ஆங்கிலத்தில் tongue memory என்று சொல்லுவாங்க. மூளைக்கு நினைவாற்றல் குறைவாக இருக்கலாம். ஆனால் பாலூட்டிகள் அனைத்து உயிரினங்களுக்கும் இந்த நாக்கின் நினைவாற்றல் என்னை வியக்க வைத்தது.
புரியற மாதிரி பேசலாமா? என் அப்பாவுடைய அம்மா எனக்கு ஆறு வயதாக இருக்கும் போதே இயற்கை அடைந்து விட்டார்கள். நான் கொஞ்சம் வளர்ந்து 12 வயதாக இருக்கும் போதே நிறைய விழுப்புண்களோடு விறகு அடுப்பில் சமைக்க பழகிவிட்டேன். என் பெற்றோர் சண்டையிட்டால் என் அம்மா கோபத்துடன் என்னையும் என் தம்பியையும் அழைத்துக் கொண்டு என் அம்மாவை பெற்ற பாட்டி வீட்டிற்கு சென்று விடுவோம். நான் பள்ளிக்கு என் பாட்டி வீட்டில் இருந்து செல்வேன்.
ஐந்து நாட்கள் ஆனாலும் என் அப்பா கடையிலும் மில் கேண்டினுலும் சாப்பிட்டு வேலைக்கு செல்வார். வெள்ளிக்கிழமை காலை நான் பள்ளிக்கு கிளம்பும் போது என் அம்மா மெதுவாக இன்று அப்பாவுக்கு பகல் ஷிப்ட் மாலையில் வீட்டிலிருப்பார். அங்கு போய் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறாயா என்று கேட்பார். இது வழக்கமாக நடப்பது என்பதாலும் எனக்கு அப்பா மீது அம்மா மேல் இருக்கும் அன்பை விட கொஞ்சம் அதிகம் என்பதால் அப்பாவைப் பார்க்க மகிழ்ச்சியுடன் சரி என்று ஒப்புக்கொள்வேன்.
பள்ளி முடிந்ததும் மாலையில் அப்பாவை பார்க்க சென்றால் அவர் எனக்காகவே காத்திருப்பது போல் வா வா என்ன சனி ஞாயிறு விடுமுறை இங்கு வந்து சாப்பிடக் கூட ஒன்றுமில்லை. என் அப்பாவுக்கு சமைக்கத் தெரியாது. ஆனால் நான் பரவாயில்லை அப்பா. எனக்கு சம்பா ரவை உப்புமா செய்யத் தெரியும். காபி கூட போடுவேன். நான் சமைச்சு தரேன் நாம ரெண்டு பேரும் சாப்பிடலாம்ப்பா என்பேன். சமைக்க என்ன பொருட்கள் தேவை என்று கேட்டுக் கொண்டு மளிகை கடையில் வாங்கி வருவார். மேலும் விறகு அடுப்பு பற்ற வைப்பது ஒரு கலை. சிறிய சிலாக்குகளாக விறகை பிய்த்து ஒரு துணியை கொஞ்சம் எண்ணையில் முக்கி அடுப்பில் பெரிய விறகுகள் மேல் வைத்து உடைத்த சிலாக்குகளை அதன் மேல் அணையாமல் மூடி நன்றாக எரியும் வரை கவனமாக செய்தால் பெரிய விறகுகள் கொஞ்சம் கொஞ்சமாக பற்றிக் கொள்ளும். என் அப்பா பக்கத்தில் அமர்ந்து சிலாக்குளை பிய்த்து கையை சுட்டுக் கொள்ளாதே. அடுப்பின் அருகில் உடைகள் படும்படி உட்காராதே என்று பதட்டமாக கூறியபடி என்னைக் கண்காணிப்பார். நான் உப்புமா செய்து வடச்சட்டியை இறக்கும் போது மிகவும் பயப்படுவேன். எப்படியும் கையில் தீக்காயம் பட்டுவிடும்.
ஆனால் அதையெல்லாம் அப்பாவிடம் மறைத்து அவருக்கு தட்டில் சாப்பிட எடுத்து வைத்து காபியையும் டம்ளரில் ஊற்றி அவர் முன்னால் கொண்டு வைத்து விட்டு ஏதோ சாதித்தவள் போல் பெருமையாக மனதில் எண்ணியபடி சாப்பிடும் போது என் அப்பாவின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருப்பேன். அவர் வேகவேகமாக சாப்பிட்டு காப்பியையும் குடித்து விட்டு ராஜா நீ சாப்பிடு ரொம்ப நேரமாச்சு போடா என்பார். அப்பா நெகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக இருக்கும் போது என்னை ராஜா என்று தான் அழைப்பார்
முதன் முதலாக இது போல் நான் சமைத்த போது எனக்கு வயது ஏழு. அப்பொழுது கையில் பட்ட தீக்காயத்தின் வடு இன்னும் இருக்கிறது. வளரவளர இப்படி சண்டையின் போது என் அப்பாவிற்கு தேங்காய் சட்னி, உப்புமா, பச்சைப் பயிறு கடைந்து ரசம் சோறு என்று எனக்குத் தெரிந்ததெல்லாம் சமைத்துக் கொடுப்பேன். என் அப்பா சாப்பிட்டதும் நெகிழ்ச்சியாக எங்கம்மா பச்சைப் பயிர் கடைஞ்ச, தேங்கா சட்னி, தோசை உப்புமா பண்ணினா எம்புள்ளை பண்ற இதே சுவையில் தான் இருக்கும் என்று என்னைப் புகழ்ந்து என் அம்மாவிடம் சண்டை இல்லாமல் சாதாரணமாக இருக்கும் போது பேசுவார்.
நானும் என் அப்பாவும் சேர்ந்து ஜேம்ஸ்பாண்ட் படங்கள் ஒன்று விடாமல் வீட்டிலிருந்து வெகு தூரம் உள்ள சென்ட்ரல் தியேட்டருக்கு மிதிவண்டியில் அழைத்துக் கொண்டு செல்வார். படம் முடிந்ததும் தியேட்டரின் எதிரே ஆனந்த பவன் (என்று நினைவு) ஹோட்டலில் எனக்கு பிடித்த மசால் ரோஸ்ட் வாங்கித் தருவார். அந்த நாட்களின் நினைவுகள் எனக்கு விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.
இன்றும் உப்புமா பச்சைப் பயிறு தேங்காய் சட்னி சமைக்கிறேன். குழந்தைகள் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த சுவை என் பாட்டி சமையலோடு ஒப்பிட்டு ரசித்து ருசித்து சாப்பிட்ட என் அப்பா காலமாகி 19 வருடங்கள் ஓடிவிட்டது. இன்று என் அம்மாவைப் பெற்ற பாட்டியைப் போல் அசைவ உணவுகளையும் பத்து வயது வரை சாப்பிட்டு பின் ஒவ்வாமையால் உண்ணமுடியாமல் போனாலும் என் நாக்கின் நினைவுகளோடு எண்ணிப் பார்த்து குடல் குழம்பு, ரத்தப் பொரியல் என் பாட்டி எப்படி சமைப்பார்கள் என்று சிந்தித்து என் குழந்தைகளுக்கு சமைத்து தருகிறேன். நாக்கு மிகவும் சக்திவாய்ந்த நினைவாற்றல் கொண்டுது தானே மக்களே.
