இது தான் காதலா

என் அருகில் நீ இருந்தால்
வெட்கித்து பணிந்திடும் என் விழிகள்
உன்னைக் காணாத போது
ஏக்கம் கொள்வது ஏனடா..

என் உதடுகள் ஆயிரம் கதை பேச நினைத்தாலும் உன் முகம் கண்டால் வார்த்தைகள் என் தொண்டைக்குள் சிக்கித் தவிக்குது ஏன் சொல்லடா..

உனக்காய் காத்திருக்கும் நிமிடங்கள்
சுகமாய் எனைத் தழுவிடும் தென்றலும்
அனல் காற்றாய் மாறி கொல்லுதே ஏனடா…

உனைக் காணும் வேளை இதயம் இரட்டிப்பாய் துடித்து சுவாசம் கூட வர மறுக்குதே ஏனடா …

என் இதயத்தை வாள்கொண்டு அறுக்கும் இதன் பெயர் என்னடா..

வறண்ட நெஞ்சத்தில்
வான்மழையாய் விழுந்தாயடா.

இருண்ட இதயத்தில்
எழில்மதியாய் நுழைந்தாயடா

கருவண்டு விழியாலே
கணந்தோறும் வதைத்தாயடா

கற்கண்டுச் சிரிப்பாலே
கணையொன்றைத் தொடுத்தாயடா

கனவை வருடிக்
கற்பனையை திருடி
ஒற்றை முத்தத்தால்
உலகையே கொடுத்தாயடா

மங்கை என்னைக்கண்டு
மதியிழக்க வைத்தாயடா

உயிர் ஓவியமே
ஒப்பில்லா காவியமே…
உன்னழகை பாடிட
என்தமிழில் சொல்லேதடா?

என் பெண்மையின் இலக்கணமே
உனக்கென ஓர் கவிதையை
எப்படி படைப்பேனடா

உறவாடும் இதயமே உன்னருகில் நானிருந்தால் இந்த உயிர் கூடத் தேவையில்லை எனக்கு வேண்டாமடா

நான் என்பதெல்லாம் நீயாக மாறியதே !!! இதுதான் காதலாடா…

கோமகள் குமுதா

Leave a comment