மனங்கொத்தி — சிறுகதை

“உங்க மனசோட வலி எனக்கு புரியுதுங்க. இந்த ஃபைல்லே நான் ரவிக்கு செய்த சிகிச்சை, கொடுத்த மருந்துகள், போட்ட ஊசிகள், அவனுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் நர்ஸ்கள் வெளியிலிருந்து வந்து சிகிச்சையளித்த சிறப்பு மருத்துவர்கள், ரவி இறந்த அன்று பணியிலிருந்தவர்களைப் பற்றிய விவரங்கள் இப்படி சகல விவரங்களையும் நீங்கள் கேட்டபடி எழுதி இருக்கிறேன்.  உங்கள் மகன் இறப்பிற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இது சம்பந்தமாக நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கிற்குத் தேவையான விவரங்களை அளித்து உங்களுக்கு   உதவக் காத்திருக்கிறேன்.” என்று தலைமை மருத்துவர் சங்கர் ரவியின் பெற்றோர்களுக்கு உறுதியளித்து பேசியதை அறையைத் துடைத்துக் கொண்டே கேட்ட ஜேம்ஸ் தன் மனதிற்குள் வருந்தினார். 

பகல் பொழுது முழுவதும் மக்கள் கூட்டமாக இருக்கும் மருத்துவமனை இரவு  9 மணிக்குப் பிறகு பணியிலிருக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்களைத் தவிர வேறு யாருமின்றி அமைதியாக இருக்கும்.  அப்படி   அமைதியான நேரத்தில் செய்யும் இரவுப்பணி தான் ஜேம்ஸ்க்கு மிகவும் பிடித்திருந்தது. பகலில் தான் தங்கியிருந்த மேன்ஷனிலும் சுகாதாரப் பணியாளராக இருந்தார்.  கடந்த பத்து வருடங்களாக அகதியாக பர்மாவிலிருந்து இந்தியா வந்து அந்த மேன்ஷனில் தங்கி இருக்கும் ஜேம்ஸ் எத்தனை விபத்துகள், இறப்புகள்,சோகம் என்று எல்லாவற்றையும் கடந்து வந்தவர் தலைமை மருத்துவர் அறையை சுத்தம் செய்யும் போது ரவியின் பெற்றோர்கள் சோகத்துடன் அமர்ந்திருந்ததைப் பார்த்ததிலிருந்து  ஏனோ அவர் மனம் வருந்தியது.

அறையைத் துடைத்த பின்னர் சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பி தன் கையுறைகளைக் கழற்றி கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டு வெளியே வந்து டீ குடிக்க  கேண்டீனுக்குச் சென்றார். செல்லும் வழியில் தன்னை பின்னால்  யாரோ அழைத்ததால் நின்று திரும்பி பார்த்தார். 

“ ஜேம்ஸ் அண்ணா உங்களை சீஃப் டாக்டர் கூப்பிடறார். உடனே வரச்சொன்னார் ணா” என்று  ஓடி வந்ததால் மூச்சிறைக்கப் பேசினாள் எமர்ஜென்சி வார்ட் நைட் டூட்டி நர்ஸ் சுமதி. “ இதோ வர்றேன்மா வா போகலாம். “ என்று கூறி  நர்ஸ் சுமதியோடு தலைமை மருத்துவர் இருந்த அறைக்கு  விரைந்தார். அவருடைய அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்து சார் வரச்சொன்னிங்கன்னு……என்று தயங்கிப் பேசி நின்ற ஜேம்ஸை

“ வாப்பா ஜேம்ஸ். இவங்க உன் கிட்டே ஏதோ பேசனும்னாங்க அதான் கூப்பிட்டேன்” என்று ரவியின் பெற்றோரை அறிமுகப்படுத்தி சங்கர் கூறியதும் ஜேம்ஸ் இதயம் படபடத்தது. “ சொல்லுங்க சார். சொல்லுங்க அம்மா. வணக்கம். நான் சுகாதாரப்பணியாளன் ஜேம்ஸ்” என்று அவர்களுக்கு தன் தலையைத் தாழ்த்தி வணக்கம் தெரிவித்தார். எங்க பையன் இறந்த அன்னிக்கி ராத்திரி டூட்டிலே நீங்க இருந்திங்களா? என் மனைவி ரவி தூங்கிட்டிருந்ததாலே டீ குடிக்கப் போனப்போ  அந்த அவசர சிகிச்சைப் பிரிவில் திரைகளால் மறைக்கப்பட்ட என் மகன் படுத்திருந்த தனி அறையில் நீங்க துடைச்சிட்டிருந்திங்களாம். நீங்க வேலையை முடிக்கிறதுக்குள்ளே கேண்டீனுக்கு போய் டீ வாங்கிட்டு வந்திடறதா உங்க கிட்டே தான் சொல்லிட்டுப் போனாளாம். போயிட்டு திரும்பி வந்து தூங்கிய ரவியைப் பார்த்து  நிம்மதியோடு உட்கார்ந்து  டீ குடிச்சிட்டு 

