காலைப் பனியில் நனைந்த ரோஜாக்களின் அழகில் மயங்கி கண்கள் மூடி அதன் அருகே சென்றேன்
என் முகத்தில் பன்னீரைத் தெளித்து என்னைச் சிலிர்க்க வைத்தது!!குளித்தவுடன் நீர் சொட்டச் சொட்ட உன் தலையை என் முகத்தருகே கொண்டு வந்து ஆட்டுவாயே அப்போது என் மேனியில் ஏற்படும் அதே சிலிர்ப்பு
இப்படித் தலையாட்ட இந்த ரோஜாக்களுக்கு எப்படி தெரிந்தது!!
நீ தான் சொல்லிக் கொடுத்தாயா என் இதய ராஜா♥️

கீச் கீச் என்று கூவிக் கொண்டு மலருக்கு மலர் தாவித் தாவி தேன் எடுக்கும் தேன்சிட்டுக்கு மலர்களை முத்தமிடுவது எப்படி என்று நீ தான் கற்றுக் கொடுத்தாயா என் பிரியனே அது அங்குமிங்கும் பறந்து
உன்னை நினைவு படுத்தி என்னைப் பாடாய் படுத்துதே ஏனடா

உனக்கும் எனக்குமான ரகசியங்களை இப்படி இன்னும் எத்தனை பேரிடம் சொல்லி இருக்கிறாய்
என் இதயத்தைத் திருடிய கள்வனே♥️
என்னைத் தவிக்க விட்டு நீ எங்கே சென்றாயடா
என்னை வதைக்கும் இந்த ரோஜாக்களும் தேன்சிட்டும் உன் ரகசியக் கூட்டாளிகளா?
ஏதும் பேசாமல் தலையாட்டும் ரோஜாக்களே
கீச் கீச் என்று மலர்களை முத்தமிடும் தேன்சிட்டே என் மேல் இரக்கம் காட்ட மாட்டிர்களா?
இரக்கமின்றி என்னைத் தனியாகத் தவிக்க விட்டுப் போன உங்கள் தலைவனைப் போலவே நீங்களும் இதயமற்றவர்களா?
ரோஜாக்களே பேசுங்கள்
தேன்சிட்டே பதில் சொல்.
கோமகள் குமுதா