அன்பு செய்வது எப்படி

அன்பு என்றால் என்ன?
நீ சாப்பிட நான் சமைப்பதா?
அல்லது நான் சாப்பிட நீ சமைப்பதா?
அல்லது இருவரும் சாப்பிட வேறு யாராவது சமைத்து தருவதா?
நீ உண்ண, உறங்க, இன்பம் துய்க்க நான் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து பொருளும் ஈட்டி குழந்தைகளையும் பெற்று வளர்த்து பேணி காத்து குடும்ப குத்து விளக்காக இருப்பது தான் அன்பு செய்வதா?
வீட்டில் இருப்பதை பகிர்ந்து அனைவருக்கும் கொடுத்து விட்டு வயிற்றில் பசியோடும் பிள்ளையோடும் உன் கவலைகளைப் போக்க நான் சலித்தால் வேறு பெண்களை நாடிச் செல்லவும் குடித்து குடித்து கனவுலகத்தில் மிதக்கவும் தடை சொல்லாமல் அமைதி காப்பது தான் அன்பு செய்வதா?
வெளியே வேலைக்குச் சென்று பணம் சம்பாதித்து வீடுவந்து சமைத்து தருவதை உப்பில்லை உரப்பில்லை சமைக்கத் துப்பில்லை என்று என் முகத்தில் காறி உமிழ்ந்து என் மேல் தட்டை வீசி எறியும் போது தாங்கிக் கொள்வது தான் அன்பு செய்வதா?
அடுத்த குழந்தை பிறந்தால் இனி கிழித்து தைக்க வயிற்றில் இடமில்லை என்றாலும் என்னை மீண்டும் தாயாக்கியதற்கு உன் கால்களில் விழுந்து என்னை நன்றி கூறச் சொன்னார்களே உற்றாரும் மற்றவர்களும் அது தான் அன்பு செய்வதா?
உன்னைப் பெற்றவர்களுக்கு நீ கடன்படாமல் என்னைக் கடனாளியாக மாற்றிக் கொண்டு என் ஆயுள் வரை என்னைப் பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களையும் காண்பதற்கே உன் அனுமதி வேண்டி நிற்பது தான் அன்பு செய்வதா?
பெற்ற குழந்தைகளை ஏறெடுத்தும் நீ பார்க்க மாட்டாய். அவர்களைப் பெறாவிட்டால் நான் மலடி
பெற்று பொறுப்பாக வளர்க்கவில்லை என்றால் பொறுமை இல்லாதவள் குடும்ப பெருமை தெரியாதவள் என்று ஊரார் வசைபாடுவதை ஏற்றுக் கொண்டு கண்ணீர் சிந்தினால் நீலி என்று நீ பேசுவதையும் பொறுத்துக் கொள்வது தான் அன்பு செய்வதா?
உன் மகிழ்ச்சிக்கும் உல்லாசத்திற்கும் நீ கடன் வாங்கி அனுபவித்ததை நான் ஏற்று இரவு பகல் பாராது உடல் நோக உழைத்து பொருள் ஈட்டி கொடுத்து மாத விலக்கான நாட்களில் கூட உன் உடல் பசிக்கு என்னால் ஈடு கொடுக்க இயலாமல் உதிரம் ஆறாக ஓடிக் கிடந்தால் என்னை வெளியே சுற்றி அலையும் வேசி என்று நீ பேசும் பொழுது தாங்கி கொள்வது தான் அன்பு செய்வதா?
என்னதான் அன்பு செய்தாலும் உன்னைக் காணவே சகிக்கவில்லை என்று கூறி கடன்காரர்களிடம் என்னைப் பணையப் பொருளாக்கி நீ சம்சாரத்தை துறந்து சாமியாராக ஊரை விட்டு ஓடிப் போனாயே இது தான் அன்பு செய்வதா?
ஓடிப் போன நீ புத்தன் ஆனாய்
அன்பு செய்த நான் என் பிள்ளைகளை வளர்க்க உண்மையாகவே வேசியானேன்.
இப்பொழுது நான் அன்பு செய்வதை நிறுத்தி விட்டேன்.
அன்பு செய்வீர் என்று கூறி ஊர் ஊராக சுற்றித் திரிகிறாய் நீ.
ஆதலின் அன்பு செய்ய வேண்டாம் பெண்களே அன்பு செய்ய வேண்டாம்
இப்படிக்கு அன்பு செய்யாத புத்த பிக்குணி.♥️♥️♥️🙏🙏🙏

கோமகள் குமுதா

2 thoughts on “அன்பு செய்வது எப்படி

  1. ஆணாதிக்கம் எப்படி எல்லாம் நம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கு சகோ..
    அன்று பெண்களுக்கு செய்த பாவம் தான், இன்று திருமணத்திற்கு பொண்ணு கிடைக்காமல் அலையயுறாங்க ஆண்கள்.
    இன்றைய காலத்தில் கல்விக் கண் நல்லாவே திறக்கப்பட்ட நம் பெண்கள் இனியும் ஆண்களுக்கு அடிமைப் பட்டு இருக்கப் போவதில்லை என்பதைத் தான், இப்போது பெருகி வரும் விவாகரத்துகள் பறைசாற்றி சொல்கிறது. அடுத்த தலைமுறை நம் பெண்கள் இனியும் ஆண்களுக்கு கொத்தடிமையாக இருக்கப் போவதில்லை.

    Like

    1. உண்மை தானுங்க சகோ. சூழ்நிலை மாற்றம் ஒத்துக் கொள்ளப்பட வேண்டிய உண்மை நன்றிங்க.

      Like

Leave a comment