இருக்கிறப்போ  ரவிக்கு டிரிப்ஸ் மாத்தறதுக்கு வந்த நைட் டூட்டி நர்ஸ்  பல்ஸ் பார்த்திருக்காங்க. நாடி துடிப்பே இல்லாததாலே சந்தேகப்பட்டு டாக்டர்கிட்டே சொல்லி அவர் வந்து செக் பண்ணிட்டு ரவி இறந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டதும் என் மனைவி மயக்கமாகிக் கீழே விழுந்திருக்காங்க. மயக்கம் தெளிஞ்சு அழுதப்ப நீங்க  என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி நான் வரவரைக்கும் கூட இருந்திங்களாம்.  அந்த ஸ்வீப்பர் ஜேம்ஸ் நீங்க தானா? நான் பதட்டத்திலே இருந்ததாலே உங்களை கவனிக்கலே. ரொம்ப தேங்க்ஸ் பா” என்று ரவியின் தந்தை இராமனாதன் பேசியதும்” ஆமாங்க சார். அப்போ நான் தான் அம்மா பக்கத்தில் இருந்தேன். அவங்க அழுதப்போ ஆறுதல் சொன்னேன். அது என் கடமை தானுங்க சார்.” என்று பணிவாக பதில் கூறினார் ஜேம்ஸ். வசந்தி என்னமோ பேசனும்னு சொன்னியே மா பேசு இவருதான் அந்த ஜேம்ஸ்” என்று இராமனாதன் தன் மனைவியிடம் கூறியதும் குனிந்து அழுது கொண்டே இருந்த வசந்தி தன் தலையை நிமிர்த்தி மெல்லிய குரலில் “ நான் டீ வாங்கிட்டு வர கேண்டீனுக்கு போன அந்த பத்து நிமிஷத்திலே ரவிக்கு பக்கத்திலே நீங்க மட்டும் தான் இருந்திங்க. வேறு யாராவது வந்தாங்களா? என் பையன் உங்ககிட்டே ஏதாவது பேசினானா? ஏதாவது வேணும்னு கேட்டானா?” அவன் கடைசியா ஏதாவது பேசியிருந்தா உங்களுக்கு மட்டும் தான் தெரிஞ்சிருக்கும். அதான் என் மகன் ரவி…….  உங்ககிட்டே…….ஏதாவது பேசினானான்னு தெரிஞ்சுக்க …… “ என்று அழுது கொண்டே ஜேம்ஸை விசாரித்த ரவியின் தாயைப் பார்த்து மனம் கசிந்தார்  மருத்துவர் சங்கர். “ என்ன ஜேம்ஸ் பேஷன்ட் ரவி உங்கிட்டே ஏதாவது பேசினாரா? “ என்று  மருத்துவர் சங்கரும் சேர்ந்து  கேட்டதும் “ நான் அந்த திரைச்சிலை தடுப்பு போட்ட இடத்தை தொடச்சிட்டிருந்தேன் சார். இந்த அம்மா சொல்லிட்டு போய் சீக்கிரமே வந்துட்டாங்க சார். இவங்க வரும் போது என் வேலையும் கரெக்டா முடிஞ்சது. அவங்களும் வந்திட்டதாலே  டாக்டர் ரவுண்ட்ஸ் வரதுக்குள்ளே ICU ஹால் முழுவதையும் துடைக்கனுமேன்னு நான் உடனே அந்த தடுப்பை விட்டு வெளியே உள்ள இடத்தை  துடைக்கப் போயிட்டேன் சார்.  நான் வேலை செய்தப்ப அவங்க பையன் ஒன்னும் பேசுனா மாதிரி எனக்கு நினைவில்லைங்க சார்” என்று கூறிவிட்டு தலை குனிந்தபடி அமைதியாக நின்றார் ஜேம்ஸ்.

“ரொம்ப தேங்க்ஸ் பா” என்று கண்ணில் நீர் வழிய வசந்தி கூறியதும் ” எதுக்கும்மா தேங்க்ஸ் எல்லாம் சொல்லிகிட்டு. நான் என்ன உதவி உங்களுக்கு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க மா ” என்று மிகவும் வருத்தம் தோய்ந்த குரலில் கூறிய ஜேம்ஸை “ஓகே நீ போப்பா” என்று தலைமை மருத்துவர் சங்கர் கூறியதும் அறையை விட்டு வெளியேறினார் ஜேம்ஸ்.

