வானத்து தேவதையை இப்படி பூமியில் கிடத்தியது யார். அல்லிக்கொடியே
உன் செந்தாமரை முகம் ஏனடி வாடியது. செவ்வரியோடிய உன் பங்கயற் கண் மலர்களில் என் உயிர் வரை ஊடுருவும் கருப்பு வைரப் பூக்களை காண எனக்கு இந்த ஒரு ஜென்மம் போதாதேடி
வெண்சங்கு புஷ்பக் கழுத்திலும்
சந்தனபூவின் தோள்களிலும் என்தலை சாய்ந்தால் அந்த நொடியே மரணதேவன் என்னை கொண்டு போனாலும் போகட்டும். தாமரை மொட்டுகளும் ஆலிலை கண்ணனே மயங்கும் இடையும் மடல் வாழை கால்களும் சந்தன மரத்தில் கடைந்த செம்பஞ்சு பாதங்கள் பிரம்மனின் அற்புதமடி
இத்தனை வண்ணமலர்கள் ஒரே கொடியிலா !!!!
என் மனம் எப்போது வீழ்ந்தது உன்னிடம் நீ என்னைப் பார்த்த அந்த நொடியிலா !!!
2. விண்ணகத்து தேவதை

சூரியனிலிருந்து வந்து என்னைச்சுண்டி இழுக்கும் சூரியையா நீ
வெண்ணிலவிலிருந்து வீழ்ந்த வெள்ளிப் பூவா நீ
செவ்வாயிலிருந்து வந்த சௌந்தர்யமா நீ
புதனிலிருந்து புறப்பட்ட என் பொக்கிஷமா நீ
ஜூபிடரிலிருந்து வந்திறங்கிய ஜூஜூலிப்பாவா நீ
புளுட்டோவிலிருந்து புரண்ட பனிப்பூவா நீ
யாரடி நீ மோகினி
என் மனதைக் கொள்ளை கொண்ட
என் விண்ணுலகத் தேவதையே
வாயைத் திறந்து ஒர் சொல் சொல்லடி இன்பவல்லியே.
கோமகள் குமுதா