
உன் சிங்கார மழலை கேட்க அந்தச் சிவனே வருவான் என் கண்ணே கண்மணியே
ம்மா….ம்மா…என்று செல்லமாய் நீ அழைத்தால் உள்ளம் நிறையுமே என் கட்டிக் கரும்பே கனியமுதே
உன் செம்பவழ வாய் திறந்து என் செவி குளிர கூவடி என் குலக்குயிலே.
அழகு மயிலுக்கு அகவை ஐந்தாகியும்
வெங்கல மணியாய்
கிண்கிணியாய் இசைக்கவில்லையே என் ஊமைக்குயில்
அம்மா என்றழைக்க என் செல்லக்கிளிக்கு நீயும் கற்றுத்தர மாட்டாயா பசுங்கிளியே.
பாலும் பழமும் நான் தருவேன் பச்சைகிளி உனக்கு
நான் பெற்ற பைங்கிளிக்கு ஒரு சொல் அந்த ஒரு சொல் சொல்லிக் கொடு வண்ணக்கிளியே.
கோமகள் குமுதா