தோள்மேல மார்மேல தூக்கி வளர்த்த உசுரான அப்பாவே போய் வரவா
அடுக்கு மல்லிப்பூ தச்சு
தாழம்பு சேர்த்து வச்சு
பின்னல் சடை போட்டு
அழகு பார்க்கும் அம்மாவே போய் வரவா
அடிச்சாலும் புடிச்சாலும் நானழுத கூட அழும் அண்ணே நான் போய் வரவா
குறுந்தாடி வச்சிருக்க
குட்டித் தம்பி உன்னைவிட்டு
ஆட்டுத்தாடி வச்சிருக்க
ஆசைமாமானோட போய் வரவா
வயித்துவலியாலே மாசாமாசம் அழுதபோதெல்லாம் மடியிலே சாச்சுகிட்டு
அடிவயித்திலே விளக்கெண்ணை விடிய விடிய தேச்சு என்னைத் தடவித்தடவி
தூங்க வச்ச என் ஆசை அப்பத்தாவே உன்னையும் விட்டு நான் போய் வரவா
வாசலிலே பூக்கோலம் போட்டு வைக்கும் பவளமல்லி மரக்கன்னே போய் வரவா
கல்லாலே அடிச்சாலும்
கறிசோறு போட்டாலும் கால நேரம் பார்க்காம காவலாக வருவியே சுருட்டை வாலு முனிக்கருப்பா போய் வரவா
பல்லாங்குழியும் பாப்பா நொண்டியும் நிதமும் விளையாடி சலிக்காத
தோழிமாரே போய் வரவா
ஆடுமாடு கோழிகுஞ்சே உங்களை பட்டியிலே பார்த்து அடைக்க இனி யாருமில்லே நான்
புருசன் வீடு போய் வரவா
பொண்ணும் நெல்லுநாத்துப் போல பொறந்த இடம் ஒன்னும்
பொழைக்க இடம் ஒன்னும் ரெண்டாச்சே எஞ்சாமி.
கோமகள் குமுதா