அழகான ,சுறுசுறுப்பான, கெட்டிக்கார இளைஞன் ஷிஃபாங். அவன் சியோலில் இருந்து ஹோட்டல் மேனேஜ்மென்ட் உயர் கல்வி கற்க வங்கி கடன் பெற்று கனடா வந்து நியூ வெஸ்ட் மினிஸ்டிலுள்ள டக்ளஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். இரண்டாம் ஆண்டு கடைசி செமஸ்டர் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டாக அவன் மேற்படிப்பு படித்துக் கொண்டே தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் நடத்தி வந்த ஒரு சிறிய சாப்பாட்டுக் கடையில் பகுதி நேர வேலை பார்த்து வந்தான். சிறிய கடை என்றாலும் ஆன் லைனில் நிறைய ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் அந்த கடைக்கு நிறையவே இருந்தனர். உணவை நன்றாக பேக் செய்து அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுத்து வருவது, ஆன் லைன் ஆர்டர்களை புக் செய்வது, சில சமயம் கடையின் உரிமையாளர் சொல்லும் பொழுது தினப்படி சமையலுக்கான பொருட்களை சந்தையிலிருந்து வாங்கித் தருவது போன்ற பல தரப்பட்ட வேலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான் ஷிஃபாங் . அவன் கனடாவின் நிரந்தர குடிமகனாக வேண்டி விண்ணப்பிக்க காத்திருந்தான். ஆனால் அந்த சிறிய கடையின் உரிமையாளர் அவன் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அவனுக்கு தங்கள் கடை பணிச்சான்றிதழ் தருமளவிற்கு அவரது நிர்வாகத்தின் ஆண்டு வருமானம் இல்லாததால் தர இயலாது என்று தெரிவித்தார். அதனால் அவன் தன் முன் அனுபவத்தையும் படிப்பையும் குறிப்பிட்டு தனக்கு பணிச் சான்றிதழ் தருமளவிற்கு பெரிய உணவகங்களில் வேலை வேண்டி ஏஜென்சியில் பதிவு செய்து காத்திருந்தான் ஷிஃபாங்.

ஏஜென்சி அவனுக்கு முங்ஷியின் உணவகத்தில் உதவி மேலாளருக்கான நேர்முகத் தேர்வுக்கு நாள் குறித்து கைபேசியில் மின் அஞ்சலில் செய்தி தெரிவித்தார்கள். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள பல ஏஜென்சிகளிலிருந்து திறமையான நிறைய முன் அனுபவம் உள்ள பலர் வந்திருந்தனர். நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தர கனடா நாட்டு பிரஜைகள் , சிலர் தன்னைப் போல் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க காத்திருந்தவர்கள் கூட அன்று நடை பெற்ற நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். நேர்முகத் தேர்வில் ஷிஃபாங் தனக்கு தெரிந்ததையும் தன் படிப்பு விவரங்களையும் , தான் செய்த வேலையைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தான். கேள்விகளுக்கு நல்ல முறையில் பதிலளித்து விட்டு வெளியில் வந்து நம்பிக்கையோடு காத்திருந்தான். வந்திருந்தவர்கள் அனைவருக்கும் நேர்முகத் தேர்வு முடிந்ததும் இன்னும் ஒரு வாரத்தில் நேர்முகத் தேர்வின் முடிவுகளை அவர்கள் கொடுத்த மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்கள்.
ஒரு வாரம் கழிந்து ஷிஃபாங் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றதாக செய்தி அனுப்பினார்கள். தேதி குறிப்பிட்டு ஒரு வருடத்திற்கான வேலை ஒப்பந்தப் பத்திரத்தில் ஒரு மணி நேர வேலைக்கு இவ்வளவு டாலர் என்று குறிப்பிட்டு ஒரு வருடம் முடிந்து பணித்திறமையைக் கணித்து அதற்கேற்ற ஊதிய உயர்வு தரப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். ஒரு வருட காலத்தில் இடையில் பணியாளர் பணியை விட்டு விலக விரும்பினால் மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பு நிர்வாகத்திற்கும் பொருந்தும். என்று ஒப்பந்தப் பத்திரத்தில் அனைத்து விவரங்களும் தெளிவாக எழுதப்பட்டு ஷிஃபாங் கையொப்பம் இட்டதும் பத்திரத்தை பெற்றுக் கொண்டு முங்ஷி கையெழுத்திட்ட ஒரு வருடத்திற்கான பணி ஆணையை உணவகத்தின் முத்திரை பதித்து ஷிஃபாங்குக்கு சான்றிதழை கொடுத்தனர். ஷிஃபாங் முங்ஷியின் உணவகத்தில் உதவி மேலாளராக வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் ஆயிற்று. அவனுக்கு பெரியவர் முங்ஷியையும் அங்கு வேலை செய்யும் அனைவரையும் மிகவும் பிடித்திருந்தது.

முங்ஷியின் உணவத்தில் 20 பணியாளர்கள் வேலை செய்தனர். ஷிஃபாங் வயதில் இன்னும் இருவர் மற்ற ஆண்கள் நடுத்தர வயதைக் கடந்தவர்கள். சில பிரிவுகளில் மட்டும் பெண்கள் பணியாற்றினர். ஷகுராவைத் தவிர அனைவருமே நடுத்தர வயதைக் கடந்தவர்கள். தன்னைப் போல் உதவி மேலாளராக பணியாற்றிய ஷகுராவைப் பார்த்து சிலசமயம் ஷிஃபாங் வியந்தான். ஏனென்றால் அவள் வேலை நேரமும் சரி செய்யும் வேலைகளும் சரி இரண்டுமே மற்றவர்களை விட அதிகமாக இருந்தது. ஷிஃபாங் எந்த ஷிப்ட்டுக்கு வந்தாலும் ஷகுரா இருந்ததைப் பார்த்து மற்றவர்களிடம் ஷகுரா எந்த ஷிப்ட்க்கு வந்தாள் என்று கேட்டால் நாங்கள் வந்த போதே அவள் இருந்ததாக அனைவரும் ஒரே குரலில் கூறினார்கள். ஷகுரா அப்படித் தான் எந்த வேலையென்றாலும் செய்வாள். வேலை நேரத்தை அவள் பொருட்படுத்துவதே இல்லை என்பது பலநாள் அவளையே கண்காணித்து ஷிஃபாங் கண்டுபிடித்த உண்மை. தற்போது கல்லூரி படிப்பு முடிந்து விட்டதால் ஷிஃபாங்கும் ஷகுராவைப் போல் பணிக்கு காலையில் முதல் ஆளாக வருவதும் இரவு கடைசி ஆளாக போவதுமாக இருந்தான். ஷிஃபாங் இப்படி அதிகப்படியான நேரம் வேலை செய்வதைக் கண்டு கொண்ட முங்ஷி அவனுக்கு வேலை நேரம் போக அதிகப்படியாக செய்த வேலை நேரத்தை தனியாக கணக்கிட்டு அதற்கான பணத்தையும் ஊதியத்துடன் சேர்ந்தே வழங்கினார். வழக்கமாக கிடைக்கும் ஊதியத்தை விட அதிகப்படியாக கிடைத்த பணத்தால் ஷிஃபாங் தான் படிப்பதற்கு வாங்கியிருந்த வங்கிக் கடனை விரைவாக கட்டி முடித்தான். வந்து சேர்ந்த ஆறு மாதத்திலேயே ஷிஃபாங்கை உணவகத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் பிடித்துப் போயிற்று. அனைவரின் கவனத்தையும் கவர்ந்த அவனை ஷகுராவும் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தாள்.
தொடரும்…..

நான் ஏற்கனவே சொன்ன படியே கதை நகர்ந்தால் நல்லாருக்கும் சகோ..!
வசந்தங்கள் வீசட்டும் அவர்கள் வாழ்க்கையில்.🌹🌷
LikeLiked by 2 people
நல்லதுங்க சகோதரர். மகிழ்வும் நன்றியும்.🙏
LikeLiked by 1 person