“சாப்பிடு குட்டி. ஸ்கூலுக்கு டைம் ஆகுது.உன் லஞ்ச் பேக் ரெடி.கொஞ்சம் பால் குடிக்கிறியா? குட் கேர்ள்”. சின்னஞ்சிறிய கர்ஷீப் வைத்து தன் டெட்டியின் வாயை துடைத்து பின்னர் அதை அள்ளி அணைத்து முத்தமிட்டு தூக்கியபடி
“அம்மா பாப்பாவும் டெட்டி குட்டியும் ரெடி” என்று முதல் முறையாக பள்ளிக்குச் செல்ல தயாரானாள் விபு செல்லக்கிளி.
காரில் தன் மடிமேல் உட்காரவைத்துக் கொண்டு முதல் நாள் பள்ளி எப்படி இருக்குமோ யார் இருப்பார்களோ தன் அம்மா உடன் இருப்பாளோ மாட்டாளோ என்று பலவாறு எண்ணி கலங்கியபடி தன் டெட்டியை இறுகபிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தது அந்தப் பூந்தளிர்.
“விபு ஸ்கூல் வந்தாச்சு செல்லம்.டெட்டிகுட்டி பத்திரமா காரிலேயே இருக்கட்டும்.நாம ஸ்கூலுக்குள்ளே போலாமா?” என்ற தன் அம்மாவை கண்கள் கலங்க பார்த்த விபு “டெட்டிகுட்டி அழாதே நான் ஸ்கூலுக்கு போயிட்டு சீக்கிரம் வந்திடுவேன்.நீ அழாதே அழாதே” என்று கூறியபடி கண்ணீர் வராத பொம்மையின் கண்களை தன் பிஞ்சு விரலால் துடைத்தபடி அழுதாள் விபு.
“அம்மா டெட்டிகுட்டியை பத்திரமா பாத்துக்கோங்க. மத்தியானம் லஞ்ச் சாப்பிட வைங்க. நா…….நா….. ம்மா பயமாயிருக்குமா ஸ்கூலுக்கு நாளைக்கு போலம்மா. டெட்டியையும் கூட்டிட்டு போலாம்மா “என்று அழுது கேவிய தன் மகளைப் பார்த்து அந்த இளந்தாய் தானும் அழுதாள்.
“சரிவா டெட்டியையும் கூட்டிட்டு போலாம்” என்றதும் உடனே தன் பொம்மையை அள்ளி இறுக அணைத்தபடி சிரித்தாள் விபுகுட்டி.
வகுப்பறைக்குள் சென்றதும் அங்கே நிறைய குழந்தைகள் அழுவதைக் கண்டு கண்கள் கலங்க ” மிஸ் எங்குழந்தையை பத்திரமா பார்த்துக்கோங்க. அவளை திட்டாதிங்க. அடிச்சிடாதிங்க . ப்ளீஸ் நானும் இன்னைக்கு மட்டும் அவகூடவே இருக்கட்டுமா?” என்று அழுதபடி கெஞ்சிய அந்த இளந்தாயை “சாரிமா நீங்க இங்கே இருக்க கூடாது. நான் பார்த்துக்கிறேன் . நீங்க கிளம்புங்க. மதியம் 12:30 க்கு வாங்க “என்று கூறினார் அந்த எல் .கே. ஜி ஆசிரியை.
டெட்டியை இறுக்கி அணைத்தபடி அழுத தன் செல்ல குட்டி மகளைப் பார்த்து தானும் இதே போல் முதல் நாள் பள்ளியில் தன் பொம்மையை அணைத்துக் கொண்டு அழுத நினைவு வர தன் மனதை ஒருவாறு தேற்றிக் கொண்டு முதன்முறையாக தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல் அழுது கொண்டே அதே பள்ளியில் உள்ள +2 வகுப்பறைக்கு சென்றாள் அந்த ஆசிரியை.
கோமகள் குமுதா