ரவியின் தந்தை தன் மகன் இறப்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்திருந்தார். ரவியின் தாய் வசந்தி சாப்பிடாமல் தங்கள் ஒரே மகனை இழந்த துக்கத்தில் அழுதழுது நினைவில்லாமல் படுத்த படுக்கையில் கிடந்தார். யார் மீது வழக்கு தொடர்ந்து என்ன உண்மையைக் கண்டுபிடித்து என்ன பயன்? அதனால் என் பிள்ளையின்  உயிர் திரும்பவும் வந்து விடுமா? மாண்டவனின் உயிரை  உங்கள் வழக்கு எனக்கு மீட்டுத் தருமா? என்று பலவாறு அழுது புலம்பி தன் கணவனை ரவியின் இறப்பில் சந்தேகமிருப்பதாகக் கூறி சிகிச்சையளித்த மருத்துவமனை மீது தொடுத்த வழக்கை ரத்து செய்யும்படி கூறினார் வசந்தி. ஆனால் இராமனாதனோ விடாப்பிடியாக அநியாயமாக 27 வயதில் அகாலமாக இறந்த தன் மகனின் ஆத்மா சாந்தியடைய அந்த வழக்கை நடத்துவதாகக் கூறி மனைவியை சமாதானப்படுத்தினார்.

” வாங்க ஐஜி சார். உங்க விசாரணையில் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா? நான் உங்களுக்கு  தலைமை மருத்துவர் சங்கர் கொடுத்த ஃபைலை என் செயலாளர் மூலம் அனுப்பி இருந்தேன். கிடைத்ததா? “என்று தன்னைக் கேள்வி கேட்ட இராமனாதனிடம் பதில் அளிக்கும் முன்னர்  அவ்வளவு துக்கத்திலும் தான் வந்தவுடன் குடிப்பதற்கு காபி கொடுத்து உபசரித்து  குடித்து முடித்து பேசும் வரை காத்திருந்த அந்த கோடீஸ்வரரை அமைதியாக பார்த்து

” ஐயம் சாரி சார். முதலில்  உங்களுக்கு  என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனுப்பிய ஃபைலை உங்கள் செயலாளர் நேற்றே என்னிடம் கொடுத்தார்.  இரவு முழுவதும் நான் அந்த ஃபைலில் உள்ள விவரங்களை வாசித்தேன். உங்கள் மகன் இறந்த அன்று இரவு 9 மணிக்கு  உங்கள் மனைவி அந்த அறையில் இருந்திருக்கிறார். அதனால் என் விசாரணையை முதலில் உங்கள் மனைவியிடமிருந்து ஆரம்பிக்க எண்ணுகிறேன். அவர்கள் உடல்நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருப்பதாக உங்கள் குடும்ப மருத்துவர் தெரிவித்தார். அவர்கள் நலமடைந்ததும் எனக்கு தெரிவியுங்கள். மேலும் இந்த  வழக்கு தொடர்பாக உங்களுக்கு என்ன சந்தேகம்? எதனால்? யார் மீது ? என்று   நீங்கள் ஏதாவது கூற விரும்பினால்  இப்பொழுதே என்னிடம் கூறலாம்.  நான் மருத்துவமனையில் ரவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள்,  பணியாளர்களை விசாரிக்கும் முன்பே  உங்கள் கருத்தையும் உங்கள் மனைவியின் கருத்தையும் அறிந்து கொண்டால் அது என் விசாரணைக்கு உதவியாக இருக்கும்  என்று கருதுகிறேன் சார்”  என்று தெளிவாக அமைதியாக இராமனாதனிடம் எடுத்துரைத்தார் ஐஜி செந்தில் நாதன்.

“மிஸ்டர் செந்தில் நாதன் என் மனைவிக்குச் சிறிது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் சரியானதும் நான் உங்களுக்கு தகவல் அளிக்கிறேன். என்னிடம் நீங்கள் என்ன கேட்க நினைக்கிறிர்களோ அதை இப்பொழுதே கேளுங்கள். என் மகன் இறந்த அன்றிரவு நான் மருத்துவ மனையில் பார்த்தது, பேசியது, கேட்டது, நான் உணர்ந்தது, எனக்கு ஏற்பட்ட சந்தேகம் எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றி என் நினைவில் இருக்கும் விஷயங்களைப் கூறுகிறேன்” என்று இராமனாதன் ஐஜியிடம் தெரிவித்தார். 

” ரவி இறந்த செய்தி உங்களுக்கு எத்தனை மணிக்கு யார் தெரிவித்தார்கள் சார்?” என்று ஐஜி கேட்டதும், 

“என் மகன்  இரவு 9 மணிக்கு இறந்து விட்டதாக  ICU வில் அன்றிரவுப் பணியில் இருந்த டூட்டி டாக்டர் புஷ்பராஜ் என் மகனின் கட்டிலருகில் அமர்ந்திருந்த என் மனைவியிடம் தெரிவித்து  என்  கைபேசிக்கு அழைத்த போது இரவு மணி 9:05” என்றார் இராமனாதன்.

“தகவல் கிடைத்ததும் நீங்கள் மருத்துவமனைக்கு  தாமதமின்றி சென்றிர்களா? நீங்கள் மருத்துவமனைக்கு சென்று போது அங்கு யார் எல்லாம் இருந்தார்கள்?”

என்னை டாக்டர் புஷ்பராஜ் அழைத்தவுடன் என் காரில் உடனே புறப்பட்டு 15 நிமிடங்களில் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். என் மகன் இறந்த செய்தி கேட்டு மயக்கமடைந்த என் மனைவியை பக்கத்திலிருந்த கட்டிலில் படுக்க வைத்து அவளுக்கு டாக்டர் புஷ்பராஜ் டிரிப்ஸ் இறக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். என் மனைவியின் கட்டிலருகே இரண்டு செவிலியர்கள் நின்றிருந்தார்கள். இன்னொரு புறம் என் மகன் படுத்திருந்த கட்டிலருகே தலைமை மருத்துவர் சங்கர் என் மகனின் சிகிச்சை பற்றிய விவரங்கள் எழுதிய ரிப்போர்ட் பேப்பர்களை படித்து பக்கத்திலிருந்த வேறொரு டாக்டரிடமும் செவிலியரிடமும் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் விரைந்து என் அருகில் வந்து “சாரி சார். ரவி ஆபாய கட்டத்தைத் தாண்டி அவருடைய நாடித் துடிப்பு சரியான பிறகு வலி தெரியாமல் இருப்பதற்கும் தூங்குவதற்கும் செடேஷன் போட்ட பிறகு தான் நான் கிளம்பிச் சென்றேன். நான் செல்வதற்கு முன்பு இதய துடிப்பு ரத்த அழுத்தம் வெண்டிலேட்டர் எல்லாவற்றையும் பரிசோதித்து கேஸ் ஷீட்டில் பதிவிட்டேன். அடுத்து எத்தனை மணிக்கு ஒரு முறை செடேஷன் தர வேண்டும், டிரிப்ஸ் எவ்வளவு , போட வேண்டிய ஊசிகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். விபத்தில் முறிந்த தண்டுவடம் கை கால்களில் ஏற்பட்ட எலும்பு முறிவுகளை எக்ஸ்ரே எடுக்க குறிப்பிட்டிருந்தேன். வண்டியிலிருந்து  கீழே விழுந்த போது சாலையிலிருந்த மேடான வேகத்தடை  மார்பில் பட்டதால் விலா எலும்புகள் உடைந்து இதய வால்வு நசுங்கி சுவாசிக்க முடியாமல் செயற்கை சுவாசக் கருவியை தாற்காலிகத் தீர்வாக பொருத்தியிருந்ததை நீக்கி உடனடியாக  காலையில் ஆபரேஷன் செய்ய மார்பு முழுவதும் MRI ஸ்கேன் செய்ய நைட் டூட்டி டாக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். மேலும் நீங்கள் கேட்டுக் கொண்டதாலும்  ரவி ஆபத்தான கட்டத்தை கடந்து விட்டதாலும் அவரை தனியறைக்கு காலையில் மாற்றி விடவும் குறிப்பிட்டிருந்தேன். நான் என் வீட்டுக்குச் சென்று சேரும் முன்பே என் அலைபேசிக்கு புஷ்பராஜ் அழைத்தார். அதனால் வீட்டிற்குச் செல்லாமல் மருத்துவமனைக்குக் திரும்பினேன். என்னால் நிச்சயமாக கூற முடியும் ரவிக்கு உயிர் போகும் நிலையில் அவர் உடல் நிலை அப்போது  இல்லை. காலையில் நான்  ரவிக்கு அடிபட்டதால் இதயத்தில் பழுதடைந்த  வால்வை நீக்கி விட்டு செயற்கை வால்வை பொருத்துவதற்கு முடிவு செய்ததால் அவருடைய ஆக்சிஜன் லெவல், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ,ஆபரேஷன் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய பரிசோதனைகள் அனைத்தையும் இரவு நான் மருத்துவ மனையை விட்டு கிளம்பும் முன் ஒரு முறைக்கு இரு முறை பரிசோதித்து ரிபோர்ட்டை மற்ற மருத்துவர்களிடமும் கலந்தாலோசித்து விட்டு காலையில் ஆபரேஷனுக்கு நேரம் குறித்து விட்டு தான் கிளம்பினேன். அதனால் நான் உறுதியாகக் கூறுகிறேன் நான் புறப்பட்டுச் சென்ற அரை மணி நேரத்தில் ரவி இறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ரவி இறந்து விட்டார். இது எப்படி நிகழ்ந்திருக்கும் என்று என்னால் சிறிதளவு கூட அனுமானிக்க முடியவில்லை. ஐ யம் சாரி சார்.” என்று தலைமை மருத்துவர் சங்கர் தன்னிடம் கூறிய வார்த்தைகளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவனைப் போல் ஒரு வார்த்தை விடாது ஐஜி செந்தில் நாதனிடம் தெரிவித்தார் இராமனாதன். “டாக்டர் சங்கர் என்னிடம் தெரிவித்த இந்த தகவல் தான் எனக்கு என் மகனின் இறப்பில் ஏதோ மர்மமிருப்பதாக மனதில் சந்தேகம் தோன்ற முக்கிய காரணம் ” என்று ஐஜியிடம் தெரிவித்தார் இராமனாதன்.

இராமனாதனின் மனைவி வசந்தியின் மோசமான உடல்நிலையைப் பார்த்து  ரவி இறந்த நேரத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி அவரிடம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்கவே ஐஜி க்கு இயலாமல் போயிற்று. முடிந்தவரை தனது கேள்விகளையும் விசாரணைகளையும்  ரவியின் அப்பா இராமனாதனிடமே கேட்டு அறிந்து கொண்டார் ஐஜி. 

மருத்துவமனையில் தலைமை மருத்துவர் சங்கரிடமும்,  டாக்டர் புஷ்பராஜ் , செவிலியர்கள், மற்ற பணியாளர்கள் அனைவரிடமும் விசாரனை செய்ததில் அவர்கள் கூறிய  தகவல்கள் அனைத்தும் இறந்த ரவியின் பெற்றோர் கூறிய தகவல்களோடு ஒத்துப் போனது. ரவி இறந்தவுடன் உடற்கூறாய்வு செய்து தலைமை மருத்துவர் சங்கர் அளித்த அறிக்கையும் ரவியின் தந்தை தனிபட்ட முறையில்  வெளிநாட்டிலிருந்து வரவழைத்த உடற்கூறாய்வில் மேம்பட்ட திறமையுடைய மருத்துவர்கள்   பரிசோதித்து கொடுத்த உடற்கூராய்வு அறிக்கையும் எந்தவித மாறுபட்ட கருத்துக்களும் இன்றி ஒன்று போலவே இருந்தது. இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து எந்தவித முடிவிற்கும் வர இயலாமல் ஐஜி செந்தில் நாதன் மிகவும் குழப்பமடைந்தார். 

அன்று காலை மருத்துவமனையே அல்லோல கல்லோலமாக இருந்தது. கார்த்திக் என்ற நடுத்தர வயதைத் தாண்டிய ஆனால் மிகவும் ஆரோக்கியமான வங்கி அதிகாரி அதிகாலை உடற்பயிற்சி செய்ய தன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல்  சென்றவர் லாரி மோதி விபத்து நேர்ந்த இடத்திலேயே தலை நசுங்கி கபாலம் பிளந்து உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். நினைவை இழந்து செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அறையில் பல மருத்துவர்கள் அவருக்கு மாற்றி மாற்றி பல பரிசோதனைகள் செய்வதும், கார்த்திக்கின்  கிடைப்பதற்கு அரிய ரத்தப்பிரிவான (AB -)  ஏ பி நெகடிவ் இரத்தப் பிரிவு வேண்டி பல மருத்துவமனைகளுக்கு மற்றும், இரத்த வங்கிகளுக்கும், குருதிக் கொடையாளர்களுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவமனை பணியாட்கள் அவசர ஊர்திகளை அனுப்புவதும், கார்த்திக்கின் உறவினர்கள் நண்பர்கள் இப்படி கூட்டங்கூட்டமாக குருதிக் கொடையளிக்க வந்திருந்த அனைவரிடமும் ரத்தப் பரிசோதனை செய்வதும் என்று மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் கார்த்திக்கின் உயிரைக் காப்பாற்ற அங்குமிங்கும் தேனீக்களை விட சுறுசுறுப்பாக விரைந்து பறந்து கொண்டிருந்தனர்.

தலைக்காயம் ஒன்றைத் தவிர வேறு எந்த காயமும் இல்லாமல் நினைவின்றி கோமாவில் கிடந்த கார்த்திக்கைப் பரிசோதித்த  மூளை, நரம்பு சிறப்பு  மருத்துவர்கள்  செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தி அவரது இதயத்தை செயற்கையாக துடிக்க வைத்தனர். மற்ற முதலுதவி சிகிச்சைகள் முடிந்ததும் தற்போதைக்கு கார்த்திக் கோல்டன் ஹவர்ஸ் என்ற அந்த பதினொரு மணி நேர  ஆபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும்,    தலையில் உடனடியாக  காலையில் செய்ய வேண்டிய  ஆபரேஷனுக்கு ஆறு யூனிட் ஏ பி  நெகடிவ் குருதி தேவை என்பதையும் அது கிடைத்ததும்  ஆபரேஷன் செய்ய நேரம் குறிப்பது  இவை  எல்லாவற்றையும் அவருடைய மருத்துவ அறிக்கையில் பதிவு செய்து ஒப்பமிட்டு காலையிலிருந்து ஓயாமல் சிகிச்சையளித்த மருத்துவர்களும் சிறப்பு மருத்துவர்களும் கிளம்பினர். தலைமை மருத்துவர் சங்கரும் தீவிர சிகிச்சைப் பிரிவு நைட் டூட்டி டாக்டர்களிடமும் செவிலியர்களிடமும் கவனமாக இருக்கும் படி கூறி விட்டு தன் வீட்டுக்கு கிளம்பினார்.  சங்கர் தன் அறையை விட்டு கிளம்பும் போது ஐஜி செந்தில் நாதன் மருத்துவமனைக்குள் அவசர அவசரமாக உள்ளே நுழைவதைக் கண்டவர் ஒரு நிமிடம்  நின்று  யோசித்து மீண்டும் திரும்பி தன் அறைக்குச் சென்றார் சங்கர்.  

“ஹலோ டாக்டர். கிளம்பிட்டிங்களா? சாரி  நீங்க கிளம்பறதுக்கு முன்னே உங்களைப் பார்த்து ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசனும்னு தான்  அவசர அவசரமாக வந்தேன். வர வழியிலே கொஞ்சம் வேற வேலை வந்திடுச்சி. தாமதத்திற்கு மன்னிக்கவும் ” என்று பேசிக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்த ஐஜி செந்தில் நாதனைப் பார்த்து ” பரவாயில்லை சார். நீங்க உள்ளே வர்ரதை  மாடி சன்னல் வழியாகப் பார்த்திட்டு தான் டாக்டர் புஷ்பராஜ் நீங்க இன்னிக்கி காலையிலிருந்து என்னைப் பார்க்க இரண்டு முறை வந்ததாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. ரவியோட வழக்கு சம்பந்தமாக ஏதோ முக்கியமான விஷயத்திற்கு தான் நீங்க என்னைப் பார்க்க வருவிங்கன்னு  நானும் திரும்ப என் அறைக்கு வந்து உங்களுக்காக காத்திருக்கிறேன். சொல்லுங்க சார் என்ன விஷயம்?” என்று ஐஜி யிடம் வினவினார் சங்கர். வழக்கம் போல தன் இரவுப் பணியில் அறையைக் கூட்டித் துடைக்க உள்ளே நுழைந்த ஜேம்ஸ்  இன்னும் வீட்டுக்கு கிளம்பாமல் டாக்டர் சங்கர் இருப்பதையும் அவருக்கு எதிரில்  ரவியின் இறப்பு குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு  அடிக்கடி வரும் காவல்துறை அதிகாரியும் அமர்ந்திருப்பதைப் பார்த்து இருவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு தன் பணியை செய்ய ஆரம்பித்தார்.  அறையைச் சுத்தம் செய்யும் ஜேம்ஸைப் பார்த்த ஐஜிக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. “ஹலோ டாக்டர் சார் காலையிலிருந்து எனக்கு ரொம்ப அலைச்சல். தலை வலிக்குது. ஒரு காபி கிடைக்குமா?” என்று செந்தில் நாதன் கேட்கவும்” ஓ சாரி சார். வீட்டுக்கு கிளம்பும் அவசரத்திலே இருந்ததாலே உங்களை சரியாக கவனிக்கலை. காபி தானே எனக்கும் குடிச்சா தேவலைன்னு தோணுது. ஜேம்ஸ் நம்ம கேண்டீனிலிருந்து ரெண்டு காபி வாங்கிட்டு வாப்பா” என்று டாக்டர் சங்கர் கூறியதும் ” இதோ வாங்கிட்டு வரேன் சார்”  என்று அறையை விட்டு வெளியேறினார் ஜேம்ஸ். 

” இப்ப சொல்லுங்க ஐஜி சார்.ஜேம்ஸ் வெளியே போயிட்டார். கேண்டீன் போய் காபி வாங்கிட்டு வர எப்படியும் அரை மணி நேரமாகும்” என்று டாக்டர் சங்கர் கூறியதும் அவரைச் சற்றே வியப்புடன் நோக்கி ” பரவாயில்லையே நான் சொல்லாமலே உங்களுக்கு புரிஞ்சிடுச்சே ” என்று சிரித்த ஐஜி யைப் பார்த்து ”  நீங்க அறையை சுத்தம் செய்ற ஜேம்ஸை பார்த்துட்டே காபி கேட்டதும் எனக்குப் புரிந்தது”  என்று சங்கரும் சிரித்தபடியே பதிலளித்தார்.  

” நாம்  இங்கே உட்கார்ந்து பேச வேண்டாம்.  வாங்க தீவிர சிகிச்சைபிரிவிலிருக்கும் என்னோட தனியறைக்குப் போய் பேசலாம். அது என்னோட  பாஸ்வேர்ட் கொடுத்தால் மட்டும் திறக்கும் டோர்லாக்  வசதியிருக்கிற அறை  யாரும் வரமுடியாது” என்று ஐஜியை அழைத்துக் கொண்டு ICU க்குள் நுழைந்தார் சங்கர்.   தன் தனியறைக்குள் நுழைந்த சங்கரும் ஐஜியும் அதிர்ச்சி அடைந்தனர். ” சாரி சார். ரொம்ப அர்ஜெண்டா  ஸ்டிச் பண்ற இந்த ஸ்பெஷல்  நீடில்ஸ் எனக்கு தேவைபட்டது. என்னோடது கொஞ்சம் பிளண்ட் ஆயிடுச்சு. ஸ்டோர் ரூமுக்கு ஆளனுப்பி எடுத்துட்டு வர நேரமாகும்னு உங்க ரூம்லே இருக்கிறதை எடுத்துக்கலாம்னு….. நீங்க இல்லாதப்ப வந்ததுக்கு மன்னிச்சிடுங்க சார்” என்று ஸூட்ச்சர்ஸ் போட தேவைப்படும் அந்த ஸ்பெஷல் ஊசிகளை எடுத்துக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்த டாக்டர் புஷ்பராஜைப் பார்த்து அதிர்ச்சியிலிருந்து மீளாமல் நின்றிருந்த சங்கரின்  நிலை புரிந்து முதலில் சுதாரித்துக் கொண்ட ஐஜி செந்தில் நாதன் “டாக்டர் சங்கரோட அறைக்கதவு பாஸ்வேர்ட் உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் உங்களிடம் எப்பொழுதாவது தெரிவித்திருக்கிறாரா?” என்று கேட்டதும். ” இல்லே சார் அவர் என் கிட்டே சொன்னதும் இல்லை. நானும் அவர்கிட்டே இதுவரை கேட்டதும் இல்லை. இது போல் ஒரு எமர்ஜென்சி டைம்லே நள்ளிரவு இரண்டு மணிக்கு அந்த அகால வேளையிலே எப்படி டாக்டர் சாரை  தொந்திரவு பண்றதுன்னு நான் என்ன செய்றதுன்னு தெரியாமல் தவிச்சப்ப  கிளீன் பண்ணிட்டிருந்த ஜேம்ஸ் தான் சங்கர் சாரோட பாஸ்வேர்ட் சொல்லி இந்த அறையைத் திறக்க எனக்கு உதவி செய்தார்.  இது ஒரு பெரிய விஷயம்ன்னு எனக்குத் தோணலை. அதனாலே உங்ககிட்டே சொல்லாமல் விட்டுட்டேன். வேணும்னு சொல்லாம இருக்கலை. சாரி சார்” என்றார்  டாக்டர் புஷ்பராஜ். 

அதிர்ச்சியுடன் அவர் சென்றதும் அங்கிருந்த தன் கணினியை  ஆன் செய்து ஐசியுவில் இரவில் நடக்கும் நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் சிசிடிவியையும் ஆன் செய்தார் சங்கர்.  அதைப் பார்த்த ஐஜி செந்தில் நாதன் “மிஸ்டர் சங்கர் இந்த சிசிடிவி வசதியை இயக்கி நீங்கள் தினமும் பதிவு செய்கிறிர்களா?” என்று கேட்டதும் பகலில் செய்வதில்லை சார். நோயாளிகளின் பாதுகாப்பிற்காக இரவில் நான் வீட்டிற்கு கிளம்பும் முன் சிசிடிவியை ஆன் செய்து விட்டு செல்வேன். காலையில் வந்ததும் ஆஃப் செய்து விடுவேன்” என்று டாக்டர் சங்கர் கூறினார். திடீரென்று கண்கள் பளிச்சிட ” அப்படியானால் கடந்த நாட்களில் இரவில் ஐசியுவில் நடந்த நிகழ்ச்சிகளை நான் பார்க்க விரும்புகிறேன். குறிப்பாக ரவி இறந்த அன்றிரவு நிகழ்ச்சிகளை காண விரும்புகிறேன். ” என்று ஐஜி கூறியதும் ” அன்று இரவும் நான் வழக்கம் போல் சிசிடிவியை ஆன் செய்து விட்டுதான் கிளம்பினேன். பார்க்க முடியும் சார். என்று சங்கரும் சிசிடிவியை இயக்கி ஆவலாக ரவி இறந்த அன்று இரவு நேரத்தில் பதிவான காட்சிகளைக் காண குறிப்பிட்ட தேதியையும் நேரத்தையும் கொடுத்தவுடன் சிசிடிவியில் ஓடிய காட்சிகளைப் பார்த்து இருவரும் பெரிதாக அதிர்ந்தனர். டாக்டர் புஷ்பராஜின் அலட்சியத்தையும் ரவியைக் கொன்ற கொலையாளியையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கொலையாளியை கைது செய்ய தன் கைத்துப்பாக்கியுடன் ஐசியுவிற்குள் கார்த்திக்  படுத்திருந்த கட்டிலுக்கு பக்கத்திலிருந்த திரைச்சீலைக்கு பின்னால் இருட்டாக இருந்த இடத்தில் ஒளிந்து தன் துப்பாக்கியுடன் தயாராக நின்று கொண்டார்  ஐஜி. 

” வாப்பா ஜேம்ஸ் நான் கிளம்பறேன். காபி வேண்டாம் நீ குடிச்சுக்கோ.  ரூமைப் பூட்டி சாவியை சுமதிகிட்டே கொடுத்திட்டு போய் உன் வேலையைப் பாரு”  என்று கூறி டாக்டர் சங்கர் வீட்டுக்கு கிளம்புவது போல் கிளம்பி வேறு வழியாக ஐசியுக்குள் சென்றார்.  

காபியை குடித்து விட்டு உள்ளே வந்த ஜேம்ஸைப் பார்த்ததும் வழக்கம் போல் செவிலியர்களுடன்  கிளம்பினார் டாக்டர் புஷ்பராஜ்.  அவர்கள் கிளம்பியதும்  மேசையின் மேல் ஐசியுவில் சிகிச்சையிலிருந்த நோயாளிகளைப் பற்றிய குறிப்புகளை எடுத்து ஒவ்வொன்றாக எடுத்து படித்துப் பார்த்தார். அன்று காலையில் விபத்துக்குள்ளான கார்த்திக் மெடிகல் ரிப்போர்ட் ஷீட்டை படித்ததும் அவர் படுத்திருந்த கட்டிலருகில் சென்று நின்றார்.

” சாரி கார்த்திக் இனி மேல் நீங்கள் உயிர் பிழைத்து ஆகப் போவது ஒன்றுமில்லை.  மரத்தை விடாமல் கொத்தும் ஒரு மரங்கொத்தியைப் போல் என் மனதை விடாமல் நித்தமும் கொத்திக் கிழிக்கும் இந்த மரணவலியை மறக்க எனக்கு இதைத் தவிர வேறு ஒன்றும் வழி தெரியவில்லை”  என்று முணு முணுத்தபடி செயற்கை சுவாசம் பொருத்தியிருந்த கருவியின் குமிழைப் பிடித்து கார்த்திக்கிற்கு சென்று கொண்டிருந்த ஆக்சிஜன் குழாயின் வாயை மூட மெல்ல நிதானமாக குமிழைத் திருக ஆரம்பித்தார் பதினைந்து வருடங்கள் பர்மாவில்  இதயநோய் அறுவை சிகிச்சையில் சிறப்பு மருத்துவராக பணியாற்றி கண் முன்னால் போரில் குண்டடிபட்டு மனைவி மக்களை இழந்ததால் மனநிலை திரிந்து மனநோயாளிகளாக மாறி பர்மாவிலிருந்து இந்தியா வந்து  அகதியாக வாழ்ந்து வரும் ஜேம்ஸ்.  

வழக்கம் போல் புஷ்பராஜ் செவிலியர்களுடன் கிளம்பியதும்  ரவியைக் கொன்றது போலவே கார்த்திக்கையும் கொல்ல முயன்ற   ஜேம்ஸை தன் கைத்துப்பாக்கியுடன் சென்று   சுட்டுவிடுவதாக கூறி மிரட்டி  அருகில் சென்று அவன் கைகளை முறுக்கி பின்னால் மடக்கி பிடித்து கைது செய்தார் ஐஜி செந்தில் நாதன்

 திட்டமிட்டு கொலை செய்த ஜேம்ஸ் மனநிலை பிறண்டவன் என்பதால் மனநல மருத்துவமனையில் அவன் குணமாகும் வரை இருக்க வேண்டும். நலமடைந்ததும் சாகும் வரை  தூக்கிலிட நீதிமன்றம் ஆணையிட்டது. தன் பணியில் அசிரத்தையாக இருந்த குற்றத்திற்கு டாக்டர் புஷ்பராஜையும் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய  இரண்டு செவிலியர்களையும் மருத்துவமனை நிர்வாகம்  பணி நீக்கம் செய்தது.ஆக்கம் கோமகள் குமுதா

ஆக்கம் கோமகள் குமுதா

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: