
சித்திரக்காரா இந்தச் சில் சிலாக்கியின் மனங்கவர்ந்த சித்திரக்காரா !!!
எண்ணக்கலவையில் உன் ஆசைத்தூரிகை தோய்த்து எனை நிதமும் எழுதும் ஓவியக்காரா!!!
இலைமறை காய்போல் என்னழகை எழுதும் உன் விரல்தூரிகை தொட்டதும் எனைத் துவளவைக்கும் மந்திரக்கோலா !!!
உன் செப்படி வித்தைகளை வண்ணங்குழைத்து என் மெய்யெழுதும் மந்திரக்காரா !!!
யாரும் கண்டிராத வண்ணங்களை என் மேனியில் குழைத்து பூசி எனை மயக்கும் மாயக்காரா!!!
மதிமுகம் என்கிறாய் வெண்ணிலவில் சாறெடுத்தாயோ!!!
கட்டிவைத்த கார்குழல் என்கிறாய்
கார்மேகத்துளி கொஞ்சம் கலந்தாயோ!!!
கொவ்வைச் செவ்வாய் என்கிறாய் கொவ்வைச்சாறு கலந்தாயோ!!!
தங்கப்பூ மேனி என்கிறாய் கட்டித் தங்கம் வெட்டியெடுத்துக் கலந்தாயோ!!!
மின்னலிடை என்கிறாய் மின்னலை எப்படி பிடித்தாய் உன் விரல்தூரிகையில்!!!
மடல் வாழைத்தொடை என்கிறாய் வாழைச்சாறும் கலந்தாயோ!!!
எப்படி !!! எப்படி!!! உன் ஓவியப்பாவை என்னை விடப் பேரழகாய் பிறந்தாள்!!!
சித்திரக்காரா சொல் உன் தூரிகையின் நேசத்தாலா!!!
கோமகள் குமுதா