ஷகுரா–அத்தியாயம்–2

ஜப்பானிய பெண்ணான சூயி க்கும்  கொரியாவைச் சேர்ந்த ருன்யு என்ற  ஆண் மகனுக்கும் ஏற்பட்ட  காதலில் மலர்ந்த அழகு மலர் தான் ஷகுரா. ஷகுராவின் அம்மா தன் மகளுக்கு  ஜப்பானியர்கள் அனைவருக்கும் பிடித்த மலரான ஷகுரா என்ற மலரின் பெயரையே தன் மகளுக்கும் சூட்டினாள் . செர்ரி மலர்களைத் தான் ஜப்பானிய மொழியில் ஷகுரா என்று அழைப்பார்கள். அழகான தங்கள் காதலுக்கு அச்சாரமாக இளவேனில் காலத்தில்  தொட்டால்   சிவக்கும் இளஞ்சிவப்பு நிறத்தில்  பொம்மை போல அழகாக  பிறந்த தன் ஆசை மகளுக்கு வருடந்தோறும் அதே இளவேனிலில் மலரும் ஷகுராவையே  (செர்ரி)  பெயராகச் சூட்டினாள் ஷகுராவின் தாய் சூயி.

ஷகுரா பிறந்து வளர வளர பார்ப்பவர்களின் மனதை மயக்கும் செர்ரி மலர்களைப் போல பேரழகியாக திகழ்ந்தாள். அவளுக்கு எட்டு வயதான பொழுது ஹனாமி திருவிழாவிற்கு பெற்றோருடன் ஜப்பானுக்கு சென்றிருந்தாள்.  ஜப்பானில் வருடந்தோறும் செர்ரி மலர்கள் பூத்திருப்பதைக் காண மக்கள் பகலிலும் இரவிலும் எந்நேரமும் ஏதாவது ஒரு காரணத்தை ஏற்படுத்திக் கொண்டு செர்ரி மலர்கள் பூத்த மரங்களுக்கு அடியில் அமர்ந்து உண்பது விளையாடுவது என்று அதை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். இது ஜப்பானின் ஆயிரம் வருட பழமையான கொண்டாட்டம் ஆகும் . இதை ஹனாமி  திருவிழா என்று அழைப்பார்கள். ஹனாமி என்றால் செர்ரி மலர்களைப் பார்ப்பது என்று பொருள். காதலர்கள் இரவிலும் கூட செர்ரி மலர்களைக் காணச் கூடுவார்கள். இரவில் செர்ரி மலர் பார்ப்பதை ‘ யோஜகுரா’ என்று கூறுவார்கள். அப்படி  இரவில் செர்ரி மலர்களைக் காண தாங்கள் தங்கியிருந்த விடுதியின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஷகுராவை விட்டு விட்டு தம்பதிகள் இருவரும் விடுதியின்  அருகிலிருந்த செர்ரி மலர்கள்  பூத்த மரங்கள் நிறைந்த மலைப் பள்ளத்தாக்கில் இறங்கி நடந்தே சென்றனர். நள்ளிரவு தாண்டி விடுதிக்கு திரும்பும் வழியில் பிரேக் பழுதடைந்து கட்டுப்பாடின்றி மலைப்பாதையில் கொண்டையூசி வளைவில்  வேகமாக வந்த கார் மோதி ஷகுராவின் பெற்றோர் இருவரும் மலையின் மிக ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து உடல்களைக் கூட கண்டு பிடிக்க முடியாத மிகவும் பயங்கரமான  கோரமான மரணத்தை தழுவிக் கொண்டார்கள். விடுதியில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த எட்டு வயதுச் சிறுமியான ஷகுராவிற்கு தன் பெற்றோர் எங்கே என்ன ஆனார்கள் என்று ஒன்றும் விளங்காமல் தேம்பித் தேம்பி அழுது மயங்கிக் கிடந்தாள். விடுதியின் உரிமையாளர் அந்த சின்னஞ்சிறு குழந்தைக்கு ஏற்பட்ட இதயம் நொறுங்கும் பெரிய வலியைத் தேற்ற வழியின்றி தவித்தார். அவளுடைய வீட்டு விலாசம் உறவினர்கள் பற்றி விசாரித்து காதலித்து மணந்த அவளுடைய பெற்றோர்களுக்கு உறவினர்  யாரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டனர். அவளுடைய பிறந்த நாடான   கொரியாவில் சியோலில் உள்ள ஒரு அநாதைக் குழந்தைகள் காப்பகத்திற்கு  அந்த நாட்டு தூதரகத்தின்  அனுமதியோடு ஜப்பானின் சர்வதேச காவலர்கள் அமைப்பு ஷகுராவை அனுப்பி வைத்தனர்.

அந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு  ஷகுரா வந்ததலிருந்து யாரோடும் எதுவும் பேசாமல் அழுவதும்  தேற்றுவாரின்றி தானே ஓய்ந்து தூங்குவதுமாக நாட்கள் ஓடியது. அங்கிருந்த காப்பாளர்  ஷியன்சி முதிர்ந்த வயதான பெண்மணி. இது போல பெற்றோர் உற்றாரை இழந்த  நிறைய குழந்தைகளைப் பார்த்து தானும் அழுதழுது மனம் கரைபவர் தான். அந்த பிஞ்சுக் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அவருக்கே உண்ண உறங்க முடியாமல் தவித்தார். அந்தக் குழந்தை தூக்கத்தில் கூட அம்மா அப்பா என்று அரற்றி அழுவதைக் காணச்  சகிக்காமல் செய்வதறியாமல் தானும்  கலங்கினார். அந்தக் குழந்தைக்கு ஆறுதல் தர வேண்டும் என்று இறைவனிடம் இடைவிடாது மன்றாடினார் ஷியன்சி. வளரும் குழந்தையின் அழகையும் அறிவையும் காண  அவள் பெற்றோர் இல்லாததை எண்ணி மனம்  நொந்து  நைந்தார். ஷியன்சி தனக்குத் தெரிந்த வேறு குழந்தைகள் காப்பகத்திற்கு ஷகுராவைப் பற்றி கூறி யாராவது தத்தெடுக்க விரும்பினால் தனக்கு தெரிவிக்கச் சொல்லி வேண்டினார். ஷகுரா தன் பெற்றோரை இழந்து இரண்டு  மாதங்கள் ஓடிவிட்டது. காலம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. இனிமேல் தன்னைக் காண, வீட்டிற்கு அழைத்துச் செல்ல, உணவூட்டி கொஞ்சிப் பேச தன்னோடு விளையாட   அம்மாவும் அப்பாவும் வரவே மாட்டார்கள் என்பதை அந்த பிஞ்சு இதயம் எப்படியோ கண்டு கொண்டது. அவ்வப் போது தான் தூங்கி எழும் வேளையில் தன் அருகில் அமர்ந்து தலையைத் தடவி பால், பழரசம், சூப் என்று எதையாவது குடிக்க வைக்கும்  அந்த காப்பகத்தின் பாட்டியின் பின்னாலேயே கையில் தன் கரடி பொம்மையை அணைத்தபடி சுற்றிக் கொண்டிருந்தாள் ஷகுரா.
ஆறு மாதங்களாயிற்று. அன்று காலையிலிருந்தே காப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியோடு தன் அலுவலக அறையில் யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தார். முங்ஷி என்ற அந்த மனிதரைப் பார்த்ததும் குழந்தைகள் காப்பகத்தின் காப்பாளருக்கு மிகவும் பிடித்திருந்தது. தன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த அந்த எட்டு வயதான அழகான  செர்ரி மலருக்கு ஏற்ற காப்பாளர் முங்ஷி தான் என்று அறிந்து அகமகிழ்ந்தார். அவரை அங்கு அனுப்பி வைத்த இறைவனுக்கு தன் உளமார நன்றி தெரிவித்தார். எல்லா விவரங்களையும் முறைப்படி பெற்றுக் கொண்டு அந்த வண்ணமலரை வசந்தத்தில் பூத்த ஷகுராவை நெஞ்சோடு அணைத்து முத்தம் தந்து  அவளைப் பிரிவதால் இதயம் அழுதாலும் அந்தக் குழந்தையின் எதிர்கால வாழ்வை எண்ணி  முங்ஷியுடன் கனடாவுக்கு மகிழ்ச்சியாக  வழி அனுப்பி வைத்தார் காப்பகத்தின் அந்த வயதான பெண்மணி ஷியன்சி .

தொடரும்…….

2 thoughts on “ஷகுரா–அத்தியாயம்–2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: