சாலச்சிறந்த பொய்

உன்னை மட்டும் தான் பிடிக்கும் என்று கண்ணைச் சிமிட்டி சொல்லும் அந்தப் பொய் மட்டுமே நீ சொல்லும் பொய்களில் எனக்கு பிடித்த சாலச்சிறந்த பொய். என்பதை நீ அறிவாயா என் அன்பே♥️♥️

காதல் கொண்டேன் ♥️ காதல் கொண்டேன் ♥️ நாவலுக்கு கிடைத்த ஆதரவு.🙏🙏🙏

காதல் கொண்டேன் ♥️
காதல் கொண்டேன் ♥️
2021 நவம்பர் மாதம் அமெசான் கிண்டிலில் வெளியிடப்பட்ட எனது நாவல் அந்த மாத இறுதிக்குள் எனக்கு நூற்றுக்கணக்கான வாசகர்களையும் வரவாக 500$ கனெடியன் டாலர்களையும் பெற்றுத் தந்திருக்கிறது. வாசகர்களுக்கும் நட்பூக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி .🙏🙏🙏🙏

பதிவரின் ஐஸ் ஸ்கேட்டிங் சாகசம்.

பதிவர் பலமுறை சாலையில் பனிக்குவியலில் வழுக்கி கீழே விழுந்ததால் கீழே விழுந்தாலும் அடிபடாமல் விழுவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள வீட்டின் அருகிலிருக்கும் ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி கூடத்திற்கு சென்றார். காலில் ஸ்கேட்டிங் காலணிகள், பனித்தரையில் நடக்கும் போது குளிரடிக்காமல் இருக்க பிரத்யேக உடைகள், கையுறைகள், அணிந்து பனித்தளத்தில் பந்தாவாக களமிறங்கிய பதிவருடன் உடன் சறுக்கிய மற்ற பதிவர்களுக்கு வயது மூன்றிலிருந்து பத்து வரை.

மான அவமானங்களைப் பாராமல் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போல பதிவர் முகத்தில் ஒரு மருவைத்துக் கொண்டால் ஹீரோவையே அடையாளம் தெரியாத வராக மாற்றி விடும் பல தமிழ் படங்களில் காட்டப்படும் சிறந்த மாறுவேட விஷயத்துக்கு இணையாக தலையில் ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்து மாஸ்க்கும் அணிந்து யாருக்கும் தன்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை என்று கண்ணை மூடிக் கொண்டதால் பூலோகம் இருண்டதாக எண்ணிய பூனையைப் போல ( சாரி யானையைப் போல ) தன்னை மற்றவர்கள் அடையாளம் காண்பது கடினம் என்று எண்ணி பனித்தரையில் தன் வலது காலை எடுத்து வைத்தார். நல்ல சகுனமாக களத்தில் இறங்கியதும் மண்ணைத் தொட்டு கும்பிட வேண்டும் என்ற ஆவலில் அது பனித்தரை என்பதை மறந்த பதிவர் பெருஞ் சத்தத்துடன் தொபுக்கடீர் என்று சம்மர் சால்ட் அடித்து பனித்தரைக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கிடந்தார். களத்தில் விளையாடிய கிட்டதட்ட பத்து வீரர்களுக்கும் மேல் சேர்ந்து (10 வீரர்கள் மொத்தமாக 60 கிலோ எடை) எவ்வளவோ முயன்றும் 70 கிலோ பதிவரை தூக்க முயன்று தோற்று ஓடினர். ஆனால் பதிவரின் பத்து வயது பயிற்சியாளர் மட்டும் அடி சறுக்கிய பதிவரை தூக்கி நிறுத்தி விட பெரும்பாடு பட்டார்.

தன் முயற்சி விழலுக்கு இறைத்த நீரானதால் பதிவருக்கு எப்படி பயிற்சி அளிப்பது என்று தீவிரமாக சிந்தித்து டென்னிஸ் விளையாட பந்து பொறுக்கிப் போடுபவர்களைப் போல் சக வீரர்கள் விளையாடி பனித்தளத்தின் ஓரத்தில் விழுந்த பந்துகளை பதிவரைப் பொறுக்கச் சொல்லி ஆணையிட்டார். நாலாபுறமும் ஓடி வந்த பந்துகளை பார்த்த பதிவர் உட்கார்ந்து, தவழ்ந்து பொறுக்குவது சிரமம் என்று சிந்தித்து பனித்தரையில் நீச்சலடிக்க முயன்று அங்கப்பிரதட்சணம் செய்து புதுமையான முறையில் பனிச்சறுக்கு விளையாட்டை விளையாடினார் .
பதிவர் பனித்தரையில் வீரமாக நீச்சலடித்த நாள் இன்று.