
குறிஞ்சித் தூது❤️
ஔவை பாடிய அகவன் மகளே அடி எனதருமை கட்டுவிச்சி ( குறி சொல்பவள் ) நீ பாடிய பாட்டை மீண்டும் மீண்டும் பாடடி உன் பாட்டில் அவர் இருக்கும் நன்னெடுங் குன்றம் பெயரையாவது என் செவிகள் கேட்கட்டும். கன்னி என் மனசு படும்பாட்டை தலைவனிடம் தூது போய் பாடடி என் அன்புக் கட்டுவிச்சி.
முல்லைத் தூது ❤️
புதுப்பூங்கொன்றைப்பூத்தது. புதுமாரிக் காலம் வந்தது என்று ஊரார் உரைத்தாலும் யான் தேறேன்.
சரக்கொன்றை பூக்கும் முன் சாரல் மழை பெய்யும்முன் வருவேன் என்றார். அவர் பொய் வழங்கலரே என் தோழி. என் துயரை தூது சென்று உரைத்திடுவாய் உயிரான என் தோழி.
மருதத் தூது❤️
கண்ணீரில் கரைவதையும் நித்திரை மறந்த என் கண்களையும் யார் அறிவார்.
கார்கால நள்ளிரவில் ஈயின் இம்சை தாளாமல் எருது தலையசைக்க கழுத்துமணியின் சப்தம் கேட்கும் ஊர் உறங்கும் நடுசாம வேளையிலே ஒத்தையிலே நித்திரையில்லாமே தவிக்கிற என் தவிப்பை ஏரில் பூட்டிய எருதே நீ தூது போய் சொல்வாயோ
நெய்தல் தூது❤️
ஓடைநீரில் ஆரல் மீனைத்தேடும் வெண் கொக்கே
என்னோடு அவன் கூடிப்பிரிந்து சென்றதை நீ அறிவாயே
மன்னவனைப் பிரிந்ததால் மாந்தளிர்மேனி நிறம்மாறி பீர்க்கம்பூ நிறமாச்சுதே. பசலை நோய் பற்றியதே.பறந்து சென்று அவனிடும் தூது சொல்லு என்னருமை வெண்கொக்கே.
பாலைத் தூது ❤️
கள்ளிக்காட்டுப் பாலையிலே நீ நடந்து போகையிலே செங்கால் பல்லி தன் சோடியத் தேடி தான் எழுப்பும் ஓசையிலே என் மன ஓசையை நீ கேட்கலையோ என் ஆசை மன்னவனே.செங்கால் பல்லியும் தான் தூது சொல்லலையோ மன்னவனே.
கோமகள் குமுதா