அத்தியாயம் — 1
அன்று காலை தான் வேலை செய்யும் கொரியன் உணவகத்தின் உரிமையாளரை கைபேசியில் அழைத்து இரண்டு நாட்கள் தனக்கு விடுமுறை வேண்டும் என்று ஷகுரா கேட்டாள். “என்ன மகளே ஏதாவது உடல் நலம் சரியில்லையா? . பணம் வேண்டுமா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா? வேண்டும் என்றால் இன்னும் இரண்டு நாட்கள் சேர்த்தே விடுமுறை எடுத்துக் கொள் ஷகு டார்லிங் என்று அவளை அக்கறையுடன் விசாரித்த 70 வயதான முதியவர் முங்ஷிக்கு குழந்தைகள் இல்லை. கொரியாவிலேயே இருந்தால் தன் மனைவி குழந்தைக்காக அனுதினமும் ஏங்கி ஏங்கி நோய்வாய் பட்டு இறந்து விடுவாள் என்பதை உணர்ந்து தன் சொத்து வியாபாரம் எல்லாவற்றையும் விற்று விட்டு மனைவியை அழைத்துக் கொண்டு பல நாடுகளுக்கும் சுற்றுலா சென்றவருக்கு கனடாவை மிகவும் பிடித்துப் போனது. அதுவும் குறிப்பாக எப்பொழுதும் இதமான தட்பவெப்ப நிலை உள்ள வான்கூவர் நகரத்தை முங்ஷிக்கு மிகவும் பிடித்திருந்தது. ஃபிரேஷர் ஆற்றோரத்தில் அழகாக அதே சமயத்தில் லாபகரமாக இயங்கிக் கொண்டிருந்த உணவகம் ஒன்று விற்பனைக்கு வந்தது. அதை விலைக்கு வாங்கி தன் மனைவி எமிலியோடு கனடா நாட்டு குடிமக்களாக மாறி மகிழ்ச்சியாக புதிய இடத்தில் வாழத் தொடங்கினர். அந்த வருடம் வரப்போகும் எமிலியின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு தரலாம் என்று சிந்தித்த முங்ஷி அவளது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார். பிறந்த ஊரான சியோலுக்குச் சென்று மீதமிருந்த சொத்துக் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு சியோலில் இருந்த ஒரு அநாதை குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றார். அந்தக் காப்பகத்திலிருந்து எட்டு வயதான ஒரு அழகான பெண் குழந்தையை முறைப்படி சட்டரீதியாக தன் குடும்ப விவரங்களை தந்து மகளாக தத்தெடுத்துக் கொண்டார். தன் மனைவிக்குப் பிறந்த நாள் பரிசாக அவள் நெடு நாட்களாக விரும்பும் குழந்தைச் செல்வத்தை பரிசாக அளிக்க வீட்டிற்கு அழைத்து வந்தார். குழந்தைக்காக ஏங்கிய எமிலியின் கண்களுக்கு ஷகுரா பேரழகான ஒரு தேவதையாகவே காட்சி அளித்தாள்.

அன்று காலையில் எழுந்ததிலிருந்தே ஷகுராவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை. தன் அறையின் சன்னலைத் திறந்ததும் வெளியே தெரிந்த காட்சி அவள் இதயத்தை நொறுக்கி கசக்கிக் பிழிந்தது. வெண்மை, இளஞ்சிவப்பு, பிறந்த குழந்தையின் மென் சிவப்பு போன்ற நிறங்களில் பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் இலைகளே இல்லாமல் மரம் முழுவதும் கொத்துக் கொத்தாக பேரழகான செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கின. ஏப்ரல் மே மாத இளவேனிற் காலத்தில் மலர்ந்து அதிக பட்சம் இரண்டு வாரங்கள் பூத்துக் குலுங்கி உதிர்ந்து விடும், பார்க்கும் அனைவருக்கும் பரவசத்தையும் மகிழ்ச்சியையும் தரும் இந்த செர்ரி மலர்கள் ஷகுராவிற்கு மட்டும் ஏன் இவ்வளவு துக்கத்தையும் சோகத்தையும் தருகிறது.
தொடரும்…….
கோமகள் குமுதா