2021 ஆண்டின் கடைசி மாத இறுதியில் பதிவருக்கு அடுத்த வருடம் செய்ய வேண்டிய வேலைகள் அடைய வேண்டிய இலக்கு என்ன என்று கடந்த இருபது நாட்களாக சிந்தித்து ஒன்றும் தோன்றாமல் பக்கத்தில் உள்ள பூங்காவிற்கு செல்ல வழக்கம் போல் பனிக்கால உடைகளை ஒன்றொன்றாக அணிந்து மூட்டு வரை உள்ள பூட்டுகளை அணிந்து தெருவில் 15 செ.மீ. ஆழத்தில் கொட்டி கிடந்த பனிக்குவியலுக்குள் காலை இறக்கினார். மெல்ல கைகளை இருபுறமும் விரித்து சர்க்கஸ் செய்தபடி தெருவில் பனியில் சறுக்கி வழுக்கி எப்படியோ வீட்டிலிருந்து கூப்பிடும் தூரத்திலிருந்த பூங்காவை அரை மணி நேரத்தில் சென்றடைந்தார். பின்னர் எங்கே உட்காரலாம் என்று பூங்கா முழுவதும் சுற்றினார். எங்கும் பனி எதிலும் பனி கொட்டிக் கிடந்தது. தன் சிறுவத்தில் கோடை காலத்தில் எலுமிச்சை ஜூசில் ஐஸ் போட்டு பருக ஐஸ் கம்பெனிக்கு குண்டாவைத் தூக்கிக் கொண்டு ஓடிச்சென்று இரண்டு ரூபாய்க்கு குண்டா நிறைய ஐஸ்கட்டி வாங்கி வந்தது நினைவில் எழுந்தது. அளவில்லாமல் வெண்ணிலா ஐஸ்க்ரீம் போல் கொட்டிக் கிடந்த பனிக்குவியலைப் பார்த்து பழைய நினைவில் பனித்தூளை பந்து போல் உருட்டி கையுறைகள் நனைய நனைய எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினார் பதிவர். பாதையில் நடந்து செல்லும் அனைவரும் பதிவரை விநோதமாக பார்த்து சிரித்துக் கொண்டே சென்றனர். பனி உருண்டையுடன் வீட்டிற்குள் நுழைந்த பதிவரைப் பார்த்து அடக்கடவுளே கிச்சன் சிங்கிலே அதைப் போட்டுட்டு கையைக் கழுவு மா. எதுக்கு இதை தெருவிலிருந்து தூக்கிட்டு வந்திங்க. எப்பதான் நீங்க திருந்துவிங்க. இதையெல்லாம் போட்டு ஜீஸ் குடிச்சா ஜன்னி வந்துரும். திருந்துமா டீ போட்டுத் தர்றேன் என்று பதிவரின் மகள் திட்டினாள். இப்படியே 20 நாளும் முடிந்து விட்டது. பதிவருக்கு 2022 ஆம் வருட இலக்கு என்ன என்று சிந்தித்து சிந்தித்து ஏதும் தோன்றவில்லை. என்ன செய்யலாம் நட்பூக்களே? தாய்நாட்டின் நினைவுகளால் தத்தளிக்கும் பதிவருக்கு ஏதாவது ஐடியா சொல்லுங்களேன்.ப்ளீஜ்.😏🙄🙃
