சமீபத்தில் ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்தேன். இனிமேல் யார் வேண்டுமானாலும் யாருடைய சாதிப் பெயரையும் சொல்லி அழைப்பதோ திட்டுவதோ செய்யலாம். அது தவறில்லை என்பது நான் அறிந்து கொண்ட தீர்ப்பின் சாராம்சம்.
இப்பொழுது கதைக்கு வருவோம். என்னுடைய அருண்மொழி சந்திரமல்லி என்ற வரலாற்று நாவலில் முன் குடுமி அந்தணர் என்று ஒரு பிரிவினரை குறிப்பிட்டு எழுதி இருந்தேன். அந்தக் கதையை எடிட் செய்தவர் ஒரு பிராமணர். அவர் இந்த குறிப்பிட்ட வார்த்தையை நீங்கள் மாற்றுங்கள் அல்லது நீக்குங்கள். புத்தகத்தை வெளியிட்டால் பதிப்பகத்தார் மீது நிறைய வழக்குகள் வரும். உங்கள் மீதும் தனிப்பட்ட வழக்குகளும் சண்டையும் வரும் அதனால் நான் இதை அனுமதிக்க முடியாது என்று என்னோடு வாதிட்டார்.
நான் எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் மற்றும் பாலகுமாரனின் உடையார் நாவலில் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே பிராமணர்கள் தானே அந்த சொல் தவறு என்று அவர்கள் எண்ணி இருந்தால் எப்படி பயன்படுத்தி இருப்பார்கள் என்று மேற்கோள் காட்டி வாதிட்டேன். எடிட்டர் அவர்கள் இருவரும் புகழ் பெற்ற எழுத்தாளர்கள். அவர்கள் எழுதலாம். ஆனால் நீங்கள் எழுதக்கூடாது என்று வாதிட்டார்.
நான் முன்குடுமி அந்தணர் என்ற அந்த சொல்லை மாற்றவோ நீக்கவோ மாட்டேன் என்று உறுதியாக கூறினேன். இறுதியில் புத்தக வெளியீட்டாளர் அது தவறில்லை என்று முடிவு செய்து நாவல் அச்சிடப்பட்டது. ஆனால் அந்த நாவலை பதிப்பகத்தார் வெளியிடாமல் இருக்க எல்லா நல்ல செயல்களையும் செய்து புத்தகத்தை அச்சடித்து எனக்கும் 10 எண்ணிக்கையை அனுப்பி நீங்களே வெளியீடு செய்து கொள்ளுங்கள் என்று எடிட்டர் என்னிடம் கூறினார்.
இத்தனைக்கு காரணமான அந்த சாதியச் சொல்லைக் கூறி அழைக்கவோ திட்டவோ செய்தால் அது தவறில்லை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பை அறிந்து எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. ஏனென்றால் எனக்கு இத்தனை நன்மை செய்த அந்த எடிட்டரும் இன்று உயிரோடில்லை என் நாவல் அருண்மொழி சந்திரமல்லியை நானே வெளியிட்டுஅருமையாக விற்பனையும் ஆகிறது.
