருக்கு நான் என்ன தரமுடியும் மேடம், அவரோட இந்தக் குழந்தையை என் வயிற்றில் சுமந்து இந்த உலகத்துக்கு ஒரு நல்ல அன்பான உயிரை கொடுக்கனும் என் ஆசை கணவருக்கு என்னுடைய அன்பான உயர்ந்த பரிசு இந்த குழந்தைன்னு நான் நினைக்கிறேன். அதனாலே நான் பெத்துக்கனும் மேடம். உங்க அன்புக்கு என் பிரியமான நன்றிங்க மேடம் என்று கூறி விட்டு வெளியே தலைநிமிர்ந்து நடந்து சென்ற அந்த அழகான இளம் பெண்ணின் செய்கை அந்த பெண் மருத்துவரின் மனதில் விண்ணில் தான் தேவதைகள் இருப்பார்களா !!! இந்த மண்ணிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவளைப் போல் சிறகுகளில்லாத தேவதைகளாக. அந்த அன்பான தேவதையை அதிசயமாக பார்த்தபடி சிலைபோல் அமர்ந்திருந்தார் அந்த பெண் மருத்துவர்.
- கோமகள் குமுதா