வளர்ப்புத்தாயின் வாஞ்சை

“முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்,
குவளை உண்கண் குய் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்,
இனிதெனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே”.

மேலே உள்ள கூடலூர் கிழார் எழுதிய குறுந்தொகை- 167 வது கவிதையின் கருத்தின் அடிப்படையில் எழுதிய கதை .

மாலினி அப்பாவின் செல்ல மகள். மாலுகுட்டி அப்பா ஆபீஸ் கிளம்பறேன் வெளிய வாடா செல்லம் என்று வழக்கம் போல் மகளைக் கொஞ்சி அழைத்த தன் கணவனைப் பார்த்து புன்னகைத்தபடி கோட்டை ஸ்டேண்டிலிருந்து எடுத்து அவன் தோள்புறமாக விரித்து அணிந்து கொள்ள வாகாக பிடித்துக் கொண்ட பானுமதி எப்ப பாரு மாலுகுட்டி மாலுகுட்டி அவளுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்து தனிக்குடித்தனம் வச்சு ஒரு மாசமாச்சு. இன்னும் ஆபீஸ் கிளம்பும் போது தினமும் புருஷன் வீட்டிலிருக்கிற மகளை கூப்பிட்ட எங்கிருந்து வருவா? என்ற தன் மனைவி பானுமதியின் பேச்சைக் கேட்டு சற்று நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார் இராகவன். ஒரே மகள் செல்ல மகள். அவள் பிறந்த போது பானுமதிக்கு கர்பப்பையில் ஏதோ சிக்கல் இருப்பதாக டாக்டர் கூறினார். அதனால் இரண்டாவது குழந்தையே வேண்டாம் என்று தம்பதிகள் முடிவு செய்து மாலினி ஒற்றைக் குழந்தையாக வளர்ந்தாள். ஒரு இளவரசிக்குரிய அத்தனை தகுதிகளுடன் தன் வீட்டில் ஆட்சி செய்தாள் மாலினி. அவள் ஏதாவது வேண்டும் என்று கேட்டதே இல்லை.பார்த்தாலே போதும் மகளுக்கு வாங்கி கொடுத்து விடுவார் இராகவன். மாளிகை போன்ற வீடு.
வெளியே போய் வர ஆளுக்கொரு கார். கல்லூரிக்கு தன் காரிலேயே சென்று வந்தாள் மாலினி. அறிவிலும் அழகிலும் தன் மகளுக்கு இணையாக ஈரேழு பதினான்கு லோகங்களிலும் யாரும் இல்லை என்பது தந்தை இராகவனின் பெருமிதம். அவளைப் பார்த்துக் கொள்ள என்றே தனிப் பணிப்பெண் சந்திரா. பெற்ற தாய் பானுமதியை விட அவள் பிறந்ததிலிருந்து தன் கண்ணின் மணியாக வளர்த்தவள் சந்திரா. திருமணமே செய்து கொள்ளாமல் பானுமதியின் வீட்டில் மாலினியை வளர்க்க தாதியாக வந்த சந்திரா அந்த வீட்டில் மாலினியின் இன்னொரு தாயாகவே கடந்த 25 ஆண்டுகளாக வாழ்கிறாள் என்றால் அது மிகையாகாது.

