ஷகுரா அத்தியாயம்–4

ஷகுரா வாரத்தில் ஐந்து நாட்களும் உணவகத்தில் எல்லா பிரிவிகளிலும் அடிப்படை வேலையிலிருந்து சமைப்பது ஒன்றைத் தவிர மேற்பார்வை, நிர்வாகம் அன்றன்று தயாரிக்கப்படும் உணவு வகைகள் அதற்கு வேண்டிய பொருட்களை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்குவது மது பானங்கள் குறையக் குறைய கையிருப்பில்  வாங்கி வைப்பது பதார்த்தங்களின் சுவையும் தரமும் பரிசோதிப்பது, உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை வரவேற்று முன்பதிவு செய்திருந்தால் அந்த மேசையில் அமர்த்துவது, முன் பதிவு செய்யாமல் வருபவர்களுக்கும் இடமிருந்தால் உடனடியாக அமரவைப்பது, அல்லது சிறிது நேரம் ஏதாவது குளிர் பானங்களோ மது பானங்களோ அருந்துபவராயின் அதற்கென தனியாக இருக்கும் இருக்கைகளில் அமரவைப்பது, பணம் செலுத்துவதில் ஏதேனும் தவறுகளிலிருந்தாலோ வாடிக்கையாளர்கள் குறை கூறினாலோ சரிசெய்து தருவது, இசைக்குழுக்களை ஏற்பாடு செய்வது , பணியாளர்களை நிர்வகிப்பது , நிதி நிர்வாகம்  மேலும் உணவகத்தை தினமும் துப்புரவாகச் சுத்தம் செய்து மலர்குவளைகளை தினமும் மாற்றுவது இப்படி எல்லா பிரிவுகளிலும்  வேலையை பட்டப்படிப்பு முடிந்து கடந்த ஆறு மாதங்களாக திறம்பட செய்து வந்தாள் ஷகுரா. தன் மகளின் சுறுசுறுப்பையும் கடின உழைப்பையும் அவள் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் பாங்கையும் பார்த்து பார்த்து ரசித்தார் தந்தை முங்ஷி. ஆனால்  பணியிடத்தில் அவள் தனக்கு  விதித்த இரண்டு கட்டுப்பாடுகள் மட்டும் முங்ஷிக்கு அறவே பிடிக்கவில்லை. உணவகத்தில் வேலை நேரத்தில் மட்டும் எல்லா பணியாளர்களையும் போல ஷகுரா தன் தந்தையை சார் என்று அழைத்ததும் தான் அவருடைய மகள் என்று மற்ற பணியாளர்களுக்கு தெரியக் கூடாது என்றும் ஷகுரா தடை விதித்த இந்த கட்டுப்பாடுகள் தான் முங்ஷிக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் இருந்தால் தான் மற்ற பணியாளர்கள் தன்னிடம் ஏதும் வேறுபாடின்றி பழகுவார்கள். மேலும் அவர்களுக்கு நிர்வாகத்தின் மேல் குறையோ கோபமோ எதுவென்றாலும் சக பணியாளான  தன்னிடமும் பகிர்ந்து கொள்வார்கள். அது நமது நிறுவனத்திற்கும் நன்மை பயக்கும் என்ற நியாயமான காரணத்தை ஷகுரா கூறியதும் அவள் தந்தையால் அவளுடைய கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்க இயலவில்லை. அதனால் அந்த உணவகத்தில் வேலை செய்த யாருக்கும் ஷகுரா தான் முங்ஷியின் மகள் என்பது தெரியாது.

இடையில் எமிலிக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு இரண்டு மாதங்களாக ஷகுரா  தன் அம்மாவை தினமும் மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்று பின்னர் அம்மாவுக்குத் தேவையான ஆகாரம் ,மருந்து கொடுத்து வீட்டில் விட்டு விட்டு  இங்கு உணவகத்தில் வாடிக்கையாளர்கள்  அதிகமாக வரும் மாலை நேரத்திலிருந்து இரவு வரை சுறுசுறுப்பாக இயங்கி பின்னர் உணவகத்தை சுத்தம் செய்து , அடுத்த நாள் தயாரிக்கப்படும் உணவு வகைகளை முன்னரே பெரிய அட்டையில் எழுதி , அதற்கு வேண்டிய பொருட்களை பட்டியலிட்டு   வாங்கி வர பணத்தையும் பணியாட்களையும் ஏற்பாடு செய்து விட்டு தினமும் அவள்  இரவு வீடு செல்ல நள்ளிரவு ஒரு மணி ஆவதை எண்ணி முங்ஷி  கவலையடைந்தார். தன்  மகள் ஒற்றையாளாக சிரமப்படுவதைக் கண்டு மனம் தாளாமல் இன்னொரு உதவி மேலாளரை பணியமர்த்த முங்ஷி  முடிவு செய்து உணவக வேலைக்கு பணியாட்களை நியமிக்கும் ஏஜென்சியிடம் தனக்கு  உணவக வேலைகளில் நல்ல அனுபவமுள்ள ஒரு உதவி மேலாளர் வேண்டும் என்று கடந்த வாரம்  தெரிவித்திருந்தார். அவர்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வராததால் அதை எண்ணியபடி தன் காரை மெதுவாக ஓட்டிக் கொண்டு இரவு வீட்டிற்கு சென்ற போது நள்ளிரவு மணி 1:10 ஆகியிருந்தது.  மதியம் 12:30 மணிக்கு வந்து இன்னும் உணவகத்தில் இருக்கும் தன் மகள் வேலை முடிந்து கிளம்பவில்லை என்பதை எண்ணி மீண்டும்  கவலை கொண்டார்.

உள்ளே வரும் போதே வாடிய முகத்துடன் வந்த தன் கணவனைப் பார்த்து “என்னாயிற்று  முங்ஷி.  ஏன் இப்படி அழுது வடிகிறாய்? என்று கேட்ட தன் மனைவியைப் பார்த்து “இன்று மருத்துவர் என்ன கூறினார்? உன் உடல்நிலை எப்படி இருக்கிறது? என்ன சாப்பிட்டாய்? மருந்து சாப்பிட்டாயா பேபி? ” என்று  தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அடுக்கடுக்காக தன்னிடம் கேள்விகள் கேட்ட அன்புக்கணவனைப் பார்த்து கண்ணடித்து சிரித்தபடி”  ஏய் எனக்கு ஏதாவது ஆனால் இரண்டாவதாக அழகாக ஒரு சின்னப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கனவு காணதே டியர். நான் இப்போதைக்கு உன்னை விட்டுச் செல்வதாக இல்லை” என்று கவலையாக இருந்த தன்  கணவனை உற்சாகப் படுத்த சிரித்தபடி பேசினாள் எமிலி. ” “ஆஹா என் வாய்ப்பு பறிபோனதே! இந்த எமிலிப் பெண்ணிடமிருந்து எனக்கு விடுதலையே இல்லையா? இறைவா இது நியாயமா? என்று கைகளைத் தூக்கி அபிநயத்துடன் பேசிய முங்ஷியைப் பார்த்து வாய்விட்டு சிரித்தாள் எமிலி.

தொடரும்……

2 thoughts on “ஷகுரா அத்தியாயம்–4

  1. சிறப்பாக கதையை நகர்த்துறீங்க சகோ.
    ஷகுராவுக்கு கிடைக்கும் மாப்பிள்ளையால் இனி உணவு விடுதி வேலைப்பளு சற்று குறையும் என்று எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.☺🌹

    Liked by 2 people

Leave a reply to vk1906 Cancel reply