இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகாலச்சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரண விசயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணை கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றி பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ‘ தி கிராண்ட் அணைக்கட் ‘ என்றார்.

சோழ மன்னர்கள்
மழைக் காலங்களில் மட்டுமே பெருக்கெடுக்கும் நொய்யல் ஆற்றின் நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் விதமான நீர் மேலாண்மைத் திட்டத்தை 800 ஆண்டுகளுக்கு முன்பு(கி.பி.1000-1300) கொங்கு மண்டலத்தை ஆண்ட சோழர்கள் உருவாக்கி வைத்தனர்.
நொய்யலை ஆதராமாகக் கொண்டு 32 அணைக்கட்டுகளும், 40 க்கும் மேற்பட்ட குளங்களும் கட்டமைக்கப்பட்டன. மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் நீரானது முழுவதும் வீணாகாமல் இடை இடையே தடுக்கப்பட்டு அணைக்கட்டுகளிலும் அதன் வழியாக குளங்களிலும் சேமிக்கப்பட்டது. அணைக்கட்டுகளில் இருந்து ஒரு சங்கிலித் தொடர் போன்ற ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி நொய்யல் ஆற்றின் கரையோர மக்கள் மட்டுமல்லாது தொலைவில் இருந்த மக்களும் விளை நிலங்களும் பயனடையும் விதத்தில் நீர் மேலாண்மை திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.இதன் மூலமாக குடிநீர், பாசனம், நிலத்தடிநீர் போன்ற பயன்களை மக்கள் அடைந்தனர். பின்னர் நூற்றாண்டுகளுக்கு பிறகு வந்த ஆங்கிலேய அரசும் சோழர்கள் கட்டமைத்த நீர் மேலான்மைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருந்தனர்.

தந்தையின் உத்தரவை மதித்து இளவரசன் இராஜாதித்தன் தன் நாட்டு படைகளுடன் எதிரி நாட்டை நோக்கி பயணப்படுகிறான்.
படைகள் பயணித்து, தன்னுடைய சொந்த நகரை விட்டு நகர்ந்து
எதிரியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
நகர்ந்து கொண்டே சென்ற அந்த படை, ஒரு நாள் நகருக்கு வெளியே ஒரு இடத்தில் முகாமிட்டு தங்குகின்றது. போருக்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதால் முகாமில் தங்கியிருந்த படை வீரர்களிடம் வேறு ஒரு பணியைச் செய்யச் சொல்லி உத்தரவிடுகிறான் அந்த
இளவரசன் இராஜாதித்தன்.
காவிரியில் வெள்ளம் வரும் காலங்களில் அந்த நீர் வீணாக சென்று கடலில் கலக்கின்றதே என்று வருந்திய இளவரசன், அந்த நீரை சேமிக்க எண்ணி அந்த படை வீரர்களிடம் ஒரு பெரிய ஏரியை அங்கு
வெட்டச் சொல்லி உத்தரவிடுகிறான்.
இளவரசனின் உத்தரவை ஏற்று படை வீரர்கள் மிகுந்த கவனத்துடனும்,
பொறுப்புடனும் பெரிய ஏரியை வெட்டுகிறார்கள். வெட்டி முடித்ததும் தன்னுடைய தந்தையின்
புனைப் பெயரான “வீரநாராயணன்” என்று பெயர் வைக்கும் படி கூறிவிட்டுச் போருக்குச் சென்றுவிடுகிறான்.
சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு
பெரிய ஏரியை பல மாதங்களாக உயிரை கொடுத்து அந்த படை வீரர்கள் வெட்டி முடிக்கிறார்கள்.
வெட்டிய அந்த ஏரியை பார்க்க போருக்குச் சென்ற அவர்களின் இளவரசன் இராஜாதித்தன் உயிரோடு திரும்பவில்லை. தக்கோலம் போருக்கு சென்ற இளவரசன் எதிரிகளிடம் வீரமாக போரிட்டு யானை மீது இருந்தவாரே இறந்து ” யானை மேல் துஞ்சிய தேவர் ” என்று போற்றப்படுகிறான்.
ஆனால் அவன் வெட்டுவித்த ஏரி இன்றும் உள்ளது, ஏரி வெட்டப்பட்டு
1100 ஆண்டுகள் ஆகின்றது, சென்னையில் வாழும் ஒன்றரை கோடி பேருக்கு இன்றைக்கும் குடிக்க நீரை தந்துகொண்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பல ஊர்களுக்கு குடிநீரை விநியோகிக்கின்றது. இந்த ஏரியின் மூலமாக அந்த மாவட்டமே பயிர் செய்து பிழைகின்றது. ஆம் அது தான் “வீராணம் ஏரி” என்கின்ற “வீரநாராயணன் ஏரி”.
ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் “மடை”
மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. .
வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும்.
அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள்.
இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.
வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.
மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார்.
மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார்.
மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும்.
அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.
மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள்.
மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு.
இவர்கள்தான் “மடையர்கள்” என அழைக்கப்பட்டார்கள்.
கொங்கு வரலாற்றில் ஒப்பில்லாதவர் காலிங்கராயர் .இவர் கி . பி 13ம் நூற்றாண்டிலேயே முப்போகம் விளையும் வண்ணம் அணைகட்டி , கால்வாய் வெட்டி அவற்றை நாட்டுடமையாக்கினார் .
வெள்ளோடு கனகபுரத்தை சேர்ந்த நஞ்சையகவுண்டர் மகன் லிங்கையன் . இவர் வீரபாண்டியன் (கி.பி.1265 – 1280) ஆட்சியில் தளபதியாகவும் அமைச்சராகவும் இருந்தார் . கொங்கு நாட்டை நிர்வகிக்கும் உரிமையை பெற்ற இவர் , வெள்ளோட்டை தலைமையிடமாக கொண்டவர் . வெள்ளோட்டைச் சுற்றி கிழக்கே காவிரி, தெற்கே நொய்யல் மற்றும் வடக்கே பவானி என நதிகள் ஓடினாலும் வெள்ளோடு ஒரு மேட்டுநில வறண்ட பூமியாகவே இருந்தது. தனது நாட்டினை வளப்படுத்த எண்ணிய காளிங்கராயர் வடக்கே பவானியிலிருந்து ஒரு கால்வாய் மூலம் தம் நாடு நெடுகிலும் நீர்பாய்ச்சி இறுதியில் காவிரியில் கலக்குமாறு ஒரு கால்வாய் வெட்ட எண்ணினார். ஆகவே,பவானி ஆற்றில் அணை கட்டி பூந்துறை நாட்டில் சாமை விளையும் காடெல்லாம் சம்பா விளையும் பூமியாக மாற்ற எண்ணினார் .
முதலில் பவானி ஆற்றில் ஒரு அணைகட்டி நீரினைத் தேக்கி பிறகு அந்நீரினை கால்வாய் மூலம் தன் நாடு வழியாக செல்லுமாறு திட்டம் வகுத்தார்.மன்னர்
வீரபண்டியனின் உதவியாலும் , தன் நாட்டில் விதித்த காலிங்கராயர் விநியோகம் என்ற வரிப்பணம் மற்றும் குடும்ப பணம் ஆகியவற்றால் ஊராட்சி கோட்டை மலையையும் , கல் கொண்டு வரும் வழியையும் விலைக்கு வாங்கி ,12 ஆண்டுகளில் கால்வாய் மற்றும் அணைக்கட்டும் கட்டி முடித்தார்.
கால்வாய் நீர் உடனடியாக விரைந்து செல்லாத வண்ணம் பாம்புபோல வளைந்து செல்லுமாறு கட்டியதால் தண்ணீர் நின்று மெதுவாக சென்றது. இதனால் நிலத்தடி நீரும் பராமரிக்கப்பட்டது. நாடும் வளம் பெற்றது.
நீர்மேலாண்மைக்கு இன்றளவிலும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது காலிங்கராயன் கால்வாய் என்றால் அது மிகையல்ல.
ஆக்கம்
கோமகள் குமுதா
அடடே வாங்க சகோ நலமா..?
ரொம்ப நாளா உங்க பதிவுகளை பார்க்க முடியலீங்..
இன்னைக்கு அருமையான நான் அறிந்திடாத அரிய பதிவோடு வந்துருக்கிறீங்க.
வெகு சிறப்புங்க..!
பகிர்ந்தளித்தமைக்கு நன்றிகளும் பாராட்டுகளுங்க..!
LikeLiked by 1 person
ஆமாங்க சகோதரர். கொஞ்சம் வீட்டு வேலை. அதான் முகநூல் பக்கம் வர முடியலை. ரொம்ப மகிழ்ச்சிங்க சகோதரர். அன்பும் நன்றியும் 🙏
LikeLike