மாலினி பள்ளிக்கு செல்லும் போது கூடவே அழைத்துச் சென்று மதிய உணவை தானே மாலினிக்கு பிடித்த உண்டி வகைகளை செய்து கொண்டு போய் ஊட்டி விடுவது, விளையாட்டு பயிற்சியின் போது பள்ளியிலேயே எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து குழந்தையை தானே அழைத்துக் கொண்டு வருவாள் சந்திரா. மாலினியும் தன் அம்மாவை விட ஒருபடி மேலாக தன் வளர்ப்புத் தாயை நேசித்தாள். பானுமதியை மம்மி என்றழைப்பாள். ஆனால் சந்திராவை அம்மா என்று தான் அழைப்பாள். கிருஷ்ணனுக்கு யசோதை போல் மாலினிக்கு சந்திராம்மா. மாலினிக்கு திருமணமாகி புகுந்த வீடு சென்ற போது பெற்றவளை விட வளர்த்த சந்திரா அழுத கண்ணீரில் அந்த வீடே மூழ்கிப் போனது. மாலினியும் புருஷன் வீட்டிலிருந்து கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் தன் அம்மாவை அலைபேசியில் கூப்பிட்டு பேசாமல் இருக்கவே மாட்டாள். பானுமதி மகளின் நினைவு வந்தால் தான் அழைத்து பேசும் பொழுதும் பக்கத்திலே சந்திராம்மா இருக்காங்களா? அப்பா இருக்காங்களா என்று மாலினி கேட்டதும் ஏன்டி நான் அழைத்து பேசினால் என்னுடன் பேச உனக்கு ஒன்றுமே இல்லையா? சந்திராம்மா டாடி இவங்க ரெண்டு பேரும் தான் உனக்கு உசத்தி. பத்து மாதம் சுமந்து பெற்ற நான் உனக்கு துச்சமா போயிட்டேனா என்று ஆதங்கப்படும் தன் தாய் பானுமதியை மம்மி நீயும் டாடியும் என் உயிர் ன்னா சந்திராம்மா என் உடல். நீங்க இல்லைன்னா நான் இல்லேம்மா . அழாதே பானுக்குட்டி என்று கொஞ்சி முத்தங்களை சொறிந்து பானுமதியை சமாதானப்படுத்தி விடுவாள். அட திருட்டுக் கழுதை. ஆள் மயக்கி. எப்படியாவது பேசியே என்னை மயக்கிடுவடி நீ என்று மகளை செல்லமாக திட்டுவாள் பானுமதி. ஆனால் உறவுகள் யாருமற்ற சந்திராவை தன் உடன் பிறந்தவளாகவே எண்ணி அன்பு காட்டுபவள் பானுமதி. அவர்களுக்கிடையே கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ஒரு அந்நியோனியமான நட்பு இழையோடியது.
மாலினி திருமணமாகி சென்றது முதல் சரியாக உண்ணாமல் உறங்காமல் உடம்பு பலவீனமடைந்தாள் சந்திரா. மகளுக்கு தலை வாருவது, அவளுக்கு தேவையான துணிமணிகளை எடுத்து வைப்பது, அவளுக்கு நகம் வெட்டி அணியும் உடைகளுக்கு பொறுத்தமாக நெயில் பாலிஷ் இடுவது, விரும்பிய உணவு வகைகளை தயாரித்துக் கொடுப்பது இப்படி இருபத்தி நாலு மணி நேரமும் மாலினியைச் சுற்றியே தன் உலகத்தை அமைத்துக் கொண்ட சந்திரா மாலினி திருமணமாகி புகுந்த வீடு சென்றதும் தனக்கு யாருமே இல்லாமல் திடீரென்று தான் அநாதையாகி விட்டாற் போல் எதிலும் பற்றற்ற ஒரு தனிமையை வெறுமையை உணர்ந்தாள் சந்திரா. பானுமதி தன் கணவனையும் சந்திராவையும் கிண்டல் செய்த போதும் அவளுக்கும் இருபத்தி ஐந்து ஆண்டுகள் பெற்று வளர்த்த மகளை பாராமல் இருப்பது மிகவும் கஷ்டமாகவே இருந்தது. என்ன செய்ய முடியும்? பெண்ணை பெற்றவர்கள் எப்பொழுதும் இந்த பிரிவிற்க்குத் தங்களை பழக்கி கொள்வதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது என்று மனதில் வருந்தியபடி கணவன் ஆபீஸ் சென்றதும் ஏதும் உண்ணாமல் படுத்தே கிடந்த சந்திராவின் அறைக்கு ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜீசை எடுத்துச் சென்றாள் பானுமதி.

சந்திரா படுக்கையில் கிடந்த கோலத்தைப் பார்த்து அறை விளக்கைப் போட்டு ஏய் சந்திரா என்னடி நீ இப்படியே ஒன்னும் சாப்பிடாம கிடந்தா உன் செல்ல மகளுக்கு யார் பதில் சொல்றது. இந்த ஜீசைக்குடி. எழுந்திருடி சந்திரா என்று தன் தோழியை வேண்டினாள் பானுமதி. பானு எனக்கு மாலுகுட்டியை பார்க்காமல் இருக்கவே முடியலை. நான் இன்னிக்கி மாலு வீட்டிற்க்கு போயிட்டு வரட்டுமா ப்ளீஸ் பானு என்று தன்னைக் கெஞ்சிய சந்திராவை அன்புடன் பார்த்த பானு நீ இப்படியே உன் மகளைப் போய் தினமும் பார்த்திட்டே இருந்தால் அவ புகுந்த வீட்டில் புருஷனுடன் பழகி நல்லபடியாக வாழ்க்கை நடத்துவது எப்படி? வாழற புள்ளைய தாயார் கெடுத்த கதை ஆயிடுமே என்று கூறிய பானுமதியை பார்த்து ஆமாம்பா நான் செய்யறது பெரிய தப்புதான். நீ சொல்றது கரெக்ட் தான் பானு சாரிபா என்றாள் சந்திரா.
சந்திராவின் வாடிய முகத்தைக் காண சகிக்காமல் சரி நீ இன்னிக்கு மாலு வீட்டுக்கு போய் சாயந்திரம் வரை அவளோடு இருந்துட்டு அவ புருஷன் வந்ததும் நம்ம வீட்டுக்கு அடுத்த வாரம் மாலுவை கூட்டிட்டு வரச்சொல்லிட்டு வா சரியா?
உடனே படுக்கையிலிருந்து துள்ளி எழுந்த சந்திரா பானு கையிலிருந்த ஜீசை வாங்கி ஒரு நொடியில் குடித்து விட்டு குளித்து உடை மாற்றி மகள் வீட்டுக்கு கிளம்ப குளியலறை நோக்கி வேகமாக ஓடினாள் சந்திரா.

மெல்ல மெல்ல கீழே விழுந்துடாதடி சந்திரா என்று தன் தோழியை கேலி செய்தாள் பானுமதி. மகளுக்குப் பிடித்த பால் அல்வாவை தானே செய்து ஒரு தூக்கில் எடுத்துக் கொண்டு சந்திரா கிளம்பியதும் டிரைவர் மாலு வீட்டுக்கு போயிட்டு சாயந்திரம் வரை அங்கேயே காத்திருந்து சந்திராம்மாவை பத்திரமா அழைச்சிட்டு வாப்பா என்று டிரைவரை ஏவினாள் பானுமதி.

சந்திரா வருவதை முன்கூட்டியே அலைபேசியில் பானுமதி மகளிடம் தெரிவித்தாள். சந்திரா சென்ற கார் மாலினியின் வீட்டை அடைந்ததும் தன்னை வரவேற்க வெளியே மான் போல் ஓடி வந்த மகளைக் கண்டதும் பேரானந்தம் அடைந்தாள் சந்திரா. மாலு குட்டி தங்கம் எப்படி இருக்கே கண்ணு என்று அன்பு குரலில் வழிந்தோட மகளை அணைத்துக் கொண்டு கண் கலங்கினாள் சந்திரா. அம்மா ப்ளீஸ் அழாதிங்கமா. நான் நல்லா இருக்கேன். நீங்க ஏன் இப்படி இளைச்சு ஒல்லியாயிட்டிங்க. ஒன்னுமே சாப்பிடறதில்லையா? ஏம்மா? எனக்கு கோபம் வருது போங்கம்மா. இன்னிக்கு நான் தரதையெல்லாம் ஒன்னுவிடாம சாப்பிடனும். ஏதாவது வேண்டான்னிங்க நான் உங்க கூட பேச மாட்டேன் என்று போலி கோபத்துடன் மிரட்டிய தன் அன்பு மகளை பார்த்து ஆகட்டும் மகளே. நீ என்ன கொடுத்தாலும் சாப்பிடறேன்டி செல்லம். அம்மாகிட்டே பேசமாட்டேன்னு மட்டும் சொல்லாதே செல்லம் என்று மாலினியைக் கொஞ்சினாள் சந்திரா.

காபியா ஜீசா என்ன வேணும்மா என்று தன்னை வினவிய மகளை உனக்கு பிடிச்சதை குடு கண்ணு என்ற சந்திராவை புன்னகையுடன் நோக்கி லெமன் ஜீஸ் ஓகே என்று ஓடிச் சென்று எடுத்து வந்தாள் மாலினி. மதிய உணவு தன் கையாலேயே சமைத்து தன் வளர்ப்புத் தாய்க்கு பிரியமுடன் பரிமாறினாள் மாலினி. பிறந்த வீட்டில் ஒரு டம்ளர் பாலைக் கூட அளவாக சர்க்கரை போட்டு குடிக்கத் தெரியாமலிருந்த தன் மகள் எவ்வளவு நேர்த்தியாக சமைக்கிறாள். எவ்வளவு அழகாக அன்பாக உணவை தனக்கு பரிமாறுகிறாள். இவ்வளவு ருசியாக சமைக்க எப்படி யாரிடம் கற்றுக் கொண்டாய் செல்லக்குட்டி என்று தன் மகளைக் கொஞ்சி பூரித்தாள் அந்த வளர்ப்புத் தாய். அம்மா எல்லாம் உங்ககிட்டே மம்மிகிட்டே போனில் கேட்டு தான் செய்யப் பழகிட்டேன் என்று கூறிய மகளை வியப்புடன் பார்த்தாள் சந்திரா. தன் கைகளை பிடித்திருந்த மகளின் கை விரல்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் சந்திரா. என்னடா நகமெல்லாம் ஒடஞ்சு போயிறுக்கு? நெயில் பாலிஷ் போட்டுகிறதில்லையா கண்ணு? தலையிலே எண்ணை கூட தேய்க்கலை ஏன்டா என்று மகளின் விரல்களையும் தலையையும் பார்த்து கவலையுடன் விசாரித்தாள் சந்திரா. அதெல்லாம் பியூட்டி பார்லர் போய் பண்ணிக்கலாம்மா. இதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலை படறிங்க. கூல் மா கூல் என்று சந்திராவை பார்த்து சிரித்தாள் மாலினி. சரிம்மா நீங்க போய் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோங்க. நான் உங்க மாப்பிள்ளைக்கு பிடிச்ச கத்திரிக்கா வதக்கல் அவர் சாயந்திரம் வீட்டுக்கு வரதுக்குள்ளே செய்யப் போறேன். அந்த டிஷ் அவருக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியபடி சந்திராவை விருந்தினர் அறையில் ஓய்வெடுக்கச் சொல்லி சமையலறைக்கு சென்றாள் மாலினி.

உடல் பலவீனத்தால் சோர்ந்த சந்திரா சிறிது நேரம் படுக்கையில் படுத்திருந்தாள். பத்து நிமிடத்திற்க்கு பிறகு படுத்து கிடக்க முடியாமல் தன் வளர்ப்பு மகள் சமைக்கும் அழகைக் காண ஆவலுடன் சமையலறைக்குள் சென்றாள் சந்திரா. அங்கே மும்முரமாக கத்தரிக்காய்களை கழுவி புதுமாதிரியாக பூப்போல கவனமாக வெட்டிக் கொண்டிருந்தாள் மாலினி. கைவிரல்கள் தொடர்ந்து கத்தரிக்காய்களை நறுக்கியதால் கறுப்பாக கரை படிந்தது. முகத்தில் வியர்வை வழிந்தது. எப்பொழுதும் கையில் கைக்குட்டை வைத்திருக்கும் தன் மகள் இப்பொழுது முகத்தில் வழிந்த வியர்வையை தன் சேலை முந்தானையில் துடைத்துக் கொண்டு மகள் வேலை செய்யும் அழகைக் கண்டு சந்திரா வியப்புடன் பார்த்து மனதில் மகிழ்ச்சியும் கணவனுக்காக சிரத்தையுடன் சமைக்கும் அவள் அன்பையும் பார்த்து பேருவுவகை அடைந்தாள். கற்றுத்தராமலேயே அவள் குடும்பம் நடத்தும் பாங்கைக் கண்டு மிகவும் ரசித்தாள். மாலையில் வேலை முடிந்து வரப்போகும் கணவனுக்காக கவனமாக சமைத்துக் கொண்டிருந்த மாலினி சத்தமில்லாமல் தன் பின்னால் அமர்ந்து தன்னையே பார்த்து புன்னகையுடன் அமர்ந்திருந்த தன் வளர்ப்புத் தாயைப் பார்த்து அம்மா நீங்க ஓய்வெடுக்கலையா? எப்ப வந்தீங்க? வேலை மும்முரத்தில் உங்களைக் கவனிக்கவில்லை மா என்று தன்னைக் கொஞ்சிப் பேசி சமாதானம் செய்யும் செல்ல மகளின் அன்பைக் கண்டு மனம் மகிழ்ச்சியில் பொங்க புன்னகையுடன் அமைதியாக அமர்ந்திருந்தாள் சந்திரா.

மாலை வீடு திரும்பிய மாப்பிள்ளை மனைவி சமைத்த கத்தரிக்காய் வதக்கலை ஆசையுடன் எடுத்து சாப்பிடுவதையும் மகள் முகத்தில் மகிழ்ச்சி பொங்க அதை காதலுடன் ரசிப்பதையும் பார்த்து பார்த்து மனம் பூரித்தாள் சந்திரா. மாப்பிள்ளையையும் மகளையும் அடுத்த வார விருந்திற்க்கு அழைத்தாள் சந்திரா. வருவதாக மாப்பிள்ளை உறுதி கூறியதும் மகிழ்வுடன் கிளம்பினாள் சந்திரா.

தன் மகள் குடும்பம் நடத்தும் பாங்கை சந்திரா விடிய விடிய சொல்ல மாலினியின் தாய் பானுமதி கேட்டு மனம் பூரித்தாள். பெற்றதாயும் வளர்ப்புத் தாயும் அடைந்த மனமகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஆக்கம்
கோமகள் குமுதா.

Advertisement

2 thoughts on “வளர்ப்புத்தாயின் வாஞ்சை

  1. வெகு சிறப்பு..
    தாயைப்போல பிள்ளை,
    நூலைப்போல சேலைன்னு நல்லாத்தான் சொல்லி வச்சாங்க.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: