ஷகுரா அத்தியாயம்–3

இரண்டு நாட்களாக எதுவும் செய்யாமல் தன் நினைவுகளை அசை போட்டபடி வீட்டிலேயே படுத்து முடங்கி கிடந்தாள் ஷகுரா. அசை போட்ட நினைவுகள் மனத்திரையில் காட்சிகளாய்  விரிந்து ஒவ்வொன்றாய் ஓட அந்த வயதான  குழந்தைகள் காப்பகத்தின் காப்பாளரான ஷியன்சியை  தன் கைப்பேசியில் அழைத்தாள் ஷகுரா. ” சொல் என் அன்பு மகளே ஷகு டார்லிங்.  செர்ரி மலர்களைப் பார்த்ததும் எனக்கு உன் நினைவாகவே இருக்கிறது. இந்த அழகான மலர்களைப் போல் என் செல்லக் குழந்தை எவ்வளவு அழகாக வளர்ந்து விட்டாய் . உன் குரலைக் கேட்டால் எனக்கு நான் வணங்கும்  இறைவனே என்னோடு உரையாடுவதாக எண்ணி மகிழ்கிறேன். பல நூறாண்டுகள் நீ மகிழ்ச்சியோடு வாழ என் அன்பான வாழ்த்துகள் டார்லிங்” என்று அந்த தள்ளாத வயதிலும் தான் அழைத்ததும் தன்னோடு பரிவாகப் பேசி அன்பைப் பொழியும்  ஷியன்சி ஷகுராவிற்கு  கிடைத்த இன்னொரு தாய்  என்றால் அது மிகையாகாது.

பெற்ற தாய் சூயி அகாலமாக தன்னை விட்டுப் பிரிந்து சென்ற போது திக்குத் தெரியாமல் யாரும் இல்லாமல் தனியாக ஏதும் அறியாமல் அழுது அரற்றிய போது தனக்கு இறைவன் அனுப்பிய  அம்மா ஷியன்சி.  எப்பொழுதும் எங்கு சென்றாலும் தோளில் தூக்கிச் சென்ற தன்னைப் பெற்ற  தந்தை ருன்யுவின் முகம் நினைவில் வரும் பொழுதெல்லாம் தன் கரம் பிடித்து “என்னோடு என் வீட்டிற்கு வருகிறாயா மகளே” என்று முதன்முதலாக காப்பகத்தில் பார்த்ததும் பிரியமாக அழைத்த வளர்ப்புத் தந்தை முங்ஷியின் அன்பில் தன்னைப் பெற்ற தந்தை ருன்யுவின் சாயலைக் கண்டாள் ஷகுரா. காப்பகத்திலிருந்து தன்னை அழைத்து வந்த  நாளிலிருந்து இன்று வரை தன் மீது அளவற்ற அன்பைப் பொழிந்து அவளுக்குத் தேவையான கல்வி, உணவு, உடை, பாதுகாப்பு  அனைத்தையும் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி பெற்ற தந்தைக்கும் மேலாக பேணி காக்கும் தன் வளர்ப்புத் தந்தை முங்ஷியை எண்ணி மனம் விம்மினாள் ஷகுரா.

உடம்பில் பல உபாதைகள் இருந்தாலும் பல மணி நேரம் நின்று தனக்கு பிடித்த உணவு வகைகளை தன் கையால் சமைத்து தருவதிலும்,  தனக்கு புதிய  உடைகள் தேர்ந்தெடுக்க பல கடைகள் ஏறி இறங்கி பல மணி நேரம் கால் கடுக்க தன்னை அழைத்துக் கொண்டு அலைந்து திரிவதிலும், 13 வயதில் தான் பூப்பெய்தியதை  அறிந்ததும் அடைந்த மகிழ்ச்சியும் நடத்திய கொண்டாட்டங்களையும் எண்ணிய ஷகுரா இறைவனே  தனது வளர்ப்புத் தாய் எமிலியின் உருவத்தில்  அன்னையாக அவதரித்தானோ என்று ஐயம் கொண்டாள். ஒரு கதவை மூடினால் இறைவன்  இன்னொரு கதவைத் திறப்பான் என்ற பொன் மொழிக்கேற்ப எட்டு வயதில் யாரும் இல்லாமல்  நிர்க்கதியாக  நின்றவளுக்கு கிடைத்த அற்புதமான வரம் ஷகுராவின் வளர்ப்பு பெற்றோர்கள் முங்ஷியும் எமிலியும் . காபி குடித்துக் கொண்டு இப்படி பலவாறாக சிந்தித்தபடி சன்னலின் வெளியே செர்ரி மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்த  ஷகுரா  மேசை மீதிருந்த தன் கைபேசி ஒலித்ததைக் கேட்டு ஓடிச் சென்று எடுத்தாள். ” அம்மா நான் உங்களைக் காண அங்கு தான் நம் வீட்டிற்கு  கிளம்பிக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்கள் அழைத்து விட்டிர்கள். இதோ கிளம்பி விட்டேன் மா. இன்னும் பத்து நிமிடத்தில் நான் அங்கு வந்து விடுவேன்” என்று  தன் வளர்ப்புத் தாய் எமிலியோடு பேசிக் கொண்டே  தன் வீட்டைப் பூட்டிச் சாவியை கைப்பையில் போட்டுக் கொண்டு அவள் குடியிருந்த அந்த பத்து தளங்கள் கொண்ட அடுக்ககத்தின் முன் உள்ள சாலை ஓரத்தில் வரிசையாக நின்றிருந்த கார்களில் தன் காரை நோக்கிச் சென்றாள் ஷகுரா.

தான் குடியிருக்கும் புளூ மவுண்டன், 8வது வீதி நாலாவது அவென்யூ விலிருந்து கிளம்பி   தெற்கில் கீழ் நோக்கிச் செல்லும் நேர் பாதையில்  சென்று  வலது புறமாக திரும்பினால் ஃபிரேசர் ஆற்றை நோக்கிச் செல்லும் பாதையில் இரண்டு வீதி தள்ளி பத்தாவது வீதியில் எட்டாவது அவென்யூவில் ஆற்றின் கரையோரம் உள்ள  15 தளங்கள் கொண்ட ஸ்கை வியூ அடுக்ககத்தில்  பத்தாவது தளத்தில் அந்த தளம் முழுதையும்  விலைக்கு வாங்கி  நான்கு படுக்கை அறைகள்,  வரவேற்பறை, நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை, எட்டு பேர் அமர்ந்து சாப்பிட வசதியான சாப்பாட்டு அறை  குளிக்க தண்ணீர் தொட்டி , துணி துவைக்க தானியங்கி இயந்திரங்கள்  கூடிய குளியலறைகள்,  தனித்தனியாக கழிப்பறைகள்   என்று எல்லா வசதிகளும் கொண்ட பெரிய தனி வீடாக மாற்றி அமைத்திருந்தார் முங்ஷி.  இது தவிர ஆற்றின் கரையில்  ஆற்றைப் பார்த்துக் கொண்டே சாப்பிட, மது பானங்கள் அருந்த, சாப்பிட வருபவர்கள் இசையுடன்  நடனமாடவும்  வசதிகள் செய்யப்பட்டிருந்த,  தட்ப வெட்ப நிலைக்கேற்ப சூடாகவோ குளிர்ச்சியாகவோ மாற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்ட    பெரிய உணவகமும் முங்ஷிக்கு சொந்தமாக  இருந்தது . மகள் ஷகுரா விரும்பிய  ஹோட்டல் மேனேஜ்மென்ட்  படிப்பை  கனடாவில்  விக்டோரியா மாகாணத்தில் இருந்த புகழ்மிக்க பல்கலைக்கழகமான ராயல் ரோட்ஸில் படிக்க வைத்தார். அவளுக்கென்று தனியாக ஒரு உணவு விடுதியை விலைக்கு வாங்கி கொடுக்கவும் விரும்பினார். ஆனால் ஷகுரா தந்தையிடம்  தனியாக உணவகம் நடத்துவதற்கு முன் தான் அதில் வேலை செய்து வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள விரும்பினாள். அதனால் தன் தந்தை நடத்தி வந்த பெரிய உணவகத்தில் தனக்கும் ஏதாவது ஒரு  வேலை  தருமாறு அவரை வேண்டினாள். முங்ஷி அவள் விரும்பியபடி வேலை செய்து வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளட்டும் என்று உடனே அனுமதியளித்தார்.  தன் பட்டப் படிப்பு முடிய 21 வயது வரை பெற்றோர்களுடன் ஒரே வீட்டில் வசித்த  ஷகுரா வேலை பார்க்க ஆரம்பித்ததும்  அந்த நாட்டு மக்கள்  வழக்கப்படி தனக்கென்று ஒரு வாடகை வீட்டையும் போக வர கார் ஒன்றையும் வங்கிக் கடனில் வாங்கி கொண்டாள். தங்கள் செல்ல மகளின் முடிவுகளை அந்த வளர்ப்பு பெற்றோர்கள் அவள் தங்களை விட்டு பிரிந்து செல்வதை நினைத்து மனதில் வருந்தினாலும்  தடையேதும் கூறாமல்  அவள் விருப்பத்திற்கு மதிப்பளித்தார்கள்.

ஆனால் கூடுமானவரை வார விடுமுறை நாட்களில்  நேரத்தை தங்களோடு சேர்ந்து கழிக்க மகளை வற்புறுத்தினர். ஷகுராவும் அவர்களுடன் வார விடுமுறை நாட்களில் பெரும்பாலான நேரத்தை அவர்களோடு சேர்ந்து கொண்டாடி தானும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்வித்தாள்.

தொடரும்…..

2 thoughts on “ஷகுரா அத்தியாயம்–3

  1. அருமையான கதை நகர்த்தல் சகோ..!
    உலகத்தில் யாரும் தனிமையில் இல்லை, எதுவோ எதனோடோ எதைச் சார்ந்தோ தான் நம் வாழ்க்கை.!
    பாராட்டுகளும்,
    வாழ்த்துகளும்.🌹

    Liked by 2 people

    1. ஆமாங்க சகோதரர். உங்கள் வாழ்த்துகள் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது. பேரன்பும் நன்றியும் சகோதரர்.

      Liked by 1 person

Leave a comment