சகோதரர் கோடி சேர பிள்ளை என் நாவல்கள் அனைத்தையும் வாசித்து அழகான நடையில் நல்ல உவமான உவமேயங்களோடு விமர்சனம் செய்திருப்பது என் படைப்புகளுக்கு கிடைத்த பெரிய சன்மானம். கதைகளை படித்து அதன் கருத்தை அழகாக தான் ரசித்த விதத்தை தன் பாணியில் கருத்துக்களை வெளிப்படுத்துவது என் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு பெரும் பேறு. தம்பி உங்கள் பேரன்பிற்க்கும் பேரழகான இந்த விமர்சனங்களுக்கும் நன்றி என்ற மூன்றெழுத்தை கூறுவதை விட என்னால் என்ன கைமாறு செய்துவிட இயலும். என் நெஞ்சார்ந்த நன்றி தம்பி.❤️🙏🙏🙏
அமெசான் கிண்டிலிலும் தரவிரக்கம் செய்து வாசியுங்கள் நட்பூக்களே
அருண்மொழி சந்திரமல்லி – கோமகள் குமுதா

ராஜராஜசோழன் என்றவுடனே நம் நினைவுக்கு வருவது தஞ்சாவூர் பெரிய கோவில். அவன் வென்ற இடங்கள், ஆட்சி பரிபாலங்கள் மற்றும் அவனது கப்பல் படைகள். ஆனால், அடிப்படையில் அவனும் ஒரு மனிதன்தான் என்பதையும் அவனுக்கும் சோகம், கண்ணீர் எல்லாம் இருக்கும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இல்லையில்லை நினைப்பதே இல்லை, நினைத்தால் தானே மறப்பதற்கு.
தாவரமாக இருந்தால்தான் வெளிச்சத்தின் ருசியை அறிந்து கொள்ள முடியும் என்பதுபோல, ஒரு சகமனுஷியாக ராஜராஜனை வேறொரு கோணத்தில் அணுகி இதுவரை எந்த எழுத்தாளரும் கண்டுகொள்ளாத அவனது அன்பு, காதல், பாசம் மற்றும் சோகம் போன்றவற்றை அறிந்து உள்வாங்கி அவனது கண்ணீர் துளிகளில் தன் கற்பனையை கலந்து “அருண்மொழி சந்திரமல்லி” என்ற தன மூன்றாவது நாவலை பல வண்ணங்கள் உடைய ஓவியம் போல வடித்துள்ளார் ஆசிரியர் “கோமகள் குமுதா”.
இந்த நாவலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நம்மை ஒரு இனம் புரியாத உலகத்திற்குள் கூட்டி செல்கின்றன.. ஆற்றில் மிதக்கும் ஒரு இலையைப் போல ஒவ்வொரு அத்தியாயங்களும் நம் கண் முன்னால் கடந்து செல்கின்றன. குஞ்சராமல்லியும் அவளது மகள் சந்தனமல்லியும் மனதை கனமாக்கி மறைகின்றனர்.
ஒரு ராஜாவாக மட்டுமே இல்லாமல், ஒரு சாதாரண தந்தையாக ராஜராஜசோழனை நமக்கு அறிமுகம் செய்கிறது இந்த நாவல். வீரத்தால் வெல்ல முடியாத நாட்டை ஒரு மதத்தின் மூலமாக மக்களை மடைமாற்றி அந்நிய ஏகாதிபதியத்துக்கு வித்திட்ட நிகழ்வை பளாரென்று அறைவது போல பதிவு செய்கிறார் ஆசிரியர் கோமகள் குமுதா.
தலைப்புக்கு ஏற்றார்போல சந்திரமல்லியின் பார்வையில் நாவல் நகரும் என்று நினைத்து இருந்தேன். ஆனால், ராஜராஜனின் பார்வையில் நகர்கிறது அந்த வகையில் எனக்கு ஏமாற்றமே.!
ஆசிரியரின் அடுத்த புத்தகத்திற்காக காத்து இருத்தலுடன்..
✍️ கோடி சேர பிள்ளை