தினமும் குப்பை கொட்டப் போகும் பொழுது கீழ் தளத்தில் குடியிருக்கும் கனடா நாட்டுப் பெண்மணியான கிளாரா என்பவர் பேசிப் பழக்கமாகி பதிவருக்கு தோழியானார். கிளாராவுக்கு சேலை கட்டும் இந்தியப் பெண்களின் மேல் அளவு கடந்த காதல். பதிவரைக் காணும் பொழுதெல்லாம் கட்டிப் பிடித்து முத்தம் தருவார்.
பொங்கலுக்காக புதுச் சேலை அணிந்திருந்த பதிவரை வழக்கம் போல் குப்பை கொட்டச் செல்லும் போது தோழிக்கு சர்க்கரைப் பொங்கலை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு சென்ற பதிவரைக் கண்ட தோழி கிளாரா மகிழ்ச்சி கொப்பளிக்க என்ன விஷேசம் என்று விசாரிக்க இன்று எங்கள் ஊரில் மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகை, பொங்கல் திருநாள் என்று கூறி சர்க்கரைப் பொங்கலை கிளாராவுக்கு கொடுத்தார். புடவையையும் பொங்கலையும் ரசித்த ருசித்த கிளாரா நாளை ஞாயிற்றுக் கிழமை தன் வீட்டிற்கு வந்து தனக்கும் பொங்கல் செய்வதை கற்றுத் தர இயலுமா என்று பதிவரைக் கேட்டார்.
பதிவரும் ஆஹா அது என் பாக்கியம் என்று ஆனந்தமாக தன் தோழிக்கு பொங்கல் செய்வது எப்படி என்று சமையல் கலை பாடம் எடுக்க சமைப்பதற்குத் தேவையான சகல உபகரணங்களுடன் அடுத்த நாள் மதியம் கிளாரா வீட்டுக் சென்று கதவைத் தட்டினார். கதவைத் திறந்ததும் தோழியின் வீட்டின் உள்ளே சென்ற பதிவர் அதிர்ச்சியில் கை கால்கள் நடுங்க சிலையாக உறைந்து நின்றார். தினமும் வீட்டின் வெளியே பால்கனியில் அல்லது லிஃப்டில் தோழியை சந்திக்கும் பதிவர் அன்று முதன்முறையாக அவர் வீட்டிற்குள் சென்ற போது பதிவரை வரவேற்றது இடுப்பளவு உயரமுள்ள கிளாராவின் கிளேடியேட்டர்களான ரோஸ் & போஸ் என்ற இரண்டு ஹஸ்கி இன நாய்கள். மூட்ஸ் & ரூக்ஸ் என்ற இரண்டு பெரிய காட்டுப் பூனைகள். சுற்றிச் சுற்றி வரவேற்றதும் வீரங்கனையான பதிவர் உடல் வெட வெடக்க வியர்த்து வழிய தன் அச்சத்தை வெளிக்காட்டாமல் எப்படியோ சமாளித்து ஒரு சோஃபாவில் அமர்ந்தார்.
பதிவர் சமைப்பதை வீடியோ படம் பிடிக்க எல்லா முன்னேற்பாடுகளையும் முறைப்படி செய்திருந்த கிளாரா தோழிக்கு அதில் ஏதாவது ஆட்சேபனை உள்ளதா என்று விசாரிக்க மனதில் ஆயிரம் விதமான கலக்கம் இருந்தாலும் பந்தாவாக சரி என்று சம்மதித்த பதிவர் அந்த மின்சார அடுப்பின் அருகே சென்று சுவிட்சை தொட்டார். உடனே மூட்ஸீம் ரூக்ஸீம் பதிவரை நெருங்கி விரோதமாக வாலைத் தூக்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. கிளாரா உடனே அவர்களை செல்லமாக கொஞ்சி சமாதானபடுத்தி அருகிலிருந்த சோஃபாவில் அமரவைத்தார்.
டபராவில் தண்ணீர் சூடானதும் அரிசையை போட்ட பதிவர் அது கொதித்து மேலெழும்பி பொங்க ஆயத்தமானவுடன் “பொங்கலோ பொங்கல் ” என்ற கூவியதும் ரோஸும்& பூஸும் பதிவரின் இரண்டு புறமும் தோளின் மேல் கால் வைத்து உர்ரென்று தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதிர்ச்சியில் கீழே விழுந்த பதிவரை தோழி தாங்கிப் பிடித்துக் கொண்டு தன் செல்லப் பிள்ளைகளை அங்கிருந்து செல்லுமாறு மிகவும் வேண்டினார். தங்கள் எஜமானியின் அன்புக்கு கட்டுப்பட்ட அந்த இரண்டு பைரவர்களும் பதிவரின் தோளிலிருந்த தங்கள் கால்களை எடுத்து தரையில் வைத்து கீழிறங்கினர். ஒரு வழியாக சர்க்கரைப் பொங்கலை பயம் பொங்கப் பொங்க சமைத்து முடித்து அதை ருசிபார்க்க தோழியிடம் தட்டில் போட்டு நீட்டினார். தட்டை வாங்கிய கிளாரா டேபிளில் வைத்து தன் குழந்தைகளுக்கு கொஞ்சிக் கொஞ்சி ஊட்டினார். தானும் சிறிது உண்டார். பதிவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு தன் வாழ்நாளில் இது வரை யாரும் தன் அம்மா உள்பட தனக்காக சமைத்து கொடுத்ததே இல்லை. அன்று தன் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான நாள் என்று பதிவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டார் 80 வயதான தோழி கிளாரா. அந்த சிறிய உதவிக்கு நன்றியாக பதிவருக்கு பல பரிசுகளை கொடுத்து கொண்டாடினார் கிளாரா. இருந்தாலும் இந்த வெள்ளைக்காரங்க அன்பு கொஞ்சம் வித்தியாசமானது தான் என்று மனதிற்குள் வியந்தார் பதிவர்.
இன்று பதிவரின் பயம் பொங்கிய திருநாள்.😊
