குறிஞ்சிப்பூ

முகநூல் நட்பு கணேஷ் பாலா நடத்திய படத்திற்கு கதை எழுதுவாங்க என்ற சிறுகதைப் போட்டியில் 64 பேர் எழுதியதில் 20 பேர் தேர்வான முதல் சுற்றில் தேர்வான என் சிறுகதை. நன்றிங்க கணேஷ் பாலா சகோதரர் 🙏🙏

கதை எழுத வாங்க — 6

தலைப்பு — குறிஞ்சிப்பூ

வாராமல் வந்த மாமணி என்று திருமணமாகி பத்து வருடங்கள் கழித்துப் தங்களுக்கு பிறந்த மகளைக் கொண்டாடி மகிழ்ந்தனர் கிருஷ்ணனும் வாசுகியும்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள் குழந்தை புஷ்கலா. மேல் படிப்புக்கு வெளிநாடு செல்ல விரும்பிய மகளிடம் நாளை மாலை பெண் பார்க்க வருகிறார்கள் என்றும் திருமணம் முடிந்ததும் அவள் விருப்பப்படி செல்லலாம் என்றார் தந்தை.

” அப்பா நீங்கள் என்ன சொன்னாலும் எது செய்தாலும் என் நன்மைக்காகத்தான். நான் ஒரு நாளும் உங்கள் சொல்லை மீறமாட்டேன் ப்பா” என்ற தன் செல்ல மகளைக் கட்டிக் கொண்டு ” பகவானே இவ்வளவு நல்ல குழந்தைக்கு நீ இன்னும் கொஞ்சம் கருணை காட்டலாம் நாராயணா ! பாம்பணையில் பள்ளி கொண்ட என் பெருமாளே” என்று கண்ணீர் உகுத்தாள் புஷ்கலாவின் அம்மா வாசுகி.

“வாசுகி அழாதேம்மா. எல்லாம் நல்லா நடக்கும். நான் போய் நம்ம பார்த்தசாரதி மாமாவைப் பார்த்திட்டு வந்திடுறேன்” என்று தன் தூரத்து உறவு முறையில் ஒன்று விட்ட மாமாவான பார்த்தசாரதியைப் பார்க்க கிளம்பினார் கிருஷ்ணன்.

” வாடா மருமகனே . என்ன எம் பொண்ணும் பேத்தியும் எப்படி இருக்காங்க? ” என்று தன் ஒன்றுவிட்ட அக்காவின் மகன் கிருஷ்ணனை வரவேற்றார் பார்த்தசாரதி. தன் தந்தை இறந்த பிறகு நான்கு தங்கைகளுக்கும் திருமணம் செய்து முடித்து இன்னும் தான் மட்டும் பிரம்மச்சாரியாக 90 வயதான தன் தாய் மரகதத்துடன் பேரூரில் வாழ்ந்தார் பார்த்தசாரதி.

” பார்த்தா யாருடா வந்திருக்கிறது? ” என்று கேட்டபடி ஒரு சொம்பு நிறைய தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து அந்த தள்ளாத வயதிலும் வீட்டிற்கு வந்த விருந்தினரை உபசரித்தார் மரகதம்மா.

” பாட்டி நான் கிருஷ்ணன் வந்திருக்கேன். என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கோ ” என்று தான் வாங்கி வந்த ஒரு சீப்பு நேந்திரம் பழங்களை அவர் கையில் கொடுத்து விட்டு மரகதம்மாவின் பாதங்களில் தெண்டனிட்ட கிருஷ்ணனை ” நூறு வருஷம் குழந்தை பொண்டாட்டியோட நல்லா இருப்பா.

உன் பிரார்த்தனைக்கு புலித்தோல் அணிந்த என் பொன்னார் மேனியன் செவி சாய்ப்பான். உலகாளும் என் பாகம் பிரியை என் பச்சை நாயகி ஒரு நாளும் நம்மை கைவிடமாட்டாள்”
என்று கோயில் இருக்கும் திசை நோக்கி கும்பிட்டபடி அன்பு வழிந்தோட வாழ்த்தினார் மரகதம்மா.

“ஏன்டா பார்த்தி நான் சொன்னமாதிரி நம்ம பாம்பு பிடாரன் ரங்கனை வரச்சொன்னியா?” என்று தன் மகனைக் கேட்ட மரகதம்மாவிடம் ” ஆமாம்மா நீ சொன்னாப்பலே இன்னிக்கி அவனை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்திடுவாம்மா. கிருஷ்ணா நீ வா உட்காரு . இந்தா தண்ணி குடி ” என்று தன் அம்மாவின் கையிலிருந்து வாங்கிய சொம்பு நீரை கிருஷ்ணனிடம் கொடுத்தார் பார்த்தசாரதி.

” ஐயா நான் ரங்கன் வந்திருக்கேனுங்க” என்று வீட்டு வாசலில் குரல் கேட்கவும் ” இதோ ரங்கன் வந்துட்டானே. வா கிருஷ்ணா உனக்கு அவனை அறிமுகம் செய்யறேன்” என்று கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டின் முன்னால் இருக்கும் முற்றத்திற்குச் சென்றார் பார்த்தசாரதி. ” வாடா ரங்கா. சௌக்கியமா? வந்து இப்படி உட்கார். உன் மகனை அந்தக் காலேஜ்லே சேர்த்த ஃபாரம் வாங்கிட்டு வந்து வச்சிருக்கேன். அவனை வரச் சொல்லு அதை பூர்த்தி செய்து திங்கட்கிழமை கொண்டு போய் காலேஜ்லே கொடுக்கனும்” என்று ரங்கனிடம் தெரிவித்தார் பார்த்தசாரதி.

“ஐயா நீங்க எனக்கும் என் குடும்பத்துக்கும் செய்யற பண உதவிக்கும் இன்னும் மற்ற உதவிகளுக்கும் நான் என்ன கைமாறு செய்ய முடியும். இந்த உலகத்திலே இன்னும் கூட கடவுள் உங்களைப் போல நல்ல மனுஷங்க ரூபத்திலே இருக்காருன்னு தெரியுது ” என்று கூறி தன்னைப் பார்த்து கைகூப்பி வணங்கிய ரங்கனைப் பார்த்து ” ரங்கா நான் உனக்கு கடவுள்ன்னா இதோ இவருக்கு நீ தான் கடவுள். மனுஷனாப் பிறந்து வாழ்ந்து நாலு பேருக்கு நன்மை செய்யறதுக்கு தான் அந்தக் கடவுள் அரிதான இந்த மனிதப் பிறவியை நமக்கு கொடுத்திருக்கார்.

கிருஷ்ணா நான் சொன்ன அந்த பாம்பு பிடாரன் ரங்கன் இவன் தான். ரங்கா என் மருமகன் இந்த கிருஷ்ணனுக்கு தான் உன்னை உதவி செய்யச் சொன்னேன்” என்று இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினார் பார்த்தசாரதி.

” ஐயா நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க. உங்க மகளுக்கு ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் நடக்கும். குழந்தை குட்டிகளோடு சந்தோஷமா நூறு வருஷம் வாழ்வாங்க. நான் உங்களோடு வந்து உங்க வீட்டைச் சுற்றி ஒரு முறை பார்க்கனும். அப்புறம் உங்க வீட்டுக்குப் பெண்பார்க்க வரவங்க எப்ப வருவாங்கன்னு சொல்லுங்க. அந்த நேரம் பார்த்து சரியா என் நாகராஜன்களோட நான் வந்திடறேன். பாட்டிம்மா சொன்ன மாதிரி செய்திடலாம்” என்று கிருஷ்ணனிடம் தெரிவித்தான் ரங்கன்.

சந்தோஷம் பா. உங்க உதவிக்கு ரொம்ப நன்றிங்க ரங்கன். என் மனக்கவலை தீர்க்க எங்க குலதெய்வம் ரேணுகாம்பாளே நேரிலே உங்க ரூபத்திலே வந்திருக்கான்னு நினைச்சு உங்களை சேவிக்கிறேன்” என்று பேசிய கிருஷ்ணனை நெகிழ்வாக பார்த்தனர் ரங்கனும் பார்த்தசாரதியும்.

“இனி எந்த கவலையும் இல்லை. ரங்கா உன் நாகராஜனுகளுக்கெல்லாம் கொஞ்ச நேரம் வாயை கட்டிப் போட்டிரு. மறக்காம கவனமாக அதை மட்டும் செய்திடு பா” என்று ரங்கனை மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை செய்தார் பார்த்தசாரதி.

” ஐயா அதெல்லாம் நீங்க கவலையே படாதிங்க. ரெண்டு பேருக்கும் ஏற்கனவே பல்லைப் புடுங்கிட்டேன். நல்லாப் பழக்கப் படுத்தி வச்சிருக்கேன். இப்ப வாயையும் கட்டிட்டா அவங்க புஸ்ஸுன்னு சீற மட்டும் செய்வாங்க. வேற ஆபத்து ஒன்னும் இல்லைங்க. நீங்க பயப்படாதிங்க ” என்று அவர்களுக்கு ஆறுதலாகப் பேசினார் ரங்கன்.

வழக்கப்படி வீடெல்லாம் பளிச்சென்று துடைத்து சுத்தம் செய்து, ஜன்னல் கதவுகளுக்கு புது திரைச் சீலைகளை மாற்றி, வாசலில் பெரிய கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டிப் பெண் பார்க்க வருபவர்களை வரவேற்க கிருஷ்ணனும் வாசுகியும் அதிகாலையிலிருந்து சுறுசுறுப்பாக இயங்கினர். பெண் பார்க்க வருபவர்களுக்கு சாப்பிட சிற்றுண்டியும் பலகாரங்களும் குடிக்க விரும்பியபடி கொடுக்க குளிர்பானமும், காபியும் இரண்டையும் தயார் செய்து வைத்தாள் வாசுகி.

பாம்புபிடாரன் விஷயத்தை தன் மனைவி வாசுகியிடம் கூட சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார் கிருஷ்ணன்.

தன் மகள் புஷ்கலாவிற்கு வாசுகி பட்டுப் பாவாடையும் அதற்குப் பொருத்தமாக மைசூர் சில்க் தாவணியும் ரவிக்கையும் போட்டு விட்டாள். கோணல் வகிடெடுத்து பெரிய நெற்றியை மறைத்து நெற்றியின் முன்னால் கொஞ்சம் முடியை ஸ்டைலாக சீவிக் கூந்தலைப் பின்னாமல் தூக்கி உச்சியிலிருந்து அப்படியே தொங்க விட்டு காதோரத்தில் மட்டும் பூக்களை வைத்து காதுகளில் பெரிய தொங்கட்டான்களை அணிவித்து வேறு நகைகள் அணிவிக்காமல் கண்களுக்கு மை தீட்டிப் பொட்டு வைக்காமல் மேல் நாட்டு பாணியில் நாகரீகமாக அழகாக அலங்காரம் செய்திருந்தாள் வாசுகி.

மாப்பிள்ளை வெளிநாட்டில் படித்து அங்கேயே பல வருடங்களாக வாழ்வதால் அதற்கு தக்கபடி தன் மகளும் நாகரீகமாக தெரிய வேண்டும் என்று புஷ்கலாவின் கழுத்தில் சிறிய பட்டுத் துணியை ஸ்கார்ஃப் போல் கட்டி விட்டாள்.

வழக்கமான வரவேற்பு பேச்சு சிற்றுண்டி முடிந்ததும் மாப்பிள்ளைக்கும் அவருடைய அப்பாவுக்கும் காபி தான் பிடிக்கும் என்பதால் இரண்டு வெள்ளிக் கோப்பைகளில் காபியை ஊற்றி ஒரு வெள்ளிக் தட்டில் வைத்து தன் மகளின் கைகளில் கொடுத்து அதை எடுத்துக் கொண்டு போகச் சொன்னாள் வாசுகி.

தட்டை எடுத்துக் கொண்டு சமையலறையிலிருந்து புன்னகையுடன் புஷ்கலா தட்டை கைகளில் ஏந்தியபடி வருவதை வீட்டின் பின் கட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ரங்கன் வயதான கண் பார்வை இல்லாத பெரிய நாகராஜனை தன் கழுத்தைச் சுற்றி போட்டுக் கொண்டு இரண்டு கைகளில் இருந்த இரண்டு நாகராஜன்களையும் தன்னை நோக்கி வரும் புஷ்கலாவைப் பார்த்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை அமர்ந்திருந்த நாற்காலிக்கு கீழே வீசிவிட்டு சத்தம் செய்யாமல் மாப்பிள்ளை வீட்டார் அமர்ந்திருந்த ஹாலுக்குள் ரங்கன் நுழைந்தான்.

அவன் கீழே வீசிய பாம்புகள் இரண்டும் நாற்காலியின் காலைச் சுற்றிக் கொண்டு தலையைத் தூக்கி புஸ்ஸென்று சீறின. நாற்காலியின் அடியில் புஸ் என்று சத்தம் வருவதைக் கேட்ட மாப்பிள்ளை அனிச்சையாக கால்களைத் தூக்கி நாற்காலி மேல் வைத்ததும் அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கடியில் இரண்டு பாம்புகள் சீறுவதைக் கண்ட புஸ்கலா அதீத பயத்தால் அடி வயிறு வலியால் இழுத்துப் பிடிக்க வார்த்தைகள் வராமல் பா… பா… என்று தடுமாறி கையிலிருந்த தட்டைக் கீழே போட்டு அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தாள்.

அதைப் பார்த்த மாப்பிள்ளை மாதவன் நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்து மயங்கிச் சரிந்த புஷ்கலாவின் அருகில் ஓடினான். அவளைத் தன் கைகளில் தூக்கியதும் புஷ்கலாவின் அப்பாவும் அம்மாவும் ஓடி வந்து மகளை அவன் கைகளிலிருந்து வாங்கி அருகிலிருந்த சோஃபாவில் படுக்க வைத்தனர்.

அனைவரும் புஷ்கலாவைச் சுற்றி இருக்க அந்த களேபரத்தில் யாரும் அறியாதபடி தன் நாகராஜன்களை எடுத்துக் கூடைகளில் அடைத்து பையில் போட்டுக் கொண்டு பின்பக்க கதவு வழியாக வீட்டை விட்டு வெளியேறினார் பாம்பு பிடாரன் ரங்கன். மகள் மயங்கியதும் மனம் அதிர ஓடிவந்து அவளைத் தாங்கி கொண்ட வாசுகி அழுது அரற்றினாள்.

வெளிநாட்டில் மருத்துவராக பணியாற்றிய மாப்பிள்ளையிடம் மட்டும் முன்கூட்டியே தன் மகள் 21 வயது முடிந்தும் பூப்பெய்தாமல் இருப்பதையும் அதற்கான இந்த அதிர்ச்சி வைத்தியத்தைப் பற்றியும் புஷ்கலாவின் தந்தை கிருஷ்ணன் ஏற்கனவே கூறியிருந்தார். அதைக் கேட்ட மருத்துவரான மாதவன் இது போல் சில பெண்கள் பூப்பெய்த தாமதமாவது இயற்கை தான். அது ஒன்றும் பெரிய உடல் ஆரோக்கிய குறைவு அல்ல என்று கூறி கிருஷ்ணனுக்கு ஆறுதலாகப் பேசினார். அவருடைய மகளுக்கும் மனைவிக்கும் தெரியாமல் நடக்கும் அந்த அதிர்ச்சி வைத்தியம் தன் வீட்டாருக்கும் தெரியாமலிருக்க வாக்குறுதி தந்து தானும் சம்மதிப்பதாகக் கூறினான் மாப்பிள்ளை மாதவன்.

மூர்சையடைந்த புஷ்கலாவைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு அருகிலிருந்த தன் நண்பனின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மாதவன் தன் நண்பனின் மனைவியும் மகப்பேறு மருத்துவர் என்பதால் அவரிடமே புஷ்கலாவை பரிசோதிக்கலாம் என்று தன் வருங்கால மாமனார் கிருஷ்ணனிடம் கூறினான். அவன் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட கிருஷ்ணனும் அதற்குச் சம்மதித்தார். ஒரு மணி நேரம் புஷ்கலாவை பரிசோதித்த மகப்பேறு மருத்துவர் வெளியே வந்து தன் அறையில் காத்திருந்த மாதவனிடமும் கிருஷ்ணனிடமும் சென்று புஷ்கலாவின் பெற்றோர் நெடுநாளாக வேண்டிய மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார்.

கிருஷ்ணனுக்கு அந்த செய்தியைக் கேட்டதும் மகிழ்ச்சியால் வார்த்தைகள் வரவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. மகள் பூப்படைந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொன்ன அந்த மகப்பேறு மருத்துவரைத் தன் இருகரம் கூப்பி வணங்கினார்.

தன் மகளுக்கு தான் ஏற்பாடு செய்திருந்த அதிர்ச்சி வைத்தியத்திற்கு ஒப்புக் கொண்டு அதை தன் வீட்டாரிடம் கூட சொல்லாமல் தனக்கு உதவி செய்த தன் மாப்பிள்ளைக்கு மனதார நன்றி தெரிவித்தார் கிருஷ்ணன். “நன்றியெல்லாம் எனக்கு வேண்டாம் மாமா. உங்கள் பெண்ணை எனக்கு கொடுங்கள் அது போதும்.” என்றான் மாதவன்.

இந்த அதிர்ச்சி வைத்தியம் எப்படி யார் கூறியது என்று மாதவன் கேட்டதும் வயதான பாட்டி மரகதம்மா கூறிய இந்த அதிர்ச்சி வைத்தியத்தை பற்றியும் அவருடைய மகன் பார்த்தசாரதியைப் பற்றியும் பெருமையாக எடுத்துரைத்தார் கிருஷ்ணன். இப்படி பலநூறு வைத்திய சாஸ்திரங்களைப் பற்றி அறிந்திருந்த நம் வீட்டு பெரியவர்களின் அறிவுத் திறனை எண்ணி வியந்தான் மேல் நாட்டில் வைத்தியராகப் பணியாற்றும் மாதவன்.

சுற்றம் நட்பு சூழ வாழ்த்தி மாதவன் புஷ்கலா திருமணம் இனிதே நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் தேனிலவு கொண்டாட ஸ்விட்சர்லாந்துக்கு பயணமானார்கள்.

பார்த்தசாரதி, மரகதம்மா, ரங்கன் அனைவரையும் அழைத்துச் சென்று தங்கள் வேண்டுதலுக்கு செவி சாய்த்த பேரூர் பட்டீஸ்வரருக்கும் பச்சைநாயகிக்கும் திருக்கல்யாணம் செய்து மகிழ்ந்தனர் கிருஷ்ணனும் வாசுகியும். தங்கள் குலதெய்வமான அன்னை ஸ்ரீ ரேணுகாம்பளுக்கு பட்டுச்சேலை அணிவித்து அலங்காரப் பூஜை செய்து வேண்டுதலை நிறைவேற்றினர். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலரைப் போல அதிசயமாக மலர்ந்த தங்கள் புத்திரி புஷ்கலாவை எண்ணி மகிழ்ந்தனர் கிருஷ்ணனும் வாசுகியும்.

வார்த்தைகள்: 1178

ஆக்கம்
கோமகள் குமுதா.

Advertisement

3 thoughts on “குறிஞ்சிப்பூ

 1. பாராட்டுகளும் சகோ.!
  முதலிடத்திற்கு வந்து வெற்றிவாகை சூடிட என் வாழ்த்துகள்.🌹

  Liked by 2 people

  1. மகிழ்ச்சி. அன்பும் நன்றியும் சகோதரர்.🙏. தீபாவளி வாழ்த்துகள் 💐🍫🍫🍫

   Like

   1. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.
    வாழ்க வளமுடன்.✨🌟

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: