கனவுகளைத் தின்னும் மான்குட்டி

வணக்கம்.🙏💐🍫 அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். 🙏 இந்த வருட தமிழ் புத்தாண்டுக்கு அமெசானில் நான் வெளியிட்டுள்ள எனது புதிய குறுநாவல் ” கனவுகளைத் தின்னும் மான்குட்டி. தமிழ்கூறும் நல்லுலகைச் சார்ந்த வாசகப் பெருமக்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன். நன்றி.🙏😊

சங்ககால பாடல்களில் உள்ள தமிழர்கள் செய்த சர்வதேச வணிகத்தை பற்றிய அரிய தரவுகள்.

தமிழரும் வாணிபமும்

பழந்தமிழ்நாடு :

உழவு, கைத்தொழில், வாணிகம் என்னும் மூன்றுமே ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்வுக்கு அடிப்படையாகும். ஒரு நாட்டின் செல்வ வளத்திற்கு ஏதுவான தொழில் வாணிகத் தொழிலேயாகும். ஐவகை நிலங்களான தமிழகத்தை சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் தொன்று தொட்டு நிலையாக ஆண்டு வந்ததால் பழந்தமிழகம் சேரநாடு சோழநாடு பாண்டியநாடு என முப்பெரும் பிரிவாகப் பாகுபட்டிருந்தது.

மூவேந்தர்களும் அவர்களின் துறைமுகப்பட்டினங்களும்:

தொண்டி, முசிறி,நறவு, மாந்தை, காந்தளூர், விழிஞம் ஆகியவை சேரநாட்டுத் துறைமுகங்கள்.
உவரி , கொற்கை, காயல் இவை பாண்டி நாட்டுத் துறைமுகங்கள்.
நாகை, புகார், கடன்மல்லை ஆகியவை சோழநாட்டுத் துறைமுகங்களாகும்.

தொண்டியும் உரோமர்களும்:

மேனாட்டு வாணிகம் பெரும்பாலும் சேரநாட்டுக் கடற்றுறைகள் வழியாகவே நடந்து வந்தது.
உலகிலேயே அரியவகை நீலமணிக் கற்கள் கொங்கு நாட்டில் புன்னாட்டில் மட்டுந்தான் கிடைத்தன.இந்த நீலக்கற்களை ஆக்வா மரினா( Aquamarina) என்று உரோம சாம்ராச்சியத்தில் பெயர் பெற்றிருந்தது.

இந்த நீலக்கதிர்மணிகளைப் பற்றிய சங்ககாலப் பாடல்கள்:
” இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடு”

  • புலவர் கபிலர்

” சில்லேறாளர் பனித்துறைப் பகன்றைப் பாய்குடைத்
தெரியல் கழுவுறு கலிங்கங் கருப்பச்சூடி
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் அகன்கண் வைப்பின் நாடு”

  • புலவர் அரிசில் கிழார்.

மேனாட்டவரான தாலமி (Ptolemy) யவனர் பற்றி எழுதியுள்ள பூகோள நூலில் இந்த நீலக்கதிர்மணிகள் கிடைக்கும் இடத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அரியவகை நீலக்கதிர்மணிகள் யானைத்தந்தங்கள், அகில் சந்தன மரக்கட்டைகள் ஆகியவற்றை வாங்க யவனர்கள் கொங்கு நாட்டுக்கு வந்து தங்கி வாணிகம் செய்ததற்கு வலுவான ஆதாரங்கள் சமீபகாலத்தில் தமிழகத்தில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட உரோம நாணயங்களே ( தங்கம், வெள்ளி, மிகக்குறைவான தாமிரம்) நற்சான்றாகும். பெருவாரியான நாணயங்கள் 80 விழுக்காடு கொங்கு நாட்டில் கோயம்புத்தூர் ( வெள்ளலூர்), பொள்ளாச்சி, கரூர், கலயமுத்தூர் ஆகிய ஊர்களில் கண்டெடுக்கப்பட்டன.

இக்காசுகள் எல்லாவற்றிலும் உரோம சக்கரவர்த்திகளின் தலையுருவம் சிலவற்றில் அவர்களது மனைவியரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதிவரை உரோம சாம்ராச்சியத்தை அரசாண்ட அரசர்களின் உருவங்களும் முத்திரைகளும் இக்காசுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.இந்தக்காலம் நம்முடைய ஆராய்ச்சிக்குரிய கடைச்சங்க காலத்தின் இறுதியாகும்.

கொங்குநாடு உள்நாடாகையால் சேர அரசரின் பரம்பரையான பொறையர் ஆண்டதால் அவர்கள் தொண்டி மாந்தை என்ற இரண்டு துறைமுகங்களைத் தங்களுக்கென்று வைத்திருந்தனர்.

கொங்கு நாட்டை அரசாண்ட இளஞ்சேரலிரும் பொறை
” வளைகடல் முழவில் தொண்டியோர் பொருநன்” என்றும்

” திண்டேர்ப் பொறையன் தொண்டி” என்றும் போற்றப்படுகிறான்.

யவனர் தொண்டியைத் ” திண்டில்” என்றழைத்தனர்.

மேற்திசை நாடுகளும் முசிறித்துறைமுகமும்:

யவனர் தமிழ்நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்ட வரலாற்றை அறிந்து கொள்வோம். கிரேக்கர்களும் உரோமர்களும் வருவதற்கு முன்பு அதாவது கிருஸ்து சகாப்தத்துக்கு முன்பே அரபிநாட்டு அராபியர் தங்களுடைய சிறிய படகுகளில் சேரர்களின் மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கு வந்து வாணிபஞ் செய்தனர்.அராபியர் உலகப்புகழ் பெற்றிருந்த முசிறித் துறைமுகப்பட்டினத்தின் ஒரு பகுதியில் தங்கி வாணிபஞ் செய்தனர். அந்த இடம் பந்தர் என்று பெயர் பெற்றிருந்தது. இதை கீழ்வரும் பதிற்றுப் பத்து செய்யுளினால் அறியலாம்.

” இன்னிசைப் புணரியிரங்கும் பௌவத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் கமழுந்தாழைக் கானலம் பெருந்துறை”

” கொடுமணம்பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ்முத்தம்.”

இப்படி அராபியர் நேரிடையாக தமிழகம் வந்து வாணிபஞ் செய்து நாளடைவில் பெரும் லாபம் ஈட்டியதால் பேராசை காரணமாக உரோமர்கள் நேரிடையாக தமிழகம் வருவதை தடுத்தனர்.

உரோமர்களை கிரேக்க அரசன் அகஸ்தஸ் வென்று அலெக்சாண்ட்ரியா, கிழக்காசியாவின் சில பகுதிகள் அராபியத்துறைமுகங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். ஹிப்பலஸ் ( கி.பி. 47) என்னும் கிரேக்க மாலுமி பருவகாற்றின் உதவியால் நடுக்கடலின் ஊடே கப்பலைச் செலுத்தி விரைவாக முசிறித்துறைமுகத்தை வந்தடைந்தான். இதனால் யவனர்கள் தொடக்கத்தில் வாணிகஞ் செய்ய நேரிடையாக தமிழகம் வருவதற்கு ஆகும் பயணநாட்களில் நாற்பது குறைந்தது . கிரேக்க மாலுமி ஹிப்பலஸ் கண்டுபிடித்து அவன் பெயரிலேயே அழைக்கப்படும் ஹிப்பலஸ் பருவக்காற்று இப்படித்தான் பெயர்பெற்றது.

தமிழ் வாணிபத்தின் இதயம் போன்ற இடம் சேரர்களின் முசிறித்துறைமுகம்.
இங்கு அழகான யவனக்கப்பல்கள் வந்து பொன்னைக் கொடுத்து கறியை ( மிளகு) ஏற்றிக் கொண்டு போயின.

” கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி”

என்று புலவர் தாயங்கண்ணனார் பாடினார்.

முசிறித்துறைமுகம் யவனர்களின் பெரிய மரக்கலங்கள் வந்து தங்குவதற்குப் போதுமான ஆழமுடையதாக இல்லை.ஏனென்றால் அங்கு கடலில் கலந்து பேரியாறு மண்ணை அடித்துக் கொண்டு வந்து ஆழத்தைத் தூர்த்துவிட்டது. அதனால் ஆழமில்லாமற் போகவே யவன மரக்கலங்கள் துறைமுகத்துக்கு அப்பால் கடலிலே நங்கூரமிட்டு நின்றன. மிளகு மூட்டைகளைத் தோணிகளில் ஏற்றிக் கொண்டுபோய் யவனமரக்கலங்களில் ஏற்றிவிட்டு அதற்கு ஈடாக அதே தோணிகளில் யவனப்பொற்காசுகளை ஏற்றிக் கொண்டு வந்தார்கள்.இதை பரணர் இவ்வாறு பாடினார்.

” மனைக் குவை இய கறிமுடையாற்
கலிச்சும் மைய கரை கலக்குறுந்து
கலந்தந்த பொற் பரிசம்
கழித் தோணியார் கரை சோக்குந்து
…. …… ……
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி”-

முசிறித்துறைமுக பட்டினத்திலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட வகை பொருட்கள் யவனர்களுக்கு ஏற்றுமதி செய்தனர். மிளகு, மணப்பொருள்கள், முத்து, யானைத் தந்தம் எஃகு முதலியன மிகுதியாக ஏற்றுமதியாயின.

கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் பாபிலோனிய நாட்டை ஆண்ட ஊர்தயா என்னும் மன்னனால் சாலடிய நாட்டின் தலைநகரான ஊர்(ur) என்னும் நகரில் சேரநாட்டிலிருந்து ஏற்றுமதியான தேக்கு மரத்தினால் தான் திங்கட்கோட்டம் கட்டப்பட்டது.
கி.மு.2600 இல் தமிழகத்திலிருந்து கருங்காலி மரம் வாசனைப் பொருள்கள் முதலியன எகிப்து நாட்டிற்கு முசிறியிலிருந்து ஏற்றுமதியானதாக ” ஆக்கஃப்” என்னும் இடத்திலுள்ள கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
2500 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய தமிழர்கள் பெரும் கடலோடிகளாகவும் உலகளாவிய வணிக மேலாண்மை மிக்கவர்களாகவும் தங்கள் சொந்த நாவாய்களில் பலதரபட்ட பொருள்களை ஏற்றிக் கொண்டு பாரசீகம் சீனா எகிப்து அலெக்சாண்ட்ரியா உரோமாபுரி கிரேக்கம் போன்ற கடல் கடந்த நாடுகளுக்கு சென்று வாணிகம் செய்தனர்.
1800 ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ் வணிகன் தன் நாவாயில் ஒருமுறை அனுப்பிய பொருள்களின் இன்றைய மதிப்பு சுமார் 100 கோடி என கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தம் கூறுகிறது. இவ்வாணிகத்தை உறுதிப்படுத்தும் வகையில் எகிப்து அரேபியா தாய்லாந்து ரோம் கிரீஸ் நாடுகளில் பல இடங்களில் பண்டைய தமிழி எழுத்துக்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.

இரும்பிலிருந்து எஃகு செய்வதற்குத் தமிழரைத் தவிர அக்காலத்தில் வேறு யாருக்கும் தெரியாதென்று கிரேக்க , உரோமப் புலவர்கள் எழுதி இருக்கிறார்கள்.

மேனாட்டு வரலாற்றாசிரியர்கள் தங்கள் நூல்களில் தமிழரின் கடல் வாணிகம் பற்றி குறிப்பிடுவதோடு இன்னின்ன பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்ததையும் குறித்துள்ளார்கள்.

பிளைனி( Pliny) என்ற வரலாற்று அறிஞரின் கவலை:

உரோமபுரியைச் சார்ந்த பிளைனி என்னும் வரலாற்று அறிஞர் கி.பி.70 ஆம் ஆண்டில் உரோமபுரிச் செல்வம் கிழக்கு நாடுகளுக்கும் போனதைக் குறித்துக் கவலை தெரிவித்துள்ளார்.

நம் சங்ககாலப் புலவர்கள் பாடியதும் பிளைனியின் கூற்றையும் நோக்குங்கால் தமிழ்நாட்டுக்கும் உரோமபுரிக்கும் இடையில் இருந்த வாணிகத் தொடர்பு உள்ளங்கை நெல்லிக்கனி போல் புலனாகிறதன்றோ!

மேனாட்டவர்களின் மொழிகளில் பகர்ந்து கொண்ட தமிழ்ச்சொற்கள்:

தோகை — துகி– சிரியா
அகில் – அகல், கவி- கபிம், — எபிரேயம்(ஹீப்ரு)

அரிசி- அரிஜா, இஞ்சி- ஜிஞ்ஜர், இஞ்சிவேர்- ஜிஞ்ஜர்பார் — கிரேக்க மொழியில் வரும் தமிழ்ச் சொற்கள்.

யவனர்கள் மிளகை விரும்பி மிகுதியாக வாங்கி கொண்டு போன காரணத்தால் சமஸ்கிருத மொழியில் மிளகுக்கு “யவனப்பிரியா” என்று பெயரிட்டனர்.
நாவாய் – நேவி, கட்டுமரம் – காட்மரின் இவை ஆங்கிலத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள்.

தமிழர் உள்நாட்டு வாணிகமேயன்றி அன்று திரைகடலோடி வாணிகஞ் செய்தனர் என்பதை சங்ககால இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, மதுரைக் காஞ்சி தொல்காப்பியம் ஆகிய நூல்களில் சங்க காலப்புலவர்கள் சிறப்பாக பாடியிருக்கிறார்கள்.

” இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும்”

” நளியிரு முந்நீர் நாவாயோட்டி
வளிதொழிலாண்ட உரவோன் மருக” –

எனக் கரிகாற்சோழன் (கி.மு.120-90) முன்னோனொருவன் காற்றைத் துணையாகக் கொண்டு கடலிடைக் கலஞ் செலுத்தியதை வெண்ணிக்குயத்தியார் பாடினார். பருவகாற்றின் துணை கொண்டு கப்பலோட்டும் வகை கண்ட ஹிப்பலாசுக்கும் ( கி.பி.47) பன்னூற்றுக் கணக்கான ஆண்டுகட்கு முன்னரே தமிழர் அதனைக் கண்டு கடலிடைக் கலஞ்செலுத்திக் கடல் வாணிகம் செய்தது புலனாகிறது.

” பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருநாவாய்
மழை முற்றிய மலைபுரையத்
துரைமுற்றிய துளங்கிருக்கை
தென்கடற் குண்டகழிச்
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ”

” முந்நீர் விழவின் நெடியோன்”
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் “
என்ற புறநானூற்றுப் பாடலும் மதுரைக்காஞ்சிப் பாடலும் நமக்கு உணர்த்துவது பஃறுளியாற்றங் கரையிலிருந்த மதுரையிலிருந்து கடல்கொண்ட தென்னகத்தையாண்ட நெடியோன் என்னும் பாண்டிய மன்னன் சாலியூர் ( நெல்லின் ஊர்- சாலியூர்) என்ற பண்டைய சாவக நாட்டின் பெரிய மரக்கலங்கள் தங்கும் துறையினையும் ஆழமான கடலாகிய அகழியினையும் உடைய நெல்லின் ஊரை( நெல் — சாலி) கடல்வாணிகத்தின் பொருட்டே படையெடுத்துச் சென்று கைப்பற்றினான்.

இன்றுவரை அச்சாவக நாட்டு மன்னர்கள் முடிசூட்டு விழாவின்போது கடற்கரையோரப் பாறையில் தம் அடிகளைப் பொறித்து அதன்மீது கடல்அலை அலம்பும்படி செய்வதை வழிவழி வழக்கமாக கொண்டுள்ளனர்.

” சினமிகு தானை வானவன் குடகடற்
பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப்
பிறர் கலஞ் செல்கலா”

சேரர் நாவாய்களோட்டிய வழிகளில் மற்றவர் நாவாய்கள் செல்லாவாம் என்ற இச்சங்ககாலப் பாடல் சேரமன்னர்களின் கடல் வாணிகச் சிறப்பினை பறைசாற்றுகிறதன்றோ!

அகழாய்வு கூறும் உண்மைகள்:

பண்டைய சேரர்களின் துறைமுக நகரான முசிறியின் ஒரு பகுதியான தற்போது கேரளாவில் உள்ள பட்டணம் என்ற இடத்தில் கடந்த பத்தாண்டுகளாக நடத்தப்பட்ட அகழாய்வில் தொல்லியல் கல்வி நிறுவன இயக்குநர் பி.ஜெ.செரியன் கூறும் விடயங்கள் மிக முக்கியமானவை.சங்க காலத்தில் அதாவது கி.மு.1000 வாக்கிலேயே சீனா முதல் மேற்கே உரோமபுரி வரை வாணிபம் செய்தும் நல்ல வளர்ச்சியடைந்த நகரமாக முசிறி இருந்தது.

மேலும் முசிறி தென்சீனத்திலிருந்து ஐரோப்பாவின் ஜிப்ரால்டர் சலசந்தி வரை மத்தியதரைக்கடல் செங்கடல் இந்தியப்பெருங்கடல் ஆகியவற்றில் உள்ள 40 துறைமுக நகரங்களோடு 30 வேறுபட்ட பண்பாடுகளோடும் நேரடித் தொடர்பில் இருந்ததற்கான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன என்றும் மேலும் இவை வாசுகோடகமா இந்தியா வருவதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே நடந்தவை என்றும் செரியன் கூறினார்.

கிரேக்க இலத்தீன் இலக்கியங்களை நன்கு அறிந்த அமெரிக்க ஐரோப்பிய அறிஞர்கள் அன்று இந்த முசிறி நகரமானது இன்றைய நியூயார்க், இலண்டன் , சாங்காய் போன்ற புகழ்பெற்ற பெருந்துறைமுக நகரங்களுக்கு இணையாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.

பூம்புகார் கொற்கை போன்றவை முசிறியைவிடப் பெரிய துறைமுக நகரங்கள் . மேற்கு நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்த நாவாய்களைவிட மிகப்பெரிய அளவிலும் எண்ணிக்கையிலுமான நாவாய்கள் கிழக்கு நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து வாணிகஞ் செய்ய சென்று வந்தன என்று கி.பி.முதல் நூற்றாண்டில் இந்தியாவில் தமிழகத்திலிருந்து இமயம் வரை பயணம் செய்த பெரிப்ளசு என்ற எகிப்திய பயணி தன் பயணநூலில் தெரிவிக்கிறார்.

மேற்கே முசிறி இருந்தது என்றால் கிழக்கே அதைவிடப் பெரியதான பூம்புகார் இருந்துள்ளது. இவ்விரண்டுக்கும் இடையே கொற்கை இருந்துள்ளது.ஆகவே அன்றைய தமிழகம் உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக உலகளாவிய அளவிலான வணிகமையமாக இயங்கி வந்துள்ளது என்பது கீழடி, ஆதிச்சநல்லூர், பட்டணம் போன்ற இடங்களில் நடந்த அகழாய்வில் கிடைத்த இலட்சக்கணக்கான பொருட்கள் தெரிவிக்கும் பேருண்மை அன்றோ!

4000 வருடங்களுக்கு முன்பே உலகிலேயே முதன் முதலாக கடல் வாணிகத்தையும் கடற்கரைத் துறைமுக பட்டினங்களை பற்றியும் கடல்சார் நாகரீகத்தை பற்றி எழுதப்பட்ட நூல் சிலப்பதிகாரம்.

உலகில் முதன்முதலாக பல மொழிகள் பேசவும் எழுதவும் தெரிந்த பண்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததைப் பற்றி எழுதப்பட்ட நூல் பட்டினப்பாலை.

கடல் வாணிகத்தில் பழந்தமிழகம் செல்வச்செழிப்போடு சாதாரண மக்கள் முதல் உயர் வேளிர் வரை பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதை கீழடி, பட்டணம் போன்ற இடங்களில் நடந்த அகழாய்வில் கிடைத்த மண் பானை ஓடுகள் தெரிவிக்கின்றன.

கீழ்நாட்டினருடன் மேனாட்டினரும்
மேனாட்டினருடன் கீழ்நாட்டினரும் செய்து வந்த வாணிகத்தை பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழர்கள் நடுநின்று வாணிபம் செய்தனர்.

உலகம் முழுவதும் வாணிபம் செய்த தமிழர்களின் திறமையையும், புகழையும் தொகுத்து எழுதிய எனது படைப்பை சமர்பிப்பதில் பெருமையடைகிறேன்.
நன்றி வணக்கம்.

ஆக்கம்
கோமகள் குமுதா

MBBS படிப்பும் பயிற்சியும் சோழர்கள் காலத்தில் எப்படி இருந்தது? படித்துப் பாருங்கள் நட்பூக்களே

சோழர்கள் காலத்து தமிழும் மருத்துவமும்

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமணத்துறவிகள் தங்கள் பள்ளிகளில் அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் ஆகியவற்றைச் செய்ததாக மதுரை மாவட்டத்தின் மலையில் உள்ள பிராமி கல்வெட்டுகளால் அறிகிறோம். இக்கொடைகள் முறையே உணவு, அடைக்கலம், மருத்துவம், கல்விக் கொடைகள் எனப் பொருள்படும். மிகக் குறைந்த அளவிலேயே தமிழ்நாட்டில் மருத்துவம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

மருத்துவ மூலிகைகளைப் பயிரிடுவதற்கு செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் போன்ற வரிகள் விதிக்கப்பட்டதையும், மருத்துவர்களுக்கு ‘மருத்துவப்பேறு’ என்ற நிலமானியம் கொடுக்கப்பட்டதையும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளதை அறிய முடிகிறது.

பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டில், நாமக்கல் குன்றுச் சரிவில் வெட்டப்பட்டிருக்கும் இம்மன்னரின் அரசாணைக் கல்வெட்டு ஒன்று நாமக்கல் பகுதியில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் பணியாற்றிக் கொண்டிருந்த சிறப்பு மருத்துவர்களுள் ஒருவரான நாங்கூர் நாட்டைச் சேர்ந்த ‘சுவர்ணன் பாராசிரயன் ஆதித்த தேவன் திருவம்பலப் பெருமாளான வைத்ய புரந்தரன்’ என்பவருக்கு வாழ்வூதியமாக மன்னர் நிலம் அளித்ததைப் பதிவுசெய்துள்ளது. இக்கல்வெட்டில் மருத்துவர் புரந்தரர் ‘அங்க வைத்தியர்’ எனச் சுட்டப்படுகிறார்

தமிழகத்தில் சோழர் காலத்திலிருந்த மருத்துவச் செய்திகளைப் பற்றியும் ஒரு சில கல்வெட்டுக்களே அறியத்தருகின்றன. ஆதுலர்சாலை மற்றும் ஆரோக்கியசாலை என மருத்துவமனைகள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. திருமுக்கூடல், திருப்புகலூர், திருவாவடுதுறை, கீர்களூர், கூகூர் மற்றும் கடத்தூர் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் சோழர்காலம் மருத்துவம் குறித்து சில செய்திகளைத் தெரிவிக்கின்றன. இவற்றில் சிறப்புமிக்கது எனச் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் கோயில் கல்வெட்டைக் குறிப்பிடலாம்.

முதலாம் ராஜேந்திரனின் மகன் வீரராஜேந்திரனின் 5 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று இவனது காலத்தில் திருமுக்கூடல் கோயிலில் வேதக் கல்லூரியும், மருத்துவமனையும் இயங்கியதைப் பதிவு செய்துள்ளது.

இச்சிறப்புமிக்க கல்வெட்டில் ஆதுலர் சாலை என்று அறியப்பட்ட மருத்துவச்சாலை பற்றிய குறிப்புகள் உள்ளன.

இக்கோயிலில் 15 படுக்கைகள் கொண்ட “வீரசோழன்” என்ற மருத்துவமனை இயங்கி வந்துள்ளது. ‘வியாதிபட்டுக் கிடப்பார்’ என நோயாளிகள் குறிப்பிடப்பட்டனர்.

நோயாளி ஒருவருக்கு ஒருவேளை உணவுக்கு 1 நாழி அரிசி கொடுக்கப்பட்டது. மருத்துவச்சாலை விளக்கெரிக்க இரண்டேகால் காசும், விளக்கொன்றுக்கு ஆழாக்கு நெய் வழங்கப்பட்டதும் தெரிகிறது.

நாடி பார்த்து மருத்துவம் செய்யும் பொது மருத்துவர் ஒருவரும், அறுவைச்சிகிச்சை செய்யும் மருத்துவர் ஒருவரும் இந்த ஆதுலர் சாலையில் பணியாற்றியுள்ளனர். மருத்துவர் ஆதுலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். அறுவைச்சிகிச்சை மருத்துவர் “சல்லியக்கிரியை பண்ணுவான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார். நாடி மருத்துவரின் பெயர் ‘ஆலம்பாக்கத்து சவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாம பட்டர்’ என்பதாகும். இவருக்கு நாளொன்றுக்கு ஊதியம் 3 குறுணி நெல்லும் 4 காசுகளும். அறுவைச்சிகிச்சை மருத்துவரின் ஊதியம் நாளொன்றுக்கு 1 குறுணி நெல்லும் 2 காசுகளும் ஆகும்.

மருத்துவர்களைத் தவிர்த்து அவர்களுக்கு உதவியாளர்களாக மருந்து தயாரிக்கத் தேவையான மூலிகைச்செடிகளைக் கொண்டு வருவதற்காகவும், அவற்றைக் கொண்டு மருந்து தயாரிப்பதற்காகவும் ‘மருந்தாய்ந்து கொடுப்பார்’ என்ற மருந்து கொண்டுவருபவர் இருவர் பணியாற்றினார். இவர்கள் விறகும் சேகரித்து வந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இவர்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 1 குறுணி நெல்லும் 1 காசும் ஊதியம் பெற்றனர். மேலும், கத்தியைத் திறம்பட உபயோகிக்கும் சவரத்தொழில் செய்யும் நாவிதர் ஒருவரும் சவரத்தொழிலுடன் அறுவைச் சிகிச்சையும் செய்துள்ளார்.
இவரும் மருத்துவர் என்றே அழைக்கப்பட்டார்.

மகப்பேறு மருத்துவத்தில் உதவிய நாவிதர் மனைவி ‘மருத்துவச்சி’ என அழைக்கப்பட்டார். நாவிதருக்கு ஊதியமாக நாளொன்றுக்கு 4 நாழி நெல் அளக்கப்பட்டது.

மருத்துவச்சாலை சிறப்பாக இயங்குவதற்கு மேலும் சில பணியாட்களும் இருந்தனர். ‘நீர் கொண்டு வருபவர்’ ஒருவர் மருத்துவச் சாலைக்குத் தேவையான நீர் கொண்டுவரும் பணியிலிருந்தார். ஆண்டொன்றுக்கு 15 கலம் நெல் அவருக்கு ஊதியமாகக் கொடுக்கப்பட்டது. ‘மருந்து ஆடும் பெண்கள்’ என அழைக்கப்பட்ட மருத்துவப்பணி மகளிர் இருவரும் பணியாற்றினார்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 4 நாழி நெல்லும் அரைக்காசும் ஊதியமாகக் கொடுக்கப் பட்டது.

மருத்துவ மனையில் பின்வரும் 17 மருந்துகளும், தைலங்களும், கல்பங்களும் எந்த அளவில் இருப்பில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இந்த மருந்துகளைப் பாதுகாக்க 40 காசுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதைக் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.

1) பிராமியம் கடும்பூரி (1 எண்ணிக்கை);
2) வாசா ஹரீதகி (2 படி); 3) தஸ-மூலா-ஹரீதகி (1 படி);
4) பல்லாதக-ஹரீதகி (1 படி);
5) கண்டீரம் (1 படி);
6) பலாகேரண்ட தைலம் (1 தூணி);
7) லசுநாக ஏரண்ட தைலம் (1 தூணி); 8.பஞ்சக தைலம் (1 தூணி);
9) உத்தம கர்ணாதி தைலம் (1 தூணி);
10) பில்வாதி கிருதம் (1பதக்கு);
11) மண்டூர வடகம் (2000 எண்ணிக்கை);
12) திராவத்தி (1 நாழி); 13) விமலை (2000 எண்ணிக்கை);
14) சுனேற்றி (2000 எண்ணிக்கை);
15) தம்ராதி (2000 எண்ணிக்கை);
16) வஜ்ரகல்பம் (1 தூணி 1 பதக்கு);
17) கல்யாண லவணம் (1 தூணி 1 பதக்கு).

சோழர் காலத்தில் இத்தகைய மருத்துவப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு இந்த ஏற்பாடுகள் மதுராந்தக சதுர்வேதிமங்கல மகாசபையின் மேற்பார்வையில் நிர்வகிக்கப்பட்டதையும் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. இப்பெரிய கல்வெட்டுச் செய்தி தவிர்த்து மேலும் சில சோழர் கால கல்வெட்டுகள் அவர்கள் காலத்து மருத்துவப் பணிகளையும் அவற்றுக்கான கொடைகளையும் அறியத் தருகின்றன.

விக்கிரமசோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு திருவாவடுதுறையில் ஒரு மருத்துவக் கல்லூரி இருந்ததைக் குறிப்பிடுகிறது. இக்கல்லூரியில் 364 மருத்துவ மாணவர்களுக்குக் கல்வியுடன் உணவும் அளிக்கப்பட்டிருக்கிறது. இங்கும் பொது மருத்துவர், அறுவை மருத்துவர் மற்றும் மருந்தாடு பெண்டுகள் குழுவினர் மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்தனர் சோழர் காலத்து ஆதுலர் சாலைகள் கோயில்களில் இயங்கியதையும் இதன் மூலம் அறிய முடிகிறது. குன்றத்தூரில் சரவணன், அரையன், சந்திரசேகரன், கோதண்டராம அசுவத்தாமபட்டர், மங்களாதி ராஜன், சீராளன் என்ற மருத்துவர்களின் பெயர்களும் கிடைக்கின்றன. மருத்துவர்களுக்கு சைவசிந்தாமணி, சிவகீர்த்தி, கடகமெடுத்த கூத்தபிரான் என்ற சிறப்புப் பெயர்கள் இருந்தது என்ற குறிப்பும், பல்லவர்கால மருத்துவமுறைகள் சோழர்காலத்திலும் தொடர்ந்தது என்ற தகவலும் கிடைக்கின்றன.

மகப்பேறு மருத்துவம் ‘சூல் மருத்துவம்’ என அழைக்கப்பட்டுள்ளது. திருத்துறைப் பூண்டியில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் கருவறையின் வடபுறத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று இரண்டாம் ராஜேந்திர சோழன் காலத்தில் களப்பால் சபையார் சூல்மருத்துவக் காணிக்கையாக நிலக்கொடை கொடுத்ததைப் பதிவு செய்கிறது. கி.பி. 10, 11 காலத்திய கல்வெட்டு கீரக்கடூர் மன்னனின் ஆட்சிக்காலத்தில் பரசுராமர் என்பவர் சிறந்த சூல் வைத்தியர் என்றும், சிசு மருத்துவத்திற்காக 250 கழஞ்சு பொன் சிசுவைத்தியக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. தகட்டூர் கிழவன் சிசு மருத்துவசாலைக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டதாக கி.பி. 1221 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.

திருவரங்கத்தின் அரங்கநாதர் கோயிலின் 1257-ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றும் ஆதுலர் சாலை பற்றிய குறிப்பைத் தருகிறது. தனது குருவாகிய ஸ்ரீ ராமானுஜரின் அறிவுரைப்படி கருட வாகன பட்டர் என்பவர் நான்காம் பிரகாரத்தில் ஒரு ஆதுலர் சாலையை அமைத்துள்ளார்.
என்கிறது அந்தக் கல்வெட்டு. நான்காம் பிரகாரத்திலிருந்த திருநடை மாளிகையின் இடைக் கூடத்தில் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு, அது ஒரு நீண்ட அறையாக மாற்றப்பட்டு அதில் ஆரோக்கிய சாலை நடத்தும் பொறுப்பு கருட வாகனப் பட்டரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. ஹொய்சாள மன்னர் வீர இராமநாதரின் முதன்மைத் தளபதி சிங்கதண்ட நாயக்கர் இவ்வாறு ஆதுலர் சாலை அமைக்க உதவியதாகத் தெரியவருகிறது.
“முன்னாள் பிரதாப சக்ரவர்த்தி காலம் முதல் இவருடைய பூர்வாள் கருட வாகன பட்டர் நடத்தி வந்த “ஆதுலர் சாலை.”
என்று கி.பி. 1493-ஆம் ஆண்டைச் சேர்ந்த மற்றொரு திருவரங்கக் கல்வெட்டு குறிப்பிடுவதால், இந்த ஆதுலர் சாலை பல ஆண்டுகள் இயங்கியதையும், பிற்காலத்தில் அந்த ஆதுலர் சாலை மீண்டும் மூன்றாம் கருட வாகன பட்டரால் புனரமைக்கப் பட்டதையும் அறியலாம்.

தஞ்சையின் தேவராயன் பேட்டை கோயில் கல்வெட்டு ‘சுந்தரசோழ விண்ணகர ஆதுலர் சாலை’ ஒன்று தஞ்சையில் இருந்ததைக் குறிப்பிடுகிறது. இந்த ஆதுலர் சாலைக்கு இளவரசி குந்தவை ’9 மா’ நிலம் நன்கொடை அளித்துள்ளதும், பின்னர் முதலாம் ராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டு (கி.பி. 1015) காலத்துக் குறிப்பின்படி, இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டு மருத்துவ சேவைக்கு நிதி பெறப்பட்டதும், மேலதிக நிதித் தேவைக்கு களகரச்சேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஒருவர் தனது நிலத்தினை விற்று மருத்துவமனைப் பராமரிப்புச் செலவை ஈடுகட்டியதையும் (கி.பி. 1019) கல்வெட்டுக் குறிப்புகள் அறியத் தருகின்றன

மருத்துவர்களுக்குக் கொடையாக ‘மருத்துவக்காணி’ என்ற பெயரில் நிலக்கொடையும் அளிக்கப்பட்டுள்ளது. முதலாம் ராஜேந்திரனின் ஆட்சிக்கால கல்வெட்டு ஒன்று திருவிசலூர் என்ற கும்பகோணத்தை அடுத்துள்ள ஊரின் சிவயோகநாதர் ஆலயத்தில் காணப்படுகின்றது. அறுவைசிகிச்சை மருத்துவர் ஒருவரின் மருத்துவப்பணிக்காக நிலமும், வீடும் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது . முதலாம் ராஜேந்திரனின் சகோதரி இளவரசி குந்தவை வேம்பத்தூரில் வாழ்ந்த அறுவைச் சிகிச்சை மருத்துவர் பிரயோகத்தரையன் என்பாருக்கு அவ்வூரில் உள்ள ஒரு வீட்டையும், ஒரு வேலி ’4 மா’ நிலத்தையும் மருத்துவப்பணிக்கான கொடையாக வழங்கியுள்ளார்.

அரச குடும்பத்தினர் மட்டுமன்றி அரசர் உருவாக்கிய ஆதுலர் சாலைகளின் பராமரிப்பிற்குப் பொதுமக்களும் ஊர்ச்சபையினரும் நன்கொடைகள் வழங்கியுள்ளனர் என்பதையும் கல்வெட்டுப் பதிவுகள் மூலம் அறிய முடிகிறது. வீர ராஜ ராஜன் நிறுவிய திருப்புகலூர் மருத்துவமனை குறித்து விக்கிரம சோழர் காலத்திய கல்வெட்டு ஒன்று குறிப்பு தருகிறது. முடிகொண்ட சோழர் பேராற்றின் வடகரையில் நிறுவப்பட்டிருந்த திருப்புகலூர் மருத்துவமனைக்கு, சத்திரிய நாத சதுர்வேதி மங்கலத்து ஊர்ச்சபையினர் வரி விலக்களிக்கப்பட்ட நிலம் ஒன்றைக் கொடையாக வழங்கியுள்ளனர் என்பதை திருப்புகலூர் கல்வெட்டு கூறுகிறது.

மருத்துவ மனையிலிருந்து வெளிவரும் நோயாளிகள் இலவசமாகத் தங்கி ஓய்வெடுக்கவும், சத்துணவு உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை இரண்டாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறியலாம் . திருத்தொண்டத் தொகையான் என்பவர் திருமடத்திற்கு நன்கொடையாக அளித்த நிலத்தின் வருவாயின் ஒரு பகுதியின் மூலம் அங்கு அந்த மடத்தில் தங்கிச் செல்லும் நோயாளிகளுக்கும் பயணிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்ட செய்தியை மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246-1279) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுச் செய்தி மூலம் அறிய முடிகிறது.

திருப்புவனை என்ற ஊரில் மன்னர் பராந்தகரின் மனைவியின் பெயரில், ‘திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்று அழைக்கப் பட்டிருக்கிறது. இக்கோயில் சிற்பங்களில் ஒன்று யானைக்கும் மருத்துவம் பார்த்த காட்சியைக் காட்டுகிறது.

சோழர் காலத்துக் கோயில்கள் மருத்துவ மனைகளாகவும் இயங்கியது தெரிகிறது. நோயாளிகளிடம் கட்டணம் பெறாமல் மருத்துவம் பார்க்கப்பட்டதையும் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.

காதல் வானவில்♥️♥️

நிற்கிறேன் நடக்கிறேன்
காண்கிறேன் புரியலையே 🍃
ஒன்றும் புரியலையே குழப்புதே தவிக்குதே இதுதான் காதலா!!! புரியலையே🍃

உன்னைக் காண்கையிலே நன்றாக இருக்குதே☘️
புரியாமல் பாடுகிறேன்
ரோஜாப்பூ 🌹கூட ஒன்று வாங்க ஆசைதான்
எல்லாமே புதுசு இந்த தவிப்பு புதுசு உனக்காக என் இதயம் ❤️ஏனோ துடிக்குது💕
உலகமே அழகான நந்தவனமாச்சு🌼🌺🌷🏵️💮🌸🥀🌹🌻
உனக்கு புரியுதா என் தவிப்பு
தெரிந்தால் எனக்காக அரை நொடி கண்ணே காத்திருப்பாயா?👀

என்றென்றும் காதலாக
என்றென்றும் நான் புன்னகைக்க
பேரழகான ஒளிபொருந்திய உன் புன்னகையால் எனை நிரப்பு👄
உன்னை என்றென்றும் காதலால் நிரப்ப என் கைகளைப் பற்றிக்கொள்💞
எனக்காக என்னுள் இருக்கும் உனக்காக
நானே இன்னும் முழுமையாக உணராத என் காதலுக்காக
காத்திருப்பாயா?🧚
காதல் குழப்பத்தில் மயக்கத்தில் இருக்கும் என்னைக் காப்பாற்றுவாயா?🤸

கோமகள் குமுதா

காதலிஸம்♥️♥️♥️♥️♥️

மேஷத்தில் தொடங்கி மீனத்தில் முடிந்தால் ஜோதிஷம்
மீன் விழிகளில் தொடங்கி மனம் மயங்கும் மதியில்
முடிந்தால் அது காதலிஸம